Wednesday 5 September 2018

மரியன்னை மீதுள்ள பாரம்பரிய பக்தி முயற்சிகள்



செப்டம்பர் மாதம் என்றாலே எல்லா ஊர்களில் இருக்கும் மாதா கோயில்களிலும் திருவிழா நடைபெறும். குறிப்பாக ஆரோக்கிய மாதா கோயில்கள், கெபிகள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று அந்த பகுதியே களைகட்டிவிடும். நாகப்பட்டினம் அருகே உள்ள வேளாங்கன்னி நகருக்கு நடைபயணம் மேற்கொள்ள மாலையிட்டு, காவி உடுத்தி, விரதம் இருந்து தேர் இழுத்துச்செல்லவும் தயாராகிக்கொண்டிருப்பார்கள். கத்தோலிக்க கிறித்தவர்கள், பிறசபைக் கிறித்தவர்கள், இந்துக்கள், இஸ்லாமியர் என அனைவரும் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு அன்னையின்மீது இவ்வளவு பக்தி எப்படி உருவானது? மொட்டை எடுப்பது, தொட்டில் கட்டுவது, பூட்டு போடுவது, புடவை காணிக்கை கொடுப்பது, மெழுகுதிரி ஏந்தி நடப்பது  போன்ற பரவலான பக்திமுயற்சிகளும்,; காமநாயக்கன்பட்டி பரலோக மாதா திருத்தலத்தில் தேர்முன்பே விழுந்து கும்பிடுசேவை செய்வது போன்ற குறிப்பிட்ட திருத்தலத்துக்கான பாரம்பரிய பக்தி முயற்சிகளும் எப்படிப்பட்டவை?

தமிழ்நாட்டில் கிறித்தவம்

கி.பி முதல் நூற்றாண்டில் புனித தோமையார் வாயிலாக கிறித்தவம் கேரளா மற்றும் தமிழகத்தில் பரப்பப்பட்டாலும்  16ம் நூற்றாண்டில் 1533 அல்லது 1536 வாக்கில் போர்த்துக்கீசியர்களின் துணையுடன் ‘முத்துக்குளித்துறை’ என அழைக்கபட்ட தென்தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியில் அதிக அளவில் பரவியது. கத்தோலிக்கம் தமிழ்நாட்டில் பரவியபோது அதைத் தழுவிக்கொண்டவர்கள் பெரும்பாலும் அடித்தள மக்களே. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினராக விளங்கிய தீண்டத்தகாதோரே. அவர்கள் இந்து மதத்திலிருந்து கிறித்தவத்துக்கு மாறும்போது அவர்கள் வணங்கி வந்த கன்னியாகுமரி பகவதியம்மனின் மேலிருந்த அதே பக்தியை அன்னை மரியாவிடம் காட்ட வேண்டும் என்று விரும்பிய சேசு சபைத் துறவிகள் மரியன்னை பக்தியை வளர்த்தெடுத்தனர். கடற்கரைப் பங்குகளில் மரியன்னை ஆலயங்கள் அதிகமாக இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்துக்கள் இயற்கையாகவே பெண் தெய்வ வழிபாட்டின் முன்னோடிகள். ஆறு, கடல், மலைகளைக்கூட பெண்ணாக உருவகித்து அதற்கான மரியாதையையும் வணக்கத்தையும் செலுத்துபவர்கள். அதனாலேயே அவர்கள் திரும்பவும் இந்து மதத்திற்கு திரும்பிடாமல் இருக்க அவர்களின் வழிபாட்டு முறைகள் சிலவற்றை கிறித்தவத்திலும் புகுத்திக்கொண்டனர் மறைப்பணியாளர்கள். அதன் ஒருபடியாகத்தான் வீரமாமுனிவர் அன்னை மரியாவுக்கு சேலை உடுத்தி பெரிய நாயகி என்று அழைத்து அழகான ஒரு ஆலயத்தையும்  கோனான் குப்பத்தில் 17ம் நூற்றாண்டில் கட்டியெழுப்பினார். பெரிய நாயகி என்ற பெயரே பார்வதி தேவியைக் குறிக்கும் ஒரு சொல்லாடல் ஆகும். இன்றைய நாளில் நாம் கொண்டாடும் ஆரோக்கிய அன்னையும் சேலையுடுத்தி தம்மை வேண்டும் மக்களுக்கு மகத்தான நன்மை செய்துவரும் சூழலில் கிறித்தவர்களின் பாரம்பரிய பக்தி முயற்சிகளைப் பற்றி காண்போம்.

புனிதர் பக்தி முயற்சி

புனிதர்கள் வழிபாடு என்பது அடிப்படை இறையியல் கோட்பாடான இறைவனுக்கு மட்டுமே வழிபாடு என்ற கருத்துக்கு முரணானது. எனவே புனிதர் வழிபாடு என்று கூறாமல் புனிதர் பக்தி முயற்சி என்று கூறுவதே சாலச் சிறந்தது. இந்த பக்தி முயற்சிகளில் புனிதர்கள் வழியாக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம். புனிதர்களின் பெயர்களில் இருக்கும் மன்றாட்டுகளின் இறுதியில் ‘எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்’ என்ற வாக்கியம் இடம்பெறுவதை நாம் அறிவோம். அன்னை மரியாள், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார் போன்றோர்க்கு தமிழக மக்களிடையே மிகுந்த பக்தியும் மரியாதையும் இருக்கிறது. சிறு சந்துகளில்கூட இவர்களின் சுரூபங்கள் தாங்கிய பீடங்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இத்தகைய பக்தி முயற்சிகள் காலத்தால் மிகவும் பிந்தியது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப் பகுதியில் கத்தோலிக்கம் பரவியபோது புனிதர் வழிபாடு அறிமுகமாகவில்லை என்று ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். ஆனால் நாட்டார் தெய்வங்களை (கிராமப்புற சிறு தெய்வங்கள்) வழிபட்டு வந்தவர்களுக்கு தம் புதிய சமய வாழ்வில் இடைவெளி ஏற்பட்டதாகத் தோன்றியது. இதைப்போக்கும் வகையிலேயே புனிதர் பக்தி முயற்சிகள் மறைப்பணியாளர்களால், அறிமுகப்படுத்தப்பட்டன. எடுத்துக்காட்டாக தென் மாவட்டங்களில் சுடலை மாடசாமியின் கூம்பு வடிவக் கோபுரங்கள் எல்லா ஊர்களிலும் காணப்படும். கிறித்தவத்துக்கு மதம் மாறியவர்கள் இயேசுவின் மீதும்  புனிதர்களின் மீதும் பக்தியோடு இருக்க வேண்டும் என்பதற்காக குருசடிகள் கட்டப்பட்டன. அதன்மூலம் அவர்கள் மீண்டும் தாய் மதத்திற்குத் திரும்பாமல் இருக்க முயற்சி செய்யப்பட்டது. 16ம் நூற்றாண்டில் சேசு சபைத் துறவி அண்ட்ரிக் அடிகளார், ஸ்பானிய மொழியில் வெளியிடப்பட்ட புனிதர்களின் வரலாற்றுப் புத்தகமான குடழள ளுயnஉவழசரஅ என்ற புத்தகத்தை தமிழில் அடியார் வரலாறு என்று மொழிபெயர்த்து கி.பி 1586ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் என்ற கிராமத்தில் வெளியிட்டார். அதில் மக்கள் ஏன் அந்தோணியார் பக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு பல காரணங்களைக் குறிப்பிட்டு புனிதரின் பக்தி முயற்சியைப் பரப்பியுள்ளார்.

சில பாரம்பரிய பக்தி முயற்சிகள்:

எந்த ஒரு சமூகம் குறித்த ஆய்விலும் ஒதுக்க முடியாக ஒரு கூறாகப் பண்பாடு என்பது அமைகிறது. பண்பாட்டில் சமய வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கை பற்றிய படிப்பினைகள் அடிப்படையாக அமைகின்றன. ஒரு பண்பாட்டினர் மற்றொரு பண்பாட்டின் சில கூறுகளை உள்வாங்கிக்கொள்வதை ஐnஉரடவரசயவழைn என்று மானிடவியலர் அழைப்பர். நேரடியான அல்லது மறைமுகமான தொடர்புமூலம் தனி நபர் அல்லது குழு இன்னொரு பண்பாட்டுச் சிறப்புப் பண்புகளைப் பெற்றுக்கொள்கிற நடைமுறையே பண்பாட்டு ஏற்றலாகும். கத்தோலிக்க பண்பாட்டுமயமாக்கலில் ‘தத்துவப் போதகர்’ என அழைக்கப்படும் இராபர்ட் டி நொபிலி முக்கியத்துவம் பெறுகிறார். 16ம் நூற்றாண்டிலேயே காவி உடை உடுத்தி, பூணூல் அணிந்து, குடுமி வைத்து, தரையில் அமர்ந்து சைவ உணவை மட்டும் உண்டு பிராமணர்களுக்கு கிறித்தவம் போதித்த சேசு சபை சந்நியாசி அவர். விவிலியத்தை ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்களுக்கு அடுத்த ஐந்தாம் வேதம் என்று விளக்கினார். கி.பி. 1533ல் அன்ட்ரிக் அடிகளார் புதிதாக கிறித்தவம் தழுவியவர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் கிறித்தவப் பெயர்கள் வைக்க வேண்டும் என்றும், இறப்பு வீட்டில் ஒப்பாரி வைத்து அழுவதை நிறுத்தும்படியும் கூறியுள்ளார். மேலும், கொள்ளை நோய் பரவும்போது புனித செபஸ்தியாரையும், காணாமல்போன பொருட்கள் கிடைக்க புனித அந்தோணியாரையும் வேண்டிக்கொள்ளும்படி அறிவுறுத்தியதாக நாம் அறிகிறோம். நாட்டார் வழிபாட்டில் தொற்றுநோய்க்கு மாரியம்மனையும், பேய்விலக சுடலை மாடனையும், காணாமல்போன பொருள் கிடைக்க இசக்கியம்;மனையும் வழிபடுவது தென் மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஒன்றாகும். இவ்வாறு தம் பழைய சமய அடையாளங்களை கைவிடச் செய்தும், புதிய சமய அடையாளங்களை ஏற்றுக்கொள்ளச் செய்தும் தொடக்க கால மறைப்பணியாளர்கள் மறைப்பணியாற்றினர்.
பொங்கல் இடுதல்: இது தமிழர்களிடையே செல்வாக்குப் பெற்ற நிகழ்வாக இன்றுவரை இருக்கிறது. இது எப்போது தோன்றியது என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், மக்களிடையே இதற்கென்று இருந்த செல்வாக்கை உணர்ந்த இராபர்ட் டி நொபிலி கத்தோலிக்கர்கள் தங்களின் வீட்டின்முன் பொங்கலிட அனுமதித்தார். வழிபடும் பக்தன் தன் கையால் சமைத்த உணைவை கடவுளுக்குப் படைப்பதே பொங்கலிடுதல் சடங்கின் நோக்கமாகும். நாட்டார் தெய்வங்களுக்குப் பொங்கலிட்டு வந்த அடித்தள மக்கள், கத்தோலிக்கரான பின்னர் இவ்வுரிமையயை இழந்திருந்தனர். அதை மீண்டும் அவர்களுக்குத் தரும் வழிமுறையாகவே தத்துவப் போதகர் (நொபிலி) பொங்கலிடுவதை அறிமுகப்படுத்தினார் என்று ஆய்வாளர் சிவசுப்பிரமனியன் கூறுகிறார்.

அசனம் அல்லது அன்னதானம் கொடுத்தல்

அசனம் என்பது உணவைக் குறிக்கும். அந்தோணியாருக்கு அசனம் கொடுப்பதாக நேர்ச்சை செய்பவர்கள் அவர் பெயரால் அமைந்துள்ள ஆலயங்களுக்குச் சென்று உயிர்பலி கொடுப்பது பொதுவான வழக்கம். வைதீக சமய நெறியில் ஹோமம், வேள்வி என்ற பெயரில் எரியும் நெருப்பில் உணவு, தானியம், நெய், ஆடை போன்றவற்றைப் போடும் வழக்கம் உண்டு. இம்முறையில் எரியும் பொருட்கள் தேவர்களையும், இறைவனையும் சென்றடைவதாக நம்புகின்றனர். அதற்கு மாற்றாக நாட்டார் வழிபாட்டு மரபில் பலி, படையல் என்பனவற்றில், பலி கொடுக்கப்பட்ட விலங்கின் இறைச்சியையும், படையலாகப் படைக்கப்பட்ட உணவுப் பொருட்களும், மொத்தமாக அழிக்கப்படாமல் பக்தர்களின் பயன்பாட்டுக்கு உரியதாகின்றன. உயிர்ப்பலி என்பது நாட்டார் வழிபாட்டு மரபில் ஒரு முக்கிய  அங்கம். இதைக் கத்தோலிக்கரான அடித்தள மக்கள் இழந்துவிட்ட நிலையில், அதனை ஈடு செய்யும் வழிமுறையாகவே அசனம் அல்லது அன்னதானம் கொடுத்தல் கோயில்களில் நடக்கின்றது. திண்டுக்கல் பகுதியில் உள்ள கோயில்களில் இரவு ஆரம்பித்து அதிகாலை வரை நடக்கும் இத்தகைய விருந்தில் நேர்ச்சையாக கிடைத்த பல நூறு ஆடுகளும், கோழிகளும் பலி கொடுக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உண்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வாக உள்ளது.

உலோக உறுப்புக் காணிக்கை

கை, கால் போன்ற உறுப்புகளில் காயம் ஏற்பட்டாலோ அல்லது முறிவு ஏற்பட்டாலோ அல்லது கண், காது, மூக்கு போன்ற உறுப்புகளில் நோய் ஏதும் ஏற்பட்டாலோ வெள்ளி அல்து பித்தளையால் அந்தந்த உறுப்புகளைச் செய்து காணிக்கை தருவதாக நேர்ந்து கொள்வார்கள். பிள்ளை வரம் வேண்டுபவர்கள், பிள்ளைப்பேறு கிடைத்தால், சிறு தொட்டில் கட்டி விடுவதும் திருமணம் நல்ல முறையில் நடந்தேற மஞ்சள் கயிறு கட்டுவதும் பல திருத்தலங்களில் இருக்கும் பாரம்பரிய பக்தி முயற்சி ஆகும்.

மொட்டையடித்தல், பட்டம் வைத்தல்

திருத்தலங்களுக்குச் சென்று மொட்டையடிப்பது என்பது பலருக்கும் மிக முக்கியமான நேர்ச்சை. வேளாங்கன்னி என்றாலே மொட்டை என்கிற அளவுக்கு பல்வேறு இடங்களில் அத்தகைய கடைகள் இருக்கும். அந்தோணியார் கோயில்களில் நெற்றிப்பகுதிக்குச் சற்று மேலே, ஒரு கயிற்றினைத் தலையைச் சுற்றி வட்டவடிவில் கட்டியதைப்போல முடியானது ஒரே சீராகக் கத்தரித்து விடப்பட்டு, எஞ்சிய தலைப்பகுதி முழுவதும் மொட்டையடிப்பதை ‘பட்டம்’ என்று அழைப்பதுண்டு. புளியம்பட்டி அந்தோணியார் கோயிலில் இது மிகவும் பிரபலமான நேர்ச்சை. இது தவிர ‘வாளி’ என்னும் சிறு தங்க வளையத்தை காதில் அணியும் நேர்ச்சையை ‘வாளிபூருதல்’ என அழைக்கின்றனர். இதை இராயப்பர் வாளி என்றும் அழைப்பர். தென் கடற்கரை மாவட்டங்களில் ஆண் குழந்தைகளிடையே மிகவும் வழக்கமான பக்தி முயற்சி. சில குழந்தைகளுக்கு மூக்கில்கூட இத்தகைய அணிகள் அணிவது உண்டு.

பிற காணிக்கைப் பொருட்கள்

உப்பு, மிளகு இரண்டையும் கலந்து நேர்ச்சைப் பொருளாகப் புனிதர் முன் ஓலைப்பெட்டியில் காணிக்கையாக வைக்கும் பழக்கமும் உண்டு. இதிலிருந்து சிறிதளவு எடுத்துவந்து வீட்டில் வைத்து பாதுகாப்பதும், வாயில் போட்டுக்கொள்வதும் கத்தோலிக்க கிறித்தவர்களின் நம்பிக்கை. வயலி;ல் தூவினால் பயிர் நன்கு செழித்து வளரும் என்பதும் சிலரின் நம்பிக்கை. கிராமப்புறங்களில் தேர் உலா வரும்போது தேர்களில் உப்பு கொட்டுவதும், அல்லது பருத்தி, மிளகாய் போன்ற வேளாண் விளை பொருட்களை வீசியெறிவதும் இன்றும் நிகழ்கிறது. சில பாரம்பரிய கிராமங்களில் திருவிழாவின்போது குழந்தைப்பேறு அல்லது குழந்தைகளுக்கு நல்ல உடல்நலம் வேண்டி ஒரு கட்டுக் கரும்பின் நடுவே தொட்டிகட்டி அதைக் கணவனும் மனைவியும் சுமந்தவாறு தேவாலயத்தை வலம் வருவது இன்றும் நம் மனங்களை சிலிர்க்க வைக்கும் பக்தி முயற்சிகளாக இருக்கின்றன.

மடிப்பிச்சையெடுத்தல்

குழந்தைப்பேறு வாய்க்கப்பெறாத பெண்கள் அல்லது நல்லமுறையில் திருமணம் நிறைவேற பெண்கள், பாத்திரம், கூடை போன்ற எந்த பொருளும் இல்லாமல், தாம் கட்டியிருக்கும் சேலையின் முந்தானையை விரித்து அதில் காசு அல்லது அரிசியைப் பிச்சையாக ஏற்பதே மடிப்பிச்சையாகும். இச்சடங்குகளில் ஒரு பெண் தன்னைப் பிச்சை எடுப்பவரின் நிலைக்குத் தாழ்த்திக்கொள்கிறார். இது இறைவன் முன்பு தன்னைத் தாழ்த்திக்கொள்வதற்கான குறியீடு ஆகும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அந்தோணியாருக்கு மடிப்பிச்சை எடுப்பதாக நேர்ச்சை செய்து கொள்ளும் பழக்கம் முன்னர் பரவலாக இருந்துள்ளது.

தேர் எடுத்தல்

தேர் எடுப்பதும் கொடியேற்றுவதும் தமிழக பண்பாட்டு நிகழ்வுகளாக உள்ளன. இந்துக் கோயில்களில் திருவிழாவுக்கு ஆரம்பிக்கும் முதல்நாளில் காப்புக் கட்டுவது வழக்கமாக உள்ளது. இதன்படி ஊர் எல்லைகளில் மாவிலை, வேப்பிலை கொண்டு தோரணம் கட்டி திருவிழா ஆரம்பிப்பதை உணர்த்துவார்கள். இறுதிநாளில் தெய்வம் தாங்கிய தேரை வீதிகளில் இழுத்துவருவது இறைவனின் பாதுகாப்பை கிராமம் முழுவதும் உறுதிசெய்யும் நிகழ்வாக அமையும். அது போலவே கொடியேற்றும் பழக்கம் கிறித்தவரிடையே உள்ளது. வட மாநிலங்களில் இது போன்ற நிகழ்வுகள் கத்தோலிக்க கிறித்தவரிடையே இருப்பது கிடையாது. கொடியேற்றம் திருவிழாவுக்கு முதல்நாள் நடக்கிற ஒன்றாக இருக்கிறது. வேளாங்கன்னி கொடியேற்ற நிகழ்விற்காகவே நடந்து செல்லும் பக்தர்கள் ஆயிரம் ஆயிரம். ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே உம் திருக்கொடி வானில் பறக்குதம்மா என்ற வார்த்தைகள் பாடல் வழியாக நம் இதயத்தைத் தொடும்போது கண்கள் கலங்க ஆரம்பித்து அன்னையில் நினைவை கொண்டு வருகிறது. வீரமாமுனிவர் 17ம் நூற்றாண்டில் முதன்முதலாக அன்னை மரியாளுக்கு தேர் எடுத்ததும், அந்த தேரானது இன்னும் திருநெல்வேலி அருகே உள்ள காம நாயக்கன்பட்டியில் இருப்பதும் வரலாறு. தேர் இல்லாமல் திருவிழாவே கிடையாது என்கிற அளவுக்கு தேர் நமது சமய வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது.

இவ்வாறு தமிழக அடித்தள மக்களின் வழிபாட்டு நெறி கத்தோலிக்கக் கிறித்தவத்தில் ஊடுருவி நிலைத்துள்ளது. மதமாற்றத்திற்கு முன்பு இருந்த சமய நெறிகாட்டு நிகழ்வுகளை மதம் மாறியபின்பு அதற்கேற்ப மாற்றிக்கொண்டு இன்றும் கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் ஏராளம்.  ஆனால் சாதியமும், தீண்டாமையும் இத்தகைய பக்திமுயற்சிகளோடு கத்தோலிக்கத்துக்குள் நுழைந்து இன்றுவரை அகற்ற முடியாத அளவுக்கு வேரூன்றியிருப்பதும் வேதனைக்குறியதும், வெட்கத்துக்குறியதும் ஆகும்.
பாரம்பரிய பக்தி முயற்சிகளின் முக்கியத்துவம்.
இந்திய நாடு பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களையும் பல்வேறு இன, மொழி கலாச்சாரப் பின்னணி உடையவர்களாகவும் இருக்கின்றனர். ஒரே சமூகத்தில்கூட இத்தகைய வேறுபாடுகள் இருப்பது மிக இயல்பான ஒன்று. இத்தகைய சூழலில் பாரம்பரிய பக்தி முயற்சிகள் மற்ற மதத்தினரோடு இனக்கமான சூழலை உருவாக்கக்கூடிய வாய்ப்பைத் தருகிறது. பாரம்பரிய பக்தி முயற்சிகள் பல்சமய உரையாடலை இன்னும் வளப்படுத்த உதவியாக இருக்கும் என்று பேராசிரியர் ஜேம்ஸ் பொன்னையா கூறுகிறார். நிறைய நேரங்களில் மற்ற மதத்தோடு உரையாட வரும்போது முக்கியமான கோட்பாடுகளைப் பற்றி அலசலாக மட்டுமே இருப்பதால், பல்சமய உரையாடல்கள் சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிடுகிறது. சாமானியர் தங்களின் அன்றாட வாழ்வில் அடுத்த சமயத்தினரோடு அன்யோன்யமாக பழகி வாழ்வதை நாம் பார்க்கிறோம். அதுவே நமது அனுபவமும்கூட. அப்படியிருக்கையில் சாதாரண மக்களின் பக்தி முயற்சிகள் நிச்சயம் மற்ற சமயத்தினரைப் பற்றிய நல்லெண்ணத்தை வளர்க்கும் என்பதில் ஐயமில்லை.

வேளாங்கன்னிக்குச் செல்வோம்:

யாரு மொட்டையடிப்பது? யாரெல்லாம் மெழுகுதிரி வாங்கி முட்டிபோட்டு செபிப்பது? யார் பழைய கோயிலிலிருந்து மாதாகுளம் வரை இரத்தம் வழிய முழங்காளிட்டு செல்வது? யார் புனிதப்படுத்தப்பட்ட தீர்த்தம், எண்ணெய் வாங்குவது? யார் கொடி மரத்தில் தாலிக்கயிறு கட்டுவது? தொட்டில் கட்டுவடுது? பூட்டு போடுவது? யார் வெள்ளி உடல் உறுப்புகளைக் காணிக்கையிடுவது? பல நூறு மைல்கள் கால் வலிக்க நடந்து வருவதும், அன்னையின் பாடல் பாடிக்கொண்டே தேர் இழுத்து வருவதும் யார்? இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும். அவர்கள் பெரும்பாலும் எளியவர்கள், ஏழைகள், அடித்தட்டு மக்கள். பாரம்பரிய பண்பாட்டுக் கலாச்சாரங்களை சமய வழிபாடுகளிலும் தொடர்ந்து கடைபிடித்துவரும் சாமானியர் அவர்கள்.
தங்களை மேதாவிகள் என்று நினைத்துக்கொள்பவர்களுக்கு மேற்சொன்ன காரியங்கள் மூட நம்பிக்கையாகத் தோன்றலாம், இழிவானதாகத் தெரியலாம், சரியான சமய அறிவு இல்லாதவர்களின் செயல்பாடுகள் என விளக்கமளிக்கலாம். ஆனால் சாமானியர்களின் இறைப்பற்றை வளர்த்தெடுப்பதில் இத்தகைய பக்திமுயற்சிகள் முதன்மையானதாக இருக்கிறதென்றால் அது மிகையல்ல. வேளாங்கன்னித் திருவிழாவைப் பார்க்கும் வெளிநாட்டவர் கொடியேற்றுவதும், தேர் இழுப்பதும், சுருபங்களை அலங்கரித்து குறிப்பாக அன்னையின் சுருபத்தை சேலை கட்டி அலங்கரிப்பது, அலங்கார குடை பிடிப்பது போன்றவை இது இந்துத் திருவிழாவா இல்லை கிறித்தவத் திருவிழாவா என சந்தேகத்தை வரவழைக்கலாம். இவையெல்லாமே பண்பாட்டுக்கூறுகள்.
வேளாங்கன்னிக்கு திருயாத்திரை செல்பவர்கள், நாகூர் தர்காவுக்குச் செல்வதும், அருகில் உள்ள இந்து ஆலயங்களுக்குச் செல்வதும் மிக சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. இத்தகைய நிகழ்வுகள் இன்னொரு மனிதரை இறைநம்பிக்கையாளராக மட்டுமே பார்க்கிறதேயொழிய அந்நியராகப் பார்ப்பது கிடையாது. இவை மற்ற மதத்தினரையும் தம்மோடு இறைவனின் பாதம் பயணிக்கும் சக பயணியாக, இறையருள் கிடைக்க மன்றாடும் மற்றொரு மனிதனாக, தம் சகோதர சகோதரியாக மட்டும்  பார்க்கிறது. இவை மற்ற மதங்களைப் பற்றிய பார்வையையும் விசாலமாக்குகிறது. பல்சமய உரையாடலை படித்தவர்களைவிட, யைத்தில் இருப்பவர்களைவிட விளிம்பு நிலையினரிடமும் சாமானியர்களிடம் வளர்க்கிறது.

இறைநம்பிக்கைக் குறியீடுகள்

பாரம்பரிய பக்தி முயற்சிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அதிகாரப்பீடம் அறிவித்தவை என்பதைவிட ஒரு குறிப்பிட்ட பகுதி சாதாரண மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரக் கூறுகள் நிறைந்த இறைநம்பிக்கையை வளர்த்தெடுக்கும் செயல்பாடுகள் என்பதுதான் உண்மையாகும். இவை உலகெங்கும் இருக்கும் அனைத்து சமய மக்களிடமும் காணப்படும் இயல்பான ஒன்றாகும்.
கிறித்தவ பக்தி முயற்சிகளின் வரலாற்றைப் பார்க்கும்போது, தொடக்க காலக் கிறித்தவர்கள் மறைசாட்சியாக மரித்தவர்களின் கல்லறைக்குச் சென்று வணக்கம் செலுத்தியதாக குறிப்புகள் உள்ளன. கி.பி நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோமைப் பேரரசர் கான்ஸ்டன்டைனின் தாயார் புனித ஹெலன் பெத்லகேமில் ஆண்டவர் இயேசு பிறந்த இடத்தை மிக அற்புதமாக அலங்கரித்து கோயில் கட்டிய பிறகுதான் அது மிகப் பிரபலமான திருத்தலமாக மாறியது. அன்னை மரியா மீது திருச்சபையின் பக்தி முயற்சிகள் கி.பி 9ம் நூற்றாண்டில் நடந்த எபேசு சங்கக் கூட்டத்திற்குப் பிறகு பெருக ஆரம்பித்தன.

எல்லை மீறாதவரை நல்லதே

திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல், பாரம்பரிய பக்தி முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது “உயிரோடு இருக்கும் ஆண்டவரைச் மிகந்த நம்பிக்கையோடு சந்திக்க இத்தகைய பாரம்பரிய பக்தி முயற்சிகள் எளிய மக்களுக்குப் பயன்படுகின்றன” என்கிறார். ஆனால் இத்தகைய பக்தி முயற்சிகள் கைமீறிப் போய்விடாமல் பார்த்துக்கொள்வதும் திருச்சபையின் கடமையாகும். பக்தி முறைகளுக்கான திருச்சபையின் ஒழுங்கு முறையில் (வுhந னுசைநஉவழசல ழn Pழிரடயச னுநஎழவழைளெ யனெ டுவைரசபல) இத்தகைய பக்தி முயற்சிகளைப் பற்றிய புரிதலை மறைக்கல்வியின் மூலமாக தெளிவுபடுத்த வேண்டும். சாதாரண மக்களின் மனக்குழப்பத்தைப் போக்குவதற்கு ஆற்றுப்படுத்துதல் மையம் திருத்தலங்களில் செயல்பட வேண்டும். ஆன்மிகத்தைப் பற்றிய அறிவு மறையுரைகளிலும், கூட்டங்களிலும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என திருச்சபை போதிக்கிறது. மூடத்தனமான நடைமுறைகளாக இருப்பின் அதைத் திருத்திக் கொள்வது இறைமக்களின் கடமையாகவும் இருக்கிறது. பாரம்பரியம் என்ற போர்வையில் எல்லாமே சரியானதாக இருக்கும் என்று கூற முடியாது. இறைவன் கொடுத்திருக்கும் பகுத்தறிவும் இறைநம்பிக்கைக்குத் தேவையே.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் கடவுளைத் தேடுகிறோம். இதுதான் சரியான பாதை என்று யாரும் கூற முடியாத அளவுக்கு எல்லா மறைகளிலும் நல்ல கருத்துகள் கிடக்கின்றன. மக்களும் ஒரே கடவுளின் வெளிப்பாடுகளில் கவனம் செலுத்துகின்றனர். அன்னை மரியாவிடம் கேட்டால் நிச்;சயமாக ஆண்டவரிடமிருந்து பெற்றுத்தருவாள் என்ற ஆழமான நம்பிக்கைதான் இத்தகைய பக்தி முயற்சிகளுக்கும் ஆணி வேராக அமைகிறது. வேளாங்கன்னிக்கு வரும் பலரும் பல கருத்துக்களோடும், வேண்டுதலோடும் வந்து சேர்கின்றனர். மிகுந்த நம்பிக்கையோடு கேட்கும் பலரும் புதுமைகளை அனுபவித்தவர்களாய் ஆண்டவருக்கும் அன்னைக்கும் புகழ் சேர்க்கின்றனர். “அன்னையின் மீது பக்தி வையுங்கள், புதுமைகள் பலவும் காண்பீர்கள்” என்று சொன்ன புனித தொன்போஸ்கோவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்களாக அன்னையின் அற்புதம் தரும் அருளை  அனுபவப்பூர்வமாக உணர்வோம். ஆவே மரியா.