Tuesday 29 September 2020

தீயில் கருகிய சீதை


இராமாயனம் எரிந்துகொண்டிருக்கிறது.

வானுயர சிலையில் அம்போடு நிற்கும் இராமன்

வால்மீகியைக் கொன்றவர்களைக் 

விசம்தடவிய அம்புகளால் வீழ்த்தியிருக்க வேண்டும்.

அம்போவென நிற்கிறான் ஆதித்யநாத் காலடியில்

அம்னெஸ்டியும் அகன்றுவிட்ட நிலையில்.


மாட்டுக்குப் புல்லறுத்த மனிசா வால்மீகி 

துப்பட்டாவால் இறுக்கப்பட்டபோது என்ன நினைத்தாளோ?

தரதரவென இழுத்துச்சென்றபோது என்ன செய்தாளோ?

ஆதிக்கசாதி ஆணவம் ஆண்குறியில் வழிந்தபோது

அண்ணே! வேணாம்னே என்று எப்படி அழுதாளோ?

நான்கு நாய்களின் வெறிபிடித்த பற்களில் சிக்கியவள் 

என்ன செய்திருக்க முடியும்?

எழுந்துவிடக்கூடாதென்று எலும்பை ஒடித்து

எதுவும் சொல்லக்கூடாதென நாக்கையும் அறுத்த

தேசபக்தர்களிடம் காவல்துறை வாலாட்டிக்கொண்டது.

தாரமாக்க தலைகவிழும் ‘தறு’தலைகள்

தலித் பெண்ணுடம்பில் வீரம் காட்ட மட்டும் 

தலை எழுதே எப்படி?

உலையில் தவழும் உன் தாயும் 

கல்லூரி பயிலும் தங்கையும் பத்திரம்தானே.

படிக்கத்தான் வழியில்லை

மாடு மேய்க்கவுமா?

ஏழைகளிடம் வீரம் காட்டும்

உன்னைப்போன்ற இழிபிறவி அவன் அல்லவே.

எதில் நீ உயர்ந்திருக்கிறாய் 

உச்சத்தில் உன்னை வைத்துக்கொள்ள?


கத்தி கொண்டு ‘ஜெய்ஸ்ரீராம்’ கத்திக்கொள்ளும்

ராமராஜ்யத்தில் சீதைகள் பாவம்.

இராவணபூமியில்தான் அவளுக்கு நிம்மதிபோலும்.


செய்தி: கடந்த வாரம் உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட19 வயது தலித் பெண்.


Tuesday 21 July 2020

எல்லை தாண்டு

வேசியாகவோ தாசியாகவோ பார்ப்பது வேதனை
அது ஆண்டாளாகட்டும்
மகதலா மரியாவாகட்டும்.
கடவுளைக் காதலிப்பது எவ்வளவு அபத்தம்
திருஅவையும் பெரியாழ்வாரும் ஒன்றுதான்.
“என்னை அன்பு செய்கிறாயா?” 
என்று கேட்டபோது பேதுரு பதறினார்.
“என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே”
ஆண்டவரே பதறிப்போனார்.
எல்லை தாண்டிய தீவிரவாதம் அது.
சாதி தாண்டி காதலித்தாலே
சங்கருக்கும் சனியன்கள் நாம்.
சங்கர் ‘பாவம்’, பெரும்பாவம்.
வந்தேறி வைதீகத்தின் வரையறையில்
‘யாவரும் கேளிர்’ மரபு மறைந்து போனது
தமிழர் தன்மானம் தளர்ந்து போனது.

