Wednesday 4 December 2013

மாங்கல்யம் தந்துனானேனா



மழிக்கப்பட்ட மண்டை
முடியப்பட்ட ஒரு கொத்து மயிறு
பூணூல் காட்டும் மார்பு
உருண்டு திரண்டு தொங்கும் தொந்தி
எண்ணெய் வடியும் தோல்
கொழுப்பேறிப் பிதுங்கும் சதை
புரியாத மொழியில் பூசை நடத்தும்
புரோகிதன் கொடுத்தால் மட்டும் 
தாலி கட்டும் ஏழை மாப்பிள்ளை.

உன் இரத்தத்தையும் உழைப்பையும்
வாழ்க்கையின் வாய்ப்புகள் அனைத்தையும்
உறிஞ்சிக் குடித்த ஓநாயின் கரங்களிலிலா
உன் இல்லறம்?

சமர்ப்பயாமி என்றால் 'உன்னிடம் உள்ளதைக் கொடு'
ஸ்வாகா என்றால் 'பெற்றுக்கொண்டவன் விழுங்கி விடு'
பிடுங்குவதற்குத்தான் குண்டம் அமைக்கிறான்.

தெரிந்துகொள்.
திருமணச் சடங்கில்
நீ ஒரு பார்வையாளன்தான்.
ஒருபோதும் பங்கெடுப்பாளன் அல்ல.
தெளிவாகவே இருக்கிறான் அவன் 
மூடனாக நீ இருப்பதால்.
சுரண்டுபவனுக்கும் 
சுரண்டப்படுவனுக்குமிடையே உள்ள உறவு அது

Friday 22 November 2013

சர்க்கரையாய் இரு



கோயிலுக்குச் சென்றான் பக்தன் 
திருப்பீடத்தில் பெருமையாக நின்றான்.
வருடம் ஒருமுறை புண்ணியத்தலம் செல்கிறேன்.
பிறந்த நாளில் ஆதரவற்றோர் இல்லம் செல்கிறேன்.
கோயிலுக்குக் கொட்டிக் கொடுத்திருக்கிறேன்.
ஏழைக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன்.
என் குடும்பம் நல்லா இருக்கனும்.

'உதவி செய்பவனாக அல்ல
உதவுபவனாக இரு.
இருப்பதால் கொடுக்கிறாய்
இல்லாதபோதும் கொடு.
காலம் பார்த்து கனிதராது
எப்போதும் இனிக்கும் சர்க்கரையாய் இரு.'
புன்னகையோடு கடவுள் சொன்னார்.

Thursday 14 November 2013

பால்யப் பருவம்



பட்டனில்லா சட்டைக்குள்ளே 
தட்டு இருக்கும்.
சிட்டுக்குருவிகளிடம் சில நேரம் பேசமட்டும்
பால்வாடி போவேன்.

கீழே போட்டு நெளிப்பெடுத்தபின்
சைக்கிள் டயரில் 
ஊர் சுற்றி வருவேன்.

பனைமர மட்டையின் கவட்டையில்
கால் பதித்து உட்கார்ந்து
கரபுரவென இழுத்துத் திரிவேன்.

இளநுங்கு இரண்டை
குச்சியால் இணைத்து
ஸ்டியரிங்கோடு வண்டி ஓட்டுவேன்.

பனையோலை நறுக்கி
வேலாமர முள் குத்தி
ஆட்டுப்புழுக்கையிட்டு
காத்தாடி சுற்றுவேன்

மஞ்சனத்திப் பழம் பறித்து
கொட்டாங்குச்சியில் இறக்கி
நா கருக்க கடித்திடுவேன்.

மஞ்சள் நிற கண்மாய் நீரில்
கண் மஞ்சளாகும்வரை
நண்பர்களோடு ஆட்டம் போடுவேன்.

மாட்டு வண்டி தென்பட்டால்
புத்தகப்பை தொங்கவிட்டு
நானும் தொங்கி வருவேன்.

கடவுளுக்குக் கருணை காட்டா ஓணான்களை
கருணையின்றி கொலை செய்ய
கம்பெடுத்துப் புறப்படுவேன்.

முள்தைக்கும் ஒத்தையடிப்பாதையிலும்
சூடான தார்ச்சாலையிலும்
செருப்பின்றி நடந்திடுவேன்.

அப்பா கண்ணில் பட்டுவிடாது
வெள்ளிக்கிழமை இரவுகளில்
ஒளியும் ஒலியும் பார்த்திட 
அலைந்திடுவேன்.

நாலரைக்குப் போடப்படும் 
ஞாயிறு படம் பார்க்க
டி.வி இருக்கும் ஒரே வீட்டில்
அரைமணிநேரம் முன்னதாகவே
வரிசையில்  உட்கார்ந்துவிடுவேன்.

களையெடுப்பு கருதருப்பு
கலப்பையிட்டு ஏர் உழுக
அப்பா அம்மாவுக்கு உதவிடுவேன்.

கிட்டி, துட்டு, பம்பரம், தாயம்,
சில்லு, சீட்டு, எறிபந்து, ஐஸ்பான்டு
பளிங்கு, பல்லாங்குழி, குதிரை, நொண்டி
எப்போதாவது கிரிக்கெட் விளையாடுவேன்.

பால்ய நினைவுகள்
நெஞ்சடைத்து நிற்க
எதிர்வரும் எதிர்காலம்
மண்ணிலிருந்து என்னை
அந்நியப்படுத்திவிடுமோ என
அஞ்சுகிறேன்.

Friday 8 November 2013

மரித்துப்போன இசை

இசைப்பிரியா பார்த்தீரோ?
'அது நான் இல்லை' என்ற
அழுகுரல் கேட்டீரோ?
இச்சையால் உடலை நிறைத்து
மிச்சத்தை என்ன செய்தனரோ?
செத்துக்கிடக்கிறாள்.

பெண்பிள்ளை பெற்றோரே

உம்பிள்ளைக்கிது என்றால்
என் செய்வீர்?
இவள் வயது இளையோரே
உன்னோடு பிறந்தவளின் 
நிலையிது என நினைப்பீரோ?

நள்ளிரவில் ஒரு பெண்ணை

நடுரோட்டில் நான்கு பேர்
வெறிகொண்டு கொன்றதற்கு

நாடே எரிந்ததடா?
'இதோ ஒரு பெண்'
மிருகங்களின் உடல்சூடு தணியப்பட
ஒன்றுமில்லாமையில் உயிர்விட்ட
ஒவ்வொரு பெண்ணும் 
இப்படித்தானே செத்திருப்பாள்.

இந்த இரத்தக் காட்டேறிகளின் 

கெட்ட நாடகத்தை
வேடிக்கை பார்க்கிறோம்.
வேடிக்கையாய்ப் பார்க்கிறோமே.
இதற்கும் வழக்கம்போல் 
பதில்- மௌனம்தானா?


Tuesday 5 November 2013

ஆதாயமாகும் ஆன்மீகம்


நேர்மையற்று உழைப்பவன் 
உண்டியலில் போடுகிறான்.
நேர்மையாக உழைக்காதவன்
உண்டியலையே போடுகிறான்.
யார் யோக்கியன்?

ஒரே கடவுள்.
வெள்ளி முகமதியனுக்கு
சனி யூதனுக்கு
ஞாயிறு கிறித்தவனுக்கு
செவ்வாய், வெள்ளி இந்துவுக்கு
இதில் எந்த நாள் புனித நாள்?

தோஷம், பிரதோஷம்
அஷ்டமி, நவமி
ராகுகாலம், எமகண்டம்
நல்ல நேரம், கெட்ட நேரம்
நேரம் எப்படி பிரிந்தது?

வானளாவ கோபுரம்
உயரமான சிலைகள்
பகட்டான பீடங்கள்
அங்கம் முழுதும் தங்கம் கொண்டு
ஜொலிக்கும் தெய்வச்சிலைகள்.
ISO தரச்சான்று
வேறென்ன வேண்டும்?
பிரச்சனைகள் நிரந்தரமானதால்
அர்ச்சனைகள் நிரந்தரமாகின்றன.

கோவிந்தா உண்டியல் கோடிகள் விழுங்குகின்றன.
பம்பை நதியில் குபேரன் குளிக்கிறான்.
வேளை நகரில் வெளிநாட்டுக் கரன்சிகள்.
பத்மநாபனின் அறையில் பதுங்கும் டன் தங்கம்.
வழியெங்கும் பிச்சைகள்.
பகட்டான பத்து சதம்
கடவுளை கோடீஸ்வரனாக்கி
நாட்டைக் கடன்காரனாக்கிவிட்டது.

முட்டாள் இந்தியனின் மூடத்தனத்தால்
மதம், வருமானம் தரும் வியாபாரம்.

பக்திப் பெருக்கில் பீடம் எழுப்பி
திருடிக்கொண்டு வந்த தெய்வச்சிலையை
பிரதிஷ்டை செய்து பிழைக்கும்
புன்னியவான்கள் நிறைந்த நாடு இது.

Sunday 3 November 2013

பெயர்


பெயர்,
சிலருக்கு 
நிஜத்தை மறைக்கவும்
நிழலை ரசிக்கவும்.
சிலருக்கு 
சைன் போடவும் சான்றிதழ் நிரப்பவும்.

விளையாட்டாய் வைத்தவவை
வாழ்க்கை முழுதும் வருகின்றன.
கௌரவப்பெயர்கள் சில நேரம் 
காணாமல் போகின்றன.

சில சிலோகிக்கப்படுகின்றன.
சில ஆராதிக்கப்படுகின்றன.
சில ஞானம் தருகின்றன.
சில சாணம் பெறுகின்றன.

இறந்தபின் இவ்வுலகத்தில்
நாம் இடும் எச்சம் அது.
பெயரில்தான் நமது 
அடையாளமும் ஆளுமையும்

பெயர் - வெறும் சத்தமல்ல
நம் சரித்திரம்.

Thursday 24 October 2013

அகம் பிரம்மாஸ்மி




இருக்குமிடமே சொர்க்கம்
இருப்பதில் எல்லாம் இறைவன்.
உணர்ந்தவன் உளமாற உதவுகிறான்.
மற்றவன் உண்டியலில் போடுகிறான்.

ஏழையின் கண்ணீர் தெரியாதவன் கண்களுக்கு
கடவுள் தெரியப்போவதில்லை.
மனிதனில் இறைவனைக் கண்டவன்
கடவுள்பற்றிக் கவலை கொள்வதில்லை.

வழிபாடுகளில் வாழ்க்கை நடத்தி
வாரமொருமுறை நோன்பிருந்து
வேண்டுதல் செய்ய மட்டும் கோயில் செல்லும்
பக்த கூட்டங்களை பரமன் ஒருபோதும் பார்ப்பதில்லை.

உள்ளத்தில் உறைபவனை உணர்ந்தவன்
காண்பதில் எல்லாமே கடவுளைக் காண்கிறான்.
காடு எரியும்போது தானும் எரிகிறான்.
அனாதை அழும்போது அவனும்  அழுகிறான்.



Monday 21 October 2013

வியந்து பார்க்கிறேன்...



கரும்பாறைக் கற்கள் காவல் நிற்க
காற்றை மட்டும் கரைதாண்டி
அனுப்பிக் கொண்டிருக்கிறது கடல்.
கொட்டிவிட்ட பால் போலே
அலைகள் நுரைகளாகி
பின்பு அலைகளாகவே மாறிடும் அதிசயம் நிகழ்கிறது.
பாறைகளில் பட்டுத்தெறிக்கும் நீர்
காற்றோடு கரைகிறது.
முகமெல்லாம் ஆச்சரியம்.
வாய் திறந்திருந்தாலும்
நாக்கு மட்டும் வெளிவராது பார்த்துக்கொள்கிறேன்.
வியப்பில் உவர்ப்பு இணைவதை
தவிர்க்கவே முயல்கிறேன்.
கடலின் பிரம்மாண்டத்தில் 
கடவுளை பிரம்மிக்கிறேன்.

Thursday 26 September 2013

செபம்



கடவுளே, நீ நல்லாருக்கியா?
நா நல்லாவே இல்ல. போ
இன்னக்கி அந்த பெரிய வீட்டுப்பையன்
என்னப் பாத்ததுமே மூஞ்சிய சுளிச்சானா.
அவங்க அப்பா என்கூட பேசக்கூடாதுனு சொன்னாங்களாம்.
குடிசைவீட்ல இருந்தா அசிங்கமா?
நீயே சொல்லு.

நா போட்ருக்க சட்டை கிழிஞ்சிருக்குனு சொல்லி
சுரேசும் மணியும் கேலி பண்ணி சிரிக்கிறானுக.
எனக்கு மட்டும் புது சட்டை போடனும்னு
ஆச இருக்காதா?
அம்மாகிட்ட சொன்னா 
போன தீவாளிக்குத்தானே எடுத்தேங்கிறாங்க.
ஏதாவது சட்டை இருந்தா குடேன்.

பள்ளிக்கொடத்துல இன்னிக்கு எல்லாரையும்
என்ன சாப்டிங்கனு சாரு கேட்டாங்களா.
நா கஞ்சி குடிச்சேனு சொன்னேன்.
எல்லாரும் சிரிச்சிட்டாங்க.
அவனுக இட்லி தோசதான் சாப்புடுவானுகளாம்.
அது மாதிரிதானே கஞ்சியும்.
கஞ்சி சாப்டக்கூடாதா?

என் தம்பிக்கு ஒரு பொம்ம குடுப்பியா?
குப்ப மேட்டுல கெடந்து எடுத்த 
கொரங்கு பொம்மய உடச்சிட்டான்.

அப்புறம்...
எங்க அப்பா நெறய குடிக்கிறாரு
அம்மாட்ட காசு இல்லனு ஒரே சண்டையா இருக்கு.
வீட்ல இருக்கவே கஸ்டமா இருக்கு.
எங்கப்பா வந்தாருனாவே நா
கோகிலா வீட்டுக்குப் போயிடுவேன்.
அங்கதானே கலர் டி.வி இருக்கு.

எப்டியாச்சும் நா நல்லா படிச்சு பாஸாகனும்.
ப்ளீஸ் பா...

Friday 20 September 2013

வாழ்க்கைப் போதனை

எப்படித்தான் மோப்பம் பிடித்தார்களோ!
கள்வர்களின் கைகளில் சிக்கிவிட்டான்.
நினைத்தது கிடைத்ததால்
நினைவற்ற நிலையிலே
குற்றுயிராய் விட்டுச் சென்றனர்.

இறைவனைச் சொந்தம் கொண்டாடி- மற்றவன்
ஈனப்பிறவி என குறைவிலா செருக்கோடு 
குரு ஒருவன் அவ்வழி வந்தான்.
மதச்சடங்குகளுக்கு முன்னுரிமை தந்து
மனிதர்களிடமிருந்து தள்ளி நின்றான்.
'வெள்ளாடை கறை பட்டுவிடுமோ'– அவன்
உள்ளமே கறை பட்டிருந்தது.

அடுத்து வந்தவனும் அதேபோல்தான்.
கௌரவம் பார்த்ததால் 
காயப்பட்டவனைத் தொட யோசித்தான்.
அடிபட்டுக் கிடந்தவன் 
அவனுக்கு யாரோதானே.

இப்போது வந்தவன் ஒடுக்கப்பட்டவன்.
ஒதுங்கிப்போகத்தான் பார்த்தான்.
ஆனாலும் அருகில் சென்றான்
அவசரம் உணர்ந்தான்.
பையில் பணம் இல்லை
பரிவு நிறைந்த மனம் மட்டுமே.
பைத்தியம்தான் பிடித்தவன்போல்
வைத்தியனிடம் வந்து சேர்த்துவிட்டான்.
இருந்ததை முழுதும் வழங்கினான்
எப்படியும் காப்பாற்றிட இறைஞ்சினான்.
அதிகம் செலவாயின் 
அடுத்தநாள் தருவதாய்  
அழுத்திச் சொன்னான்.

பலரும் போதகர்களாகவே 
இருக்க விரும்புகிறார்கள்.
உலகிற்குத் தேவை போதிப்பவனல்ல.



Thursday 19 September 2013

எது தவறு?

கொலை செய்வது தவறு
நான் யாரைக் கொலை செய்தேன்?
ஆனால் அடுத்தவனை முட்டாளே என்றாலே
அதிக தண்டனையா?

நான் யாரைக் கற்பழித்தேன்?
விபச்சாரம் - ஐயோ அபச்சாரம்.
ஒரு பெண்ணை தீய எண்ணத்தோடு 
பார்த்தாலே பாவமா? என்னடா இது? 

படைத்தவன் நம் செயல்களை அல்ல
மனநிலையையே நோக்குகிறான்.
மனநிலைகள் எண்ணங்களாகின்றன
எண்ணங்களே செயல்களில் முடிகின்றன.
மனித உறவுகள் 
அனிச்சம் பூவினும் மென்மையானவை.
ஒரு சொல், ஒரு பார்வை போதும்
உறவுகள் உதறிவிட.
உறவுகளை கவனமாய்க் கையாளக் 
கற்றுக்கொள்.

கோபமும் மோகமும் பாவமல்ல.
ஆனால் பழக்கமாகிவிடக்கூடாது.
பழக்கங்களே பாவமாகின்றன.



Tuesday 10 September 2013

ஒரு நாளில்

எத்தனையோமுறை  முயன்றும்
பயனில்லை
என்னைப் போலவே மேசையும் கிடந்தது.
அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள்
அதில் இடைசொருகல்களாய் சில குறிப்புகள்
எப்பவோ வாங்கிய சாக்லேட்கள்
அது இதுவென ஏதேதோ கிடந்தன.



ஓரத்தில் நீர் நிறைந்த பீர் பாட்டில் ஒன்று
சூரிய ஒளியில் மினுமினுத்தது.
குறுகிய வாயிலை அடைத்து வளர்ந்து
அன்றாடம் உணர்வுகளைப் பிரதிபலித்தது
மனநல மருத்துவம் தெரிந்த மணி பிளாண்ட்.
அதன் ஆக்டோபஸ் வேர்கள்
அடிப்பகுதியையும் கைப்பற்றியிருந்தன.
விரைத்துப்போன மண்புழுவாய்
சில வெளியே நீண்டு கிடந்தன. 
சமீபத்திய பிரசவத்தில் 
உயிரின் வாசனையை 
உலகிற்கு உதிர்த்துக்கொண்டிருந்தன
இரு இளந்தளிர்கள்.
இதழோடு இணைத்து முத்தமிட்டேன்.

உன்னோடு வாழ்ந்திருந்தும்
எவ்வளவு விலகி இருந்துவிட்டேன்
மன்னித்துக்கொள்.



Sunday 8 September 2013

தாயன்றி வேறில்லை

குலுங்காமல் விரைந்த இரயில் வண்டியில்
சேலை நுணிகளுக்கிடையே
பள்ளத்தாக்கில் படுத்துறங்கிப்போனது 
பச்சிளங்குழந்தை ஒன்று.
அந்த இளந்தாய் மட்டுமே விழித்திருந்தாள்.

என்ன ஆயிற்றோ தெரியவில்லை
சரியான தாள கதியில்
அழகான சுதியில்
இனிமையாக இருந்தது 
குழந்தையின் அழுகை
எனக்கு மட்டும்.

தொட்டியிலிருந்து தூக்கி
தாலாட்டுப் பாடினாள்
மார்பகச் சீலை விலக்கி
அமுதம் தந்திட்டாள்
மடியில் படுக்க வைத்து
கொஞ்சினாள், கெஞ்சினாள்.
நின்ற பாடில்லை.

முழுத்தூக்கம் பலருக்கும் 
அரைதூக்கமாகிப் போனது.
மீதியை எரிச்சல் நிரப்பியது.

எறும்பு ஏதாவது இருக்கா பாருப்பா
தள்ளி வா...வெயில் அடிக்குது பாரு
குளிர்காத்து அடிக்குதும்மா... சன்னலை மூடினாள்.
தூக்கிக் கொண்டாடினர்
இளந்தாயின் உணர்வோடு ஒன்றிப்போன
அங்கிருந்த வேறு இரு தாய்க்குலங்கள்.

இதுதான் தாயன்பா?
நானும் அப்படித்தானே அழுதிருப்பேன்.
என்ன பாடுபட்டாளோ என் தாய்?


Monday 26 August 2013

நீயும் இவர்களில் ஒருவனா?

கீபோர்ட், கிட்டார் எனக்கு அத்துபடி
கிரிக்கெட்- நான்தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்
ஈவ்னிங் ஆனா ஜிம், நண்பர்களோடு அரட்டை
கூலிங் கிளாஸ் போட்டு ஸ்டைலா வண்டிய எடுத்தா
ச்சும்மா ஸ்பீடா பறக்கும்ல...
நல்லவேலை, கை நிறைய சம்பளம்.
கம்ப்யூட்டர்லயும் புகுந்து விளையாடுவேன்
கஸ்டமான கணக்குகள்கூட ஈஸியா போடுவேன்

ஆனாலும்
டிரிங்ஸ் எடுக்காம இருக்க முடியல
சிகரெட், பாக்கு மறக்க முடியல
கண்ட கண்ட பாடம் பாக்குறத நிறுத்த முடியல
வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம் பேசத் தெரியல
பொண்ணுககூட சாதாரணமா பழகத் தெரியல
கண்ணுக்கு அழகானவள பாத்துட்டாவே
காதல் கல்யாணம்னு மனம் அலைபாய்து. 
நான் விரும்புறவ என்ன மட்டும்தான் விரும்பனும்
விலகிப் போயிட்டா வெறிபுடுச்ச நாயாகிடுறேன்.
வக்கிர எண்ணங்களும் வன்முறை செயல்களும்
என் மனசு பூரா நிரம்பியிருக்கு.
அம்மா அப்பாட்ட ஆசையா பேசுனதுல்ல
சம்பளத்துல பத்துப் பைசா கொடுத்ததில்லை
காதலிச்ச அஞ்சு மாசத்துல
அவளுக்காக எவ்ள செலவு பண்ணேன்னு தெரியல.
கையேந்துறவங்களப் பாத்தா அருவருப்பா இருக்கு
கஸ்டப்படுறவங்களப் பாத்தா கலாய்க்கத்தான் தெரியுது.

நீயும் இவர்களில் ஒருவனா?
என்ன படித்து என்ன புண்ணியம்?
உன்னையே நீ அறிவாய்.



Sunday 11 August 2013

எரியும் பனிப்போர்

ஐ.ஏ.எஸ் படித்திருக்கலாம்
அதனால் என்ன?
ஒரு அஞ்சாங்கிளாஸ் எம்.எல்.ஏ
அலேக்காகத்தூக்கி வீசலாம்.
ஐந்து வருட 'பவர்' அது.

கொள்ளையை மட்டுமே 
கொள்கையாய் வகுத்து
எல்லையில்லா சுதந்திரம் பெற்று
மளமளவென  சொத்து சேர்த்து
மல்லையா வாரிசுபோல
மல்லாக்காப் படுத்துக்கிடக்கும்
வெள்ளைப் பேய்கள் இவை.
ஞாபகமிருக்கிறதா?
ஐந்தாண்டுகளுக்கு முன்
அம்மா! தாயே! என 
திருவோடும் இல்லாமல்
தெருத்தெருவாய்ச் சுற்றிய
இராப்பிச்சைக்காரர்கள்.

பணம் பதவி வந்தபின்
பாமரரை நினைத்துப்பார்க்க முடியுமா?
அவர்களுக்கு எங்கே நேரமிருக்கிறது?
இருக்கும் நேரத்தில் என்ன செய்கிறார்கள் என
தகவல் அறியும் சட்டம் உதவுமா?
சட்டம் வரைந்தவன் எப்போதும்
சட்டத்திற்கு வெளியேதான்.
safety first.

நேர்மையான அதிகாரிக்கு 
நேரும் கொடுமை நாடறியும்.
வாலாட்டுங்கள்
விசுவாசப் பிராணிகளாக அல்ல.
'துர்கா' போன்று விஸ்வரூபமெடுக்க
துணிந்து வாலாட்டுங்கள்.
வெட்டப்பட்டால் வால்தானே போகிறது.





Tuesday 6 August 2013

விலக்கப்பட்ட கனிகள்



'நான் நம்புகிறேன் ஆண்டவரே
நீர் மெசியா, இறைமகன்'
பேதுரு மட்டுமல்ல
மார்த்தாவும் சொல்லியிருந்தாள்.
முன்னவர் உயர்த்தப்பட்டார்
பின்னவர் மறைக்கப்பட்டார்.

உயிர்ப்பின் முதல் தரிசனம் பெற்று
'நான் ஆண்டவரைக் கண்டேன்'
என்ற மகதலா மரியா
அதன்பிறகு காணாமலே போய்விட்டாள்.

கிறித்தவத்தின் முதுகெலும்பான
யூத மதமும் கிரேக்க அறிவும்
பெண்ணைப் போற்றியதில்லை.
'அவளுக்கு ஆன்மா இல்லை
அதனால் மீட்பும் இல்லை' என்ற
அகுஸ்தினாரும் அக்குவினாசும்
இறையியலின் இருபெரும் தூண்கள்.
'மனித இனம் பாவத்தில் விழவும் - இயேசு
மானிடமகனாய்ப் பிறந்து இறக்கவும்
காரணமே அவள்தான்' என வாதிட்ட
ஆதித்தந்தையர்களின் கருத்துக்களால் கட்டப்பட்ட
திருச்சபை இது.
கவனமாய்ப் பொறுக்கி எடுக்கப்பட்ட
இறைவார்த்தைகள் வேறு.
சமத்துவம் பேசும் இறைவார்த்தைகள்
சரித்திரத்தைப் பார்த்ததில்லை. 
பாவம்! முடங்கியே கிடக்கின்றன.
அறியாமை கண்டு 
இறைமகன் சிரிக்கிறானா? அழுகிறானா?
குழப்பமே மிச்சம்.

'திரு'ச்சபை
கவனமாய் செதுக்கப்பட்ட பெயரிது.

Monday 5 August 2013

வளமையும் வறுமையும்

'வாழை இலை' உணவகம்
வழக்கமான ஐட்டங்கள் விடுத்து
வித்தியாசமானதை விருந்தாக்கினோம்
நானும் என் நண்பரும்.
தேவைக்குமேல் மேசை நிரம்பியிருந்தது.

விலக்கிவிட முடியாத வறுமையோடு 
அம்மாவும் பதினைந்து வயதுப் பையனும்
பின்மேசையில் வந்து அமர்ந்தனர்.
உணவுப்பட்டியல் அழகாயிருப்பினும்
விலைப்பட்டியல் உதடுளை அந்நியப்படுத்தியது.
'நீ மட்டும் சாப்புடுடா தங்கம்
எனக்குப் பசிக்கல'
வழக்கம்போலவே மறைக்கப்பட்டது பசி.
நாற்பது ரூபாய் நூடுல்ஸ் கப்பில்
இருவரின் மனமும் அமைதியானது.

இருவேறு இந்தியா
இடைவெளி எப்போது  குறையும்?



Sunday 28 July 2013

பெண்- பாவம்



குடிகாரக் கனவன்.
குடலைப்பிரட்டுகிறது வாடை.
'ஊரே கேட்கும்படி
உளறுகிறானே.
கொடுத்த சாப்பாட்டையும் 
கொட்டிவிட்டான்.
நான் என்ன செய்வேன்

உடல் பாழாய்ப் போயிடுமே'
சிந்தித்த சில வினாடிகளிலேயே
திடீரென எழுந்தான்.
அகோரப்பசியில் 
அவள்மேலே விழுந்தான்.
இரண்டு உடல்களும் பாழாய்ப்போயின.

பாவம் பெண்
'வலி'யோடே வாழ்க்கை நடத்துகிறாள்.

Saturday 13 July 2013

சாந்தா மரியா

அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தேன்.
பல மாதப்பயணம் அது.
'யுரேகா! இந்தியாதான் இது' என
கொலம்பஸ் கொண்டாடிக் கொண்டிருந்தான்.
கையில் சிலுவை எடுத்து முத்தமிட்டான்

பார்த்திராத ஒன்று வந்திருப்பதாக 
பதுங்கி முன்னேறியது செவ்விந்தியக்கூட்டம்
விஷமேறிய அம்புகள் தாக்குதல் நடத்தத் 
தயாராகத்தான் இருந்தன.
குறிபார்க்குமுன்னே பிணக்குவியலாகிப் போயினர்.
தோட்டாக்கள் நிரம்பியிருந்த துப்பாக்கிகள்
குப்பிகளை மட்டும் துப்பிக்கொண்டிருந்தன.
கொஞ்சம் முன்புவரை நீலக்கடலில் நின்ற நான்
நிஜமாகவே நிறமாறிப் போனேன்.
மூழ்கிப்போனாலும் அழியாத செந்நிறம் அது.

வெற்றிக்களிப்பில் வெறி தணிந்தவர்களாய்
தாய்நாடு திரும்பினார்கள்
"தந்தையே இவர்களை மன்னியும்" என
மனம் நொந்து வேண்டுகையிலே
மீண்டும் அதே பயணம்
இன்னும் அதிக ஆயுதங்களோடு.
கொள்ளைநோய்ப் போர்வைகள் 
பொதிகளாய் அடுக்கப்பட்டிருந்தன.
போர்வீரர்கள் படைகளாய்த் திரண்டு வந்தனர்.
புதிதாக போதகர்கள் வேறு.

உயிர்கொல்லியாக போர்வைகளும் போர்வீரர்களும்
இனம்கொல்லியா போதகர்களும் 
நன்றாகவே போரிட்டனர்.
உரிமையாளர்களின் மொத்த அடையாளமும்
துடைத்தழிக்கப்பட்டன.
பிடுங்கிய நிலத்தை புதிய நாடெனப் பெயரிட்டனர்
உயிர் பிழைத்த ஒன்றிரண்டு செவ்விந்தியக் கழுத்துகளில்
தொங்கிக்கொண்டிருந்தார் இயேசு
கண்ணீரை மறைக்க கையின்றி.

காலனியாதிக்கத்தைக் கவனித்துப்பார்.
கொண்டுவரப்பட்டது வியாபாரம் மட்டுமல்ல
மதமும், மொழியும்தான்.
கொள்ளையிடப்பட்டது வளங்கள் மட்டுமல்ல
கலாச்சாரமும், சுயசிந்தனையும்தான்



சாந்தா மரியா
(கொலம்பஸ் பயணம் செய்த கப்பல் பெயர்)


Thursday 4 July 2013

காதலும் சாதலும்



காதலிப்பது என்ன 
அவ்வளவு பெரிய குற்றமா?
ஆதி மனிதன்ஆரம்பித்து 
அன்றாட வாழ்வின் அடிநாதமே காதல்தானே!
ஆன்மீக இலக்கியங்களில் நுழைந்து
ஆராதனைக்கும் அர்ச்சனைகளுக்கும் மூலமே
இந்த காதல்தானே.

காதல் இல்லாமலா நீயும் நானும் பிறந்தோம்?

காற்றைப்போல நீக்கமற நிறைந்திருக்கும்
காதலுக்குக் கொள்ளி வைக்கும் 
கொள்ளைக்கார கூட்டமொன்று நம்மிடையே நடமாடுகிறது.

இவரைத்தான், இதற்குள்தான் என வட்டமிட
இந்தக் காவாளிகள் யார்?
இதோ இளவரசன் இறந்துவிட்டான்/ கொல்லப்பட்டான்.
அவன் செய்த பாவம் காதல்.
பாவம் - காதல்மேலா, காதலிப்போர்மேலா?


எத்தனையோ இளவரசன்களையும் இளவரசிகளையும்
இழந்துவிட்டோம்.
இளையோரே உஷார், உஷார்.
மீன்பிடிக்க உயிரிழக்கும் புழுபோல
மானம் காக்க நீ சாகிறாய், கொல்லப்படுகிறாய்.
எது பெரியது?
மானமா? உயிரா?
மானமாவது மயிராவது
உயிர்வாழத்தான் நீ பிறந்தாய்.

தாழ்த்தப்பட்டவன் கொல்லப்பட்டாலும்
காலனிகள் கொழுத்தப்பட்டாலும்
தாழ்ந்த குரலில்கூட எதிர்க்கத் தயங்கும்
இழிந்த என் இனமே
கொல்லப்பட்டவனுக்கும் ஒரே உயிர்தானே.

விழித்தெழு தோழா!
நாளை இதே நிலை உனக்கும் வரும்.
துணைக்கு யார் வருவார்?
தைரியமானவன் மட்டுமே காதலிக்க முடியும்
தைரியம் இருந்தால் மட்டுமே காதலி.
இழிந்த இந்த இந்திய சமூகத்தில்
காதலும் சாதலும் ஒன்றே.
ஆனாலும் சாகத்துணியாதே
வாழத்தானே காதலித்தாய்.
வாழ்ந்துகாட்டு.

Tuesday 2 July 2013

மால்கம் எக்ஸ் - கனல் கருப்பன்


அடிமைத்தனம் நிறத்தில் தெரிவதால்
அருவருப்பு முகத்தில் தெரிக்கிறது.
அமெரிக்கா அழகானதுதான்
அழகாக்கியது அழுக்கு அடிமைகள்.
இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகள் வரை
இரண்டாம்தர குடிமக்களாக
இல்லை இல்லை
இருண்ட கண்டப் பிராணிகளாக
நடத்தப்பட்டனர்.
திமிறி எழுந்தவர்களெல்லாம் 
ரவைக்குப் பலியாகிப் போனதுதான் மிச்சம்.
தாடிக்கார லிங்கன் எடுத்த முயற்சி
பிரிவினைக்குத்தான் வித்திட்டது.
ஒட்டுவதற்கு அவன் கொடுத்த விலை
அமெரிக்க வரலாற்றின் மோசமான நிலை.

உரிமையா! அடிமைகளுக்கா?
ஹா ஹா ஹா ஹா நல்லாருக்கே கதை.
அப்டின்னா விவசாயம் செய்றது யாரு?
சுமை தூக்கி கட்டுமானம் செய்றது யாரு?
சாக்கட, குப்பையெல்லாம் நாமலா அள்ள முடியும்?
நம்ம வீட்ட நாமதான் பெருக்கி சுத்தம் செய்யனும்மா?
இது என்னயா கூத்து?

சட்டம் வழங்கிய உரிமைகள் பார்த்து 
சந்தி சிரித்தது.
வரிகளில் இருந்தால் போதுமா – அதற்கு
வாழ்வு கொடுக்கப் போவது யார்?
கர்ஜனைக்காகக் காத்திருந்தார்கள்
மியாவ் மியாவ் கருப்பர்கள்.
லூத்தர்கிங் கர்ஜனையில் அமைதி தெரிந்தது
மால்கம்-எக்ஸ் கர்ஜனை ஆத்திரம் தெளித்தது.
நோக்கம் ஒன்றாயினும் பாதைகள் தனித்தனி.
'அறைபவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு'
ஆதிக்க வெறிக்கு எதிரான போராட்டம்
கருப்புக்காந்தி லூத்தருடையது.
ஒரு கன்னத்தில் அறைந்தால்
இரு கன்னத்திலும் திருப்பி அடி.
வெள்ளையன் எவனுமே என்றுமே நல்லவனல்ல
இனத்திற்கு எதிரான போராட்டம்.
மால்கம்-எக்ஸ் கொஞ்சம் சூடாகவே மிரட்டினார்.

இயேசுவைப் போதிக்கும் போதகராய் இருப்பினும்
அவன் தந்தை சமூகத்தைத் தட்டிக்கேட்கத் தவறவில்லை.
அதனாலேயே கொல்லப்பட்டார்.
ஏழையாய், திருடனாய், ஏமாற்றுபவனாய்
கடத்தல்காரனாய் கைதியாய் இருந்தவன் எக்ஸ்.
ஆதிக்க இனமாய் இருந்த வெள்ளையரோடு
அல்லாஹ்வின் பெயரில் அறப்போர் நடத்தினார், 
அதைத் தீவிரமாய் நடத்தினார்.

கருப்பர்களின் கவலையற்ற வாழ்வுக்காய் 
இருப்பதையெல்லாம் இழந்தார்
பாவம்! வெள்ளாடுகள் சில செம்மறியாயும்
செம்மறிக்கூட்டத்தில் சில கருப்பாடுகளும் 
அவன் கண்களுக்குத் தெரியாமலேயே போய்விட்டன.

Friday 28 June 2013

இதோ என் சீடர்





யார் என் தாய்?
யார் என் சகோதரி?
இறைச் சித்தம் நடப்பரே என் தாய்.
இவள் நடந்திருக்கிறாள்.
இதோ இருக்கும் இவள்
ஏதோ என்னைப் பெற்றதனால் மட்டும் அல்ல

இளமை முதலே இறைவனோடு இருந்தவள்
இன்னலிலும் இறைவழி நடந்தவள்
பணிவுதனைக் கொண்டிருப்பினும்
துணிவினை துணியாக உடுத்தியவள்
இல்லையென்றால், 
மலைநாடு போயிருக்க முடியுமா? இல்லை
மன்னனிடமிருந்து என்னைக் 
காப்பாற்றியிருக்க முடியுமா?
இறைத்திட்டம் இதுவெனத் தெரிந்தவுடன்
இது எப்படி ஆகும் என
குறுக்குக் கேள்வி கேட்டவளாயிற்றே.

அடிமையென்று குறுக்கிவிடாதே.


தாழ்ச்சி நிறைந்தவளாயினும்
தனியே நின்று சாதித்தவள்.
வலியைத்தாங்கும் வலிமை நிறைந்தவள்.
பைத்தியக்காரனாகிப் பிதற்றுகிறான் என
சுற்றத்தாரும் எட்டி நடக்கையில்
என்னோடு இருந்து என்னோடு உண்டு
என் பணி புரிய என் வழி நடந்து
எனக்காகவே உயிர் வாழ்ந்த ஜீவன் இவள்.

உதவி தேவை தெரிந்துவிட்டால்
உற்ற நேரம் உதவிடுவாள்
உரிய நேரம் இல்லை என்றால்
நல்ல நேரம் அதுவே என்பாள்.
அழைக்கப்பட்டவரும் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்
துணியையும் தூக்கி எறிந்து ஓடுகையில்
சிலுவை வரை இவளின் துணிச்சல் 
எனக்கே வியப்பளித்தது.
எனக்கு இவள் சீடரா
இல்லை குருவா?

Monday 17 June 2013

வீதியோரம்...

போட்டிருந்த சட்டையை சரிப்படுத்திக்கொண்டேன்.
நகர்வலம் வர கால்கள் தயாராகியிருந்தன.
முக்கிய வீதிகளில் இறங்கி கட்டிட வனப்புகளை
கடந்து கொண்டிருந்தேன்.

வாசலுக்கு மட்டும் வழிவிட்டு
சாலையோரக் கடைகளோடே
வாழ்ந்து வந்த குடும்பங்கள் பல.
தார்ச்சாலையிலேயே துவையல்
தார்ச்சாலையிலேயே குளியல்
ஞாயிற்றுக்கிழமைச் சடங்குகள் இவை
வீதிகள் காலியாகக் கிடப்பதால்.
மாற்றிக்கொள்ளும் துணிகள்கூட
மரப்பலகையிலே அடுக்கப்பட்டிருந்தன.

குடியிருந்த யாருக்கும் கூரையில்லை
கூரையிருந்த குடிசைகள் ஒன்றோ இரண்டோ.
கண்ணாடிக்குள் இருந்த இயேசு முகமொன்றை
கரையான் பாதி அரித்திருந்தது.
இரட்டைச் சடையிட்ட பதின்வயதுப்
பருவப்பெண் ஒருத்தி
பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்.
அவள் பள்ளி மாணவிதான்.
தோழிகள் முகவரி கேட்டால் என்ன சொல்வாளோ?

கடையின் வயர்களில் கனெக்சன் கொடுக்கப்பட்ட
பழைய டி.விப் பெட்டிகள்
வீதியில் நடப்போருக்கும் படம் காட்டின.
நடைபாதை வாழ்க்கையை கபலீகரம் செய்துவிட்டு
கற்பனையை மட்டும் தூண்டின.
பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருந்த
பரட்டைத்தலைப் பெரிசுகள்
பரவசமடைந்திருந்தன.

அடுத்த வீதி சென்றிருந்தேன்
கிடைத்த இடத்தில் எல்லாமே சாலைவீடுகள்.
காசு வைத்து கோலி விளையாடும்
சட்டையில்லா அழுக்குச் சிறுவர்கள். -மழை
விழுந்தால் மட்டும் நனையும் உடல்கள்
உரிந்தால் மட்டுமே நனையும் உடைகள்
சரளமாய் விழுந்த சென்னையின் செந்தமிழில்
நல்ல வார்த்தைகளைச் சலித்துதான் எடுக்க வேண்டும்.
அருகிலேயே அசிங்கங்கள் கிடக்க
விளையாட்டோ மும்மரமாகிக் கொண்டிருந்தது.
நடப்பவனுக்குத்தானே சீச்சீ
அங்கேயே இருப்பவனுக்கு என்ன!

பக்கத்து வீட்டில் பாத்திரம் முழுக்க
பிராய்லர் கோழித் தலைகளும் கால்களும்;.
கறிக்கடையின் எச்சங்களைக்
எங்கிருந்தோ வாங்கி கழுவிக்கொண்டிருந்தாள்.
'இன்னக்கி எங்க வீட்லயும் நான்-வெஜ்'
சோறு அடுப்பில் வெந்து கொண்டிருந்தது.
இரண்டு பாத்திரங்கள், தட்டுகள், ஒரு டி.வி
ஒன்றிரண்டு சாமிப்படங்கள், ஒரு தட்டுவண்டி.
இருந்த உடைகளும் களையப்பட்டு
காய்ந்து கொண்டிருந்தன.
இதுதான் ஒரு வீடு.

இவர்களின் வாழ்க்கையே இப்படித்தானா?
கேள்விகள் மனதைத் துளைத்தன.
எப்டியாவது ஒரு வீடு கட்டனும்
என்று எத்தனை எத்தனை தலைகள்
ரிட்டயர் ஆகும் வருடங்களை
வருடிக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றன.

கடவுள்களுக்கும் கோயில்களுக்கு மட்டும் பஞ்சமில்லை
பாரத சமுதாயம் வாழ்கவே...



Tuesday 4 June 2013

அண்ணே...ஒரு கட்டிங்

ஒற்றைச்சிறையாய் சில்லறையற்ற கடையாய்
ஊரின் மையப்பகுதியில்
அடேயப்பா...
கோயிலுக்கு இணையான கூட்டம்.
என்ன! ஆண்கள் மட்டுமே அனுமதி.


இங்கே வாடிக்கையாளர்தாம் உரிமையாளர்.
மக்களின் பணத்தில்
அரசு நடத்தும் சேவை மையம்.
கம்பி இடுக்குகளில்
கைகளும் காசுகளும் மட்டுமே தெரிகின்றன.
கல்லூரி போகாத விடலைகள்கூட
'அண்ணே... ஒரு கட்டிங்...'


ஏன் நீ மட்டும்தான் அடிக்கனுமா
என் காசு என் உடம்பு
மூடிக்கின்னு போயா...
பழகிப்போன பதில்களால்
கேள்வி கேட்க ஆளில்லை.
சின்னதும் பெரிசுமாய்
இடம் மாறும் பாட்டில்கள்
நீர்த்துப்போய் சதையோடு சங்கமிக்கின்றன.


 'இப்பதான் மச்சான் சந்தோசமா இருக்கேன்'
தரைதட்டுகிறது ஜில் பீர் பாட்டில்.
உற்சாகத்தோடு உளறியது
எதிர்கால இந்தியாவின் தூண் ஒன்று.
கடைசி மடக்கில் கைலாசம் போனவன் - தன்
கைப்பேசியிடம் கலந்துரையாடல் செய்கிறான்.

'சந்தோசமா இருக்காராம்...'
கெக்கே புக்கேவென சிரித்துவிட்டுச் சொன்னது
கீழே இறங்கிய பீர் பாட்டில்
விழுந்து கிடந்து பிராந்தி பாட்டிலிடம்.
"எத்தனை குடும்பத்த அழிச்சிருக்கோம்
எத்தனாயிரம்பேர கொன்னுருக்கோம்...
இவரு சந்தோசமா இருக்காராம்.


சாதாரண வாய்த்தகறாரைக்கூட
கொலை வரைக்கும் கொண்டுபோயிருக்கோம்.
வசதியானவங்களக்கூட ஓட்டாண்டியாக்கியிருக்கோம்
கூலி ஓட்டாண்டிகளையும்
குடிகாரனாக்கி குடும்பத்தையே ஒன்னுமில்லாம
ஆக்கியிருக்கோம்..
இவரு சந்தோசமா இருக்காராம்...


இவன் பேச்ச எவனும் மதிக்கப்போறதில்ல
தங்கச்சி இருந்தாகூட தவறா நடப்பான்
என்ன சொல்றோம்.. என்ன செய்றோம்னு தெரியாத
இவரு சந்தோசமா இருக்காராம்...


வேலைக்கிப்போற எல்லாரையும்
நமக்கு அடிமையாக்கிட்டோம்
அடுத்த தலைமுறைக்கான
சேமிப்பே இல்லாம ஆக்கிட்டோம்
குடிக்கிறது ஒன்னும் தப்பில்லனு
நல்ல பேரு வாங்கிட்டோம்
இவன் பணத்தை இவன வச்சே
கொள்ளையடிக்கிறோம்..
இவரு சந்தோசமா இருக்காராம்...


நடந்ததைப் பார்த்துப் புன்னகைத்தார்
சுவரில் மாட்டப்பட்டிருந்த முதலமைச்சர்.

Tuesday 21 May 2013

வேதனை


ஓடுகிற இரயிலில் வேகாத வெயிலில்
வெயிட்டுகளைத் தூக்கிக் கொண்டு
இடம் பிடிக்க ஓடி அலைகிறேன்.
தலைகள் நிறைந்திருந்த பெட்டியில்
இடம்பிடித்து உட்கார மட்டுமல்ல
கிடைத்த இடத்தில் உட்கார்ந்தே இருப்பதும்கூட
கஸ்டமாகத்தான் இருந்தது.

பசுமையின் மடியில்...

குற்றால மலைத் தேனருவிக்கு
நண்பர்களின் அழைப்பில்
நடைப்பயணம் செய்தேன்.
எனக்கு முன்பாகவே அவர்கள்அங்கிருந்தார்கள்.
காலையும் மதியமும் சாப்பிடாததால்
எனக்கோ கொலைப்பசி.
கையில் சில பழங்களோடு
பசுமைக்காடு வழியே பயணமானேன்.
தனிமையும் தைரியமும்
மட்டுமே என்னோடு மலையேறின.
திடீர்ச் சத்தங்களில் பயம்
மெதுவாக எட்டிப் பார்த்தது.
ஒரு மணிநேர பயணத்திற்குப் பின்
செண்பக தேவி கோயில் தென்பட்டது.
அருகிலேயே அருவி இருந்தும்
அவர்கள் அங்கு இல்லை.
மூன்று மணிநேர பயணம் என்ற
அவர்களின் அலைபேசி வார்த்தைகள்
நினைவுக்கு வர,
வந்த வயோதிகரிடம் வழி கேட்டபின்
தொடர்ந்து நடந்தேன்.
குறுகலான பாதையில்
குருட்டாம்போக்கில்
பலமுறைப் பயணப்பட்டவன்போல
நடந்தேன்.
பாதையைப் பாறைகள் வழிமறிக்க
படாத பாடுபட்டுப்போனேன்.
வேர்கள் பிடித்தேன்
விழாதிருக்க விழுதுகள் பிடித்தேன்.
சருகுகள் வழுக்கிய பொழுதெல்லாம்
சாமி உதட்டில் வந்து போனார்.
மூன்று மணிநேரம் நடந்திருப்பேன்.
இரு பாறைகள் இணையுமிடத்தில்
சிறு'நீரே' வழிந்து கொண்டிருந்தது.
இதுதான் தேனருவியோ
தெரியவில்லை.
தெரிந்து கொள்ளவும் வழியில்லை.
அவர்கள் அங்கும் இல்லை.
மரணப்பாறைகளைக் கடந்து
தொடர்ந்து நடக்க எத்தனித்தேன்.
ஆனால் வலு இல்லை, பாதையும் இல்லை.
செங்குத்துப் பாறையில்
கிளை பற்றி ஏறுகையில்
எனக்கு முன்னே ஆறடி நீள பாம்புச் சட்டை.
பாம்பாகவே என் கண்களுக்குத் தெரிந்தன.
நொடிப்பொழுதில் செத்துப் பிழைத்தவனாய்
யப்பா! போதும்டா சாமி.
திரும்பி வந்திட வழி தேடினேன்.
வந்த வழியும் இல்லை, தப்பிக்க
எந்த வழியும் இல்லை.
அரைமணி நேரம் அலைந்திருப்பேன்.
பசித்த வயிறும் பயந்த கண்களும்
மனதை இன்னும் பயமுறுத்தின.
இருப்பினும் இயற்கை அழகாகத்தான் இருந்தது.
நான் இலக்கிய மாணவனாயிற்றே.
தட்டுத்தடுமாறி கீழருவி வந்து சேர்ந்தேன்.
கிடைத்ததில் இன்பங்கொண்டு நீராடுகையில்
அங்கேயே குடியிருக்கும் பாட்டி எச்சரித்தார்.
'தம்பி மேல ஒரு அருவி இருக்கு
சிறுத்தை எல்லாம் தண்ணி குடிக்க
அங்கதான் வரும்.
பாறைகள்ல விழுந்து நாலஞ்சி பேரு
செத்துருக்காக....போயிராதிய.'

சித்தரைத் தேடும் முயற்சியில் ஒரு
சீடரைக் கண்டு வினவிய என்
நண்பர்கள் குகைவிட்டு வெளிவந்தனர்.

அனுபவம் அழகாயிருந்ததால்
அவ்வளவாகத் திட்டவில்லை.

Saturday 4 May 2013

வதங்கும் வாலிபம்

இளம் குற்றவாளிகள் இல்லம் நான்கில்
ஒரு மாத முகாம்.
கடந்த ஆண்டு அனுபவங்கள் கைகொடுத்தன.

பொறுப்புகள் இல்லைதான் - ஆனாலும்
மனங்களில் வேதனைகளும்
முகங்களில் சோகங்களும் அப்பிக்கிடந்தன.
இளைய இரத்தம் சூடாக இருப்பதால் என்னவோ
எதையுமே கூலாக செய்து விடும் பருவம் இது.
அது நகை பறிப்பதாகட்டும்
உயிர் பறிப்பதாகட்டும்.
செயல் முடிந்த பிறகும் அல்ல
ஜெயில் வந்த பிறகு
நித்திரை இல்லாத நிந்தனையில்தான்
சிந்தனைத் தெளிவு வருகிறது.
நான் ஒரு தூண்டுகோல்  மட்டுமே.
நண்பனானேன், அண்ணனானேன்,
அதட்டும்போது அதிகாரியுமானