Wednesday 25 July 2018

கேடுகெட்ட சாமிகள்

சிங்காரச் சென்னையின் சீர்கெட்ட போக்குவரத்தில் சிக்கவிரும்பாது
பள்ளி செல்லும் அபலைகளில் அவனொருவன்.
புத்தகங்கள் அடுக்கிக்கொண்டு பாதிச்சோற்றைத் தின்றுவிட்டு
“நேரமாச்சும்மா” என அவசரகதியில் வெளியேறி 
ஓடிக்கொண்டே செருப்பை சரிசெய்துகொள்ளும் சராசரி மாணவன்.
வாசல்வந்து இறக்கும் பள்ளிவாகனம் செல்லமுடியா சிறுவன் அவன்
பாதி உள்ளே பாதி வெளியே என 
பறவையின் அலகில் மாட்டிய பட்சிபோல
இரயிலின் இரும்புக்கதவிடுக்கில் விரைத்துக்கிடந்தான்
இறங்கும் இடம் வந்துவிடும் என்ற நினைப்பில்.
சுவரின் நீளமகலம் அறியாத அறிவுஜீவிகள்
வண்டியைத் தடம்மாறித் தொலைக்க
நொடிப்பொழுதில் இடித்து விழுந்தான், அவனும் பலரும்.
அப்படி என்ன அவசரம்? படிக்கட்டில் ஏன் பயணம்?
பயணிகளின் கவனமின்மைதான் காரணம்…
வழக்கம்போல நழுவத்துடிக்கும் அரசும் நிர்வாகமும்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தீவைத்தது நாங்களல்ல.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர்கள்தான் அடித்தார்கள்
துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணம், சமூகவிரோதிகள்தான்
எல்லோரும் பசுமைசாலையை ஆதரிக்கிறார்கள்.
இந்தத் தரங்கெட்ட வெள்ளைத்தீவிரவாதிகளை என்ன செய்வது?

செய்த தவறை ஒத்துக்கொண்டு
திருத்திக்கொள்ள இவர்களுக்கு மனமே வராதா?
மனிதர்கள்தானே தவறு செய்வார்கள்.
இங்கே ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும்தான் சாமிகளாச்சே...