அதிகாலையில் அப்போஸ்தலர்களுக்கு முன்பே
ஆண்டவரைத் தேடியாதாலோ என்னவோ
விண்ணகப் பயணம் நாற்பது நாள் தள்ளிப்போனது.
திருப்பாவை, நாச்சியார் திருமொழி போன்ற
மரியாவின் காதல் கவிதைகள்
எப்படித் தொலைந்தனவோ தெரியவில்லை.
ஆண்டாள் அந்த வகையில் பேறுபெற்றவள்.
அரசு சின்னமாகிப்போனாள்.
மரியா சின்னாபின்னமாகிக் கிடக்கிறாள்.
கடவுளையே காதலித்தவளின் பேரன்பு
கற்றுக்கொள்ளப்பட வேண்டியது.
ஆண்டவருக்கான தாசியாக
இருப்பதன் கர்வம் அவளுக்கு இருக்கட்டுமே.

நல்ல பங்கைத் தேர்ந்துகொண்ட 
மகதலா மரயா 
அன்பினால் ஆண்டவரையே ஆண்டாள்.


Sunday 28 June 2020

இப்படியும் இருக்கிறார்கள்

பாய்போ போரிசோவ் - பல்கேரிய பிரதமர்
சர்ச்சுக்கு போகும் அவசரகதியில் 
முகக்கவசம் போடவில்லை.
அதெப்படி பிரதமர் சட்டத்தை மீறலாம்?
அபராதம் 174 டாலர்.
சுகாதாரத்துறை அமைச்சர் சுளுக்கெடுத்திருக்கிறார்.

பென்னிக்ஸ்க்கு மூச்சுத்திணறல்
ஜெயராஜ்க்கு நெஞ்சுவலி
‘பழனி’ பஞ்சாமிர்தம்.
அப்புறம் ஏன்யா அரசு வேலையும் நிவாரணமும்?
செல்லாத்தா உன் புருசன் காய்ச்சல்லதானே செத்தாரு
சிபிஐ விசாரனை கேக்கலாமா?
‘இரட்டை’யர்களிடம் நாம் படும்பாடு இருக்குதே
முடியலடா ‘மொட்டை’ச்சாமி.

Tuesday 9 June 2020

கோயில்கள் திறந்திருக்கின்றன

இந்த ஆண்டு அனைவருக்கும் அற்புதமான ஆண்டு
சனிபகவான் ஜனவரி மாசத்துல பெயர்ச்சியாகிறார்
அவர் தம் சொந்தவீட்டுக்குப்போய் 
ராசிக்கு ஆறாம் இடத்தில உக்காரதுனால
நோய் நொடியெல்லாம் தீரும் என்று குதூகளித்த
குங்குமப்பொட்டுக்காரர் குடும்பத்தோடு எஸ்கேப்.
எல்லா அருளும் வந்து சேரும் என
வாக்குத்தத்தம் சொன்ன அல்லேலூயாக்காரர்
இப்போதெல்லாம் ‘உலகம் அழியப்போகிறது’ என்று
தோசையைத் திருப்பிப் போடுகிறார். 
பகுத்தறிவை அடகு வைத்துவிட்டு
தெருவில் கிடக்கும் கூமுட்டையானோம். 

குருக்களும் கோயிலும் மட்டுமே கிறித்தவம் இல்லை என
ஆண்டவருக்குப்பிறகு கொரோனா
அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
ஆவியிலும் உண்மையிலும் எப்போது வழிபடப் போகிறோம்?
பசியோடிருப்பவர்களை பரிதவிக்கவிட்டுவிட்டு
பகட்டுக்காக ஆலயம் அமைத்தவர்களின் முகத்தில் 
இதயத்தில் ஆலயம் வடித்த பூசலாரின் எச்சில் வடிகிறது.
கல்லுடைப்பவரிடம் கடவுளைப் பார்க்கச் சொன்ன தாகூர்
நூறாண்டுகளாக தாடியைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்.
திருஅவை தம்மைத் திருத்திக்கொள்ளும் நேரமிது.
இனிவரும் காலம் இறந்தகாலம் போல் அல்ல.
குழந்தைப்பருவம் முடிந்தது 
வயதுக்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டன.
பக்குவப்பட்ட இறைநம்பிக்கையோடு 
வாழ்வையே வழிபாடாக்கவேண்டிய கட்டத்தில் நிற்கிறோம்.
படைப்பில் பரமனைத் தரிசிக்காதவருக்கு
பரலோகப்பாதை அடைபட்டுவிட்டது.
எல்லாம் மாறிக்கொண்டிருக்கின்றன.
மாற்றிக்கொள்ள பயப்படுபவர்கள் 
கழுத்தில் மாலையிட்டுக்கொள்ளவும்
மயானம் தயாராகவே இருக்கிறது.

மூட்டை முடிச்சுகளை முதுகில் ஏற்றி
முகம் மறைக்கக்கூட கவசம் இன்றி
வியர்வையும் இரத்தமும் சிந்த
ஆயிரம் மைல்கள் நடந்த அபலைகளில்
ஆண்டவரின் சிலுவைப்பயணம் தெரிந்திருந்தால்
நீயும் பக்குவப்பட்ட கிறிஸ்தவனே.
கோயில்கள் திறந்திருக்கின்றன
அவற்றிற்கு கதவுகளே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

Friday 5 June 2020

கன்னங்கரேருன்னு…

கறுப்பு அசிங்கம் என காலங்காலமாய் புழுகிப்புழுகி
கடவுள் உருவம் ஒன்றுகூட
கறுப்பாய் பார்த்ததில்லை நான்.
கறுப்பும் வெறுப்பும் சேர்ந்தே பயணிக்கின்றன.
வெளுத்தவர் மட்டுமே வாழமுடிகிறது எங்கும்
கறுத்தவர் கடைநிலையினர்தான் இங்கும்.
செவ்விந்தியரின் அமெரிக்காவுக்கு
வெள்ளையர்களும் வந்தேறிகளே.
கறுஞ்சாலையில் காலில் அகப்பட்டு
காவு வாங்கப்பட்டார் ஜார்ஜ் பிளாய்ட்
“மூச்சு முட்டுகிறது” என்று முனகினார்
கத்தினார், கெஞ்சினார், அப்புறம் மூர்ச்சையானார்.
நிறவெறியின் அழுத்தம் காலில் இருந்தது.
எல்லை மீறினால் எதுவும்
வெடித்துச் சிதறும் என்பது விதி.
மொத்த நாடும் பற்றி எரிகிறது. ஆனால்
‘வெள்ளை’மாளிகையின் அதிகாரச்சவுடால் மட்டும்
அவரிடம் வேகவேயில்லை.
இராணுவத் தளபதி மார்க் மில்லி
தெளிவாக இருக்கிறார்.
அவரிடம் குண்டுகள் மட்டுமல்ல
“பந்துகளும்” இருக்கின்றன.

மலப்புரத்தில் கறுப்பு யானை செத்துக்கிடக்கிறது.
புழுக்களிடையே மதத்தைத் தேடுகின்றன
மதம்கொண்ட  காவிக் காட்டுயானைகள்.
அதற்கு முட்டுக்கொடுக்கிற எச்சைகள்
ஆண்மையற்று கிடக்கும் இரட்டை இலைகள்.
வெள்ளையனைவிட வெளுத்த தயிர்க்காரன்
விசம் கொண்டவன் என்றுரைத்த
கறுஞ்சட்டை தாடிக்காரர் ஞானிதான்.
கறுப்பு மட்டுமே வெறுப்பை வீழ்த்த முடியும்.
நீயோ 14 நாட்களில் சிவப்பழகு பெற
ஃபேர் அன்ட் ஹேன்ட்சம் அப்பிக்கொண்டிருக்கிறாய்
‘தாமரை’ ‘இலை’யிலேயே குத்திக்கொண்டிருக்கிறாய்.
நாசமாப்போச்சு எல்லாம்.

செ. ஜெயன்

Thursday 21 May 2020

உண்ட மயக்கத்தில் நான்…


மதிய வெயிலில் உயிர் குடிக்கும்

கருப்பு கங்குகளாக தகித்தது
டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை.
‘கவர்மென்ட் காப்பாற்றும்’ என்பது
எவருக்கும் இல்லை என இவருக்கும் தெரியும்தான்.
ஆனாலும் நப்பாசை.
செத்தாலும் ஊரில்போய் சாவோமே என
பாதி உயிர் போனதும் மீதி உயிரை இறுக்கிப் பிடித்து
ஊர் போய்க்கொண்டிருந்தார்.
“இந்த நாடு இன்னமுமா நம்மள நம்புது?”
வெடித்துச் சிரித்தார் வெண்தாடிச்சித்தர் 
குகையில் பதுங்கி பத்மாசனம் செய்தபடி.  

பசி… கொலைப்பசி.
கொரோனா நீங்க நாம் நோன்பிருக்கலாம்
பலநாள் பசியோடிருப்பவனுக்கு?
ஒறுத்தல் என்பதெல்லாம்
உணவு இருப்பவனுக்குத்தானே.
ஒன்றுமே இல்லாதவனுக்கு என்ன!
வெறுத்துப்போன வாழ்க்கையை
விட்டுவிட விரும்பாமல் விறுவிறுவென்று நடந்தார்.
நடுரோட்டில் ஏதோ கிடந்தது.
உணவு கிடைத்த வேகத்தில்
உள்ளே தள்ளினார்.
எதிரில் வந்தவருக்கு மட்டுமே தெரிந்தது
அது அடிபட்டுக்கிடந்த செத்த நாயென்று.

சாப்பாடா இது? மனுசன் சாப்பிடுவானா?
தூக்கி எறிந்த வார்த்தைகள்
துரத்திக்கொண்டிருக்கின்றன என்னை.
தொப்பையைக் குறைக்க ஓடுகிறேன் நான்.

செ. ஜெயன்.

Thursday 23 April 2020

உலக புத்தக தினம் - (ஏப்ரல் 23)


1931 மார்ச் 23, நிசப்தமான லாகூர் சிறையை
இருள் தின்று மென்றுகொண்டிருந்தது. 
மன்னிப்பு கடிதம் மறுக்கப்பட்டது.
மந்திரம் சொல்லச்சொன்ன தோழனின் வார்த்தை 
முந்திச் சேருமுன்னே வழியில் இறந்தது.
பகத்சிங்கின் கரங்களில் லெனின் தவழ்ந்தார்.
பைத்தியக்காரன் அவன்; அதனால்தான்
பரிபூரண மகிழ்ச்சியில் தொங்கினான்.
பறக்கும் பட்டாம்பூச்சியாய் அல்ல
புத்தகப்புழுவாய் இருப்பதிலும் பெருமைதான்.
புத்தங்களே உலகைப் புரட்டிய நெம்புகோல்.
உலகைச் சீரமைத்த செர்மானிய தாடிக்காரனும்
இந்தியாவைக் கட்டமைத்த கருப்புக் கோட்டுக்காரரும்
புத்தக வாசனையில் குடிபுகுந்தவர்கள்.
“நேரமில்லை” என்பது அறிவிலிகளின் அருள்வாக்கு.
வாரன் பப்ஃபெட் தினசரி 800 பக்கம் 
பில்கேட்ஸ் வருடத்திற்கு 50 புத்தகம்
மார்க் சுக்கர்பெர்க் இரு வாரத்திற்கு ஒரு புத்தகம்
மிகப்பெரும் அதிபர்கள் அதிகம் வாசிப்பவர்கள்.
அதிபராகும் ஆசை மட்டும் போதாது
அதிகம் வாசிக்கும் ஆளுமை தேவை.
அறிவை விரிவுசெய், அகண்டமாக்கு
விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை.

தலைவனுக்கு புத்தகமே தலையணை.


Wednesday 22 April 2020

உலகப் புவி தினம் - பொன்விழா ஆண்டு (1970-2020)

மண் உருண்ட மேல மனுசயப்பய ஆட்டம் பாரு
நெஞ்சுரத்தோடு பாடுகிறேன்.
மனுசப்பய ஆட்டத்தால் மலடாகிப்போனது
மண் மட்டுமல்ல, மனிதனும்தான்.
அழகான உலகம் தந்த ஆண்டவனையே
அசந்தால் ஆட்டையப்போட்டு காசாக்குபவன் 
வளம் கொழிக்கும் புவியையா விட்டுவைப்பான்?
யாதும் ஊரே யாவருங் கேளிர் என 
எல்லையற்று வாழ்ந்த எம் முப்பாட்டன் மனதில்
எள்ளளவும் வஞ்சம் இல்லை.
என்னுடையதென்ற நஞ்சும் இல்லை.
கைப்பிடி மண்ணை உருவாக்க முடியாதெனினும்
கழிவாக்க மட்டுமே கல்வி பயன்பட்டிருக்கிறது
நாசமாய்ப் போகட்டும் நம் கல்விமுறை.
பின்வரும் தலைமுறை பற்றிக் கவலையில்லாதவன்
திருமணம் தவிர்ப்பதே புண்ணியம்.
நிலாவில் புடுங்கியது போதும் 
நிலத்தில் புடுங்குவோம் களையை - நம்
மனத்தில் வளர்த்த பிழையை.
மண் அழுக்கல்ல, அழகு.
நம் தாயும் தாய்நிலமும்
அழுக்காய் இருப்பினும் அழகே.

Monday 20 April 2020

உப்பு போட்டுத்தானே சாப்பிடுகிறோம்!

உப்புக்கான யாத்திரையில் உயிர் இருந்தது.
உறங்கிப்போன எதிர்ப்புக்குரலை உசுப்பிவிட்டது.
தண்டியை அடைந்த கிழவனின் தடி
தடுக்கிவிழுந்தது இன்று
தலையெழுத்து அழிந்துபோன
உள்நாட்டு அகதிகளின்
களைப்புற்ற பயணங்களில்.
கொரோனாவைக் கொன்றுவிட
முடிவெடுத்த முட்டாள் அரசனுக்கு
கொலைப்பட்டினியில் கொத்தாகச் சாவானே எனும்
உண்மை தெரியவில்லை.
ஊர்ஊராக மேஞ்சவனுக்கு எப்படித் தெரியும்?
அடங்கிக்கிடந்தால் அரைவயிறும் நிரம்பாதே
எப்படியாவது ஊர்போய்ச் சேர்ந்தால்
ஒருவேளையாவது உருப்படியாகச் சாப்பிடலாம் என
தேசம் கடக்கும் ஏழையர் எத்தனை பேரோ.
ஒடுங்கிய வயிறை ஆசுவாசப்படுத்தினாள்
அப்படிப்பட்டோரில் ஒருத்தி சிறுமி ஜமோலா.
நூறுமைல் தூரம்… அந்தாப் போயிடலாம் என
அங்குலம் அங்குலமாக நடந்திருப்பாள்.
மாரத்தான் எல்லாம் மானங்கெட்டவனின் விளம்பரம்.
வயிற்றுக்குப் புரியுமா மூளையின் ஆறுதல்?
வழியிலேயே கொன்றுவிட்டோம் நாம்.
பரிசோதித்த டாக்டர் சொன்னார்:
“நல்லவேளை இவளுக்குக் கொரோனா இல்லை.”
அதுசரி! கோரொனாவைக் கொன்ற டாக்டர்களை
செத்தபின்னும் கொல்லும் தேசம்தானே இது.
கைதட்டி விளக்கேற்றி வாழ்த்து தெரிவிப்போம்.

(தெலுங்கானாவில் மிளகாய் பண்ணையில் வேலை செய்த 12 வயது சிறுமி 100 கிலோமீட்டர் தூரம் நடந்து தனது சொந்த ஊரான சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூருக்கு வந்தபோது சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாள். - இன்றைய செய்தி)