Friday 8 March 2013

என்னைத் தெரியுமா?


நான் யாரென உனக்குத் தெரியும்
எனக்கும் தெரியும்.
உண்மையிலேயே 'நான்' யாரெனத் தெரியுமா?
எனக்குத் தெரிந்த நான் நானில்லை.
தெரிந்திருந்தால் நான் நானில்லை.
அதை உணர்ந்தவன் 
எப்படியும் இருப்பதில்லையே.
'நான்' அவனிடமிருந்தோ அவளிடமிருந்தோ 
மாறுவதில்லை.
உருவம்தான் மாறுகிறது உள்ளிருப்பது அல்ல.
எல்லோருக்குள் இருப்பதும் அதுதான்.
'நான் யாருனு தெரியுமா?' 
அரை வாளிதான் அப்படி சொல்ல முடியும்.
தெரிந்தவன் சொல்வதில்லை. 
அது தீயன செய்தாலும் கரைபடுவதில்லை
நல்லது செய்வதில் பெருமை கொள்வதில்லை.
மனிதருக்குள் மனிதம் மாறுபடுவதில்லை.

அடுத்தவர் துயரினில் மகிழாது
அவனோடு துடித்திடும்.
மனிதனின் மாண்பு அதுதான்.

இதை உணர்ந்திடும் மனிதனாய் இரு.
மனிதனாகவாவது இரு.




Wednesday 6 March 2013

யார் சொன்னால் என்ன?


நல்லவை நாலு பேரிடமிருந்து வரலாம்
அறிவுரை யாரிடமிருந்தும் வரலாம்
உண்மையாயிருந்தால் ஏற்றுக்கொள்.
யார் சொன்னால் என்ன?

சிலந்திப்பூச்சியும் பாடம் சொல்லலாம்
சிறு குழந்தையும் குத்திக் காட்டலாம்
மலர்கள்கூட மனதை நெருடி
மகிழ்ச்சியாய் இருக்க வழி சொல்லலாம்.
யார் சொன்னால் என்ன?

குடிக்காதவன் உன்னிடம் குடிக்காதே எனலாம்
குடிக்கிறவன்கூட அதையே சொல்லலாம்
யாரிடமிருந்து என்பதல்ல
'என்ன' என்பதுதான் முக்கியம்

இயேசு, கிருஷ்னா, நபிகளின் 
வரிகள் மட்டுமா இறைவார்த்தை?
மதங்களில் மனதை இழந்து விடாதே
ஆண்டிமுத்து ராசாகூட  தன் 
அனுபவத்திலிருந்து அறிவுரை கூறலாம்.
யார் சொன்னால் என்ன?

நல்லவர்தான் சொல்ல வேண்டுமென்றால்
தொல்லுலகில் எவருமிலர்.

தெள்ளிய அறிவு பெற
மனதை எப்போதும் திறந்தே வைத்திரு.
யார் சொன்னால் என்ன?



Monday 4 March 2013

மன்றாட்டு...



அபார வளமும் அசுர பலமும் கொண்ட 
என் பூமித்தாயே வாழ்க
எளியோர் மட்டுமே உம்முடன் இருக்கிறார்
அதனால்தான் அவர்கள் எளியோராகவே இருக்கிறார்.
அனைவரும் நலமோடு இருப்பது பற்றிய பசியில்
ஆண்டுகள் கழிக்கிறாய்
அதிகாரச் சுவர்களை ஆன மட்டும் 
அவ்வப்போது எட்டி உதைக்கிறாய்
புனிதப் பெண்ணே – நின் 
புனிதப்போரில் பங்குகொள்ளாமைக்கு மன்னியும்.
மக்களைப் பற்றிய கவலை 
எங்களிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.
எனது குடும்பம் மட்டுமே என் சிந்தனையில் ஓடுகிறது.
மாக்களாய்த் திரியும் நாங்கள்
மறுபடி காந்தி வந்தால் மனமாறலாம்
அதுவரை பொறுத்தருளும் தாயே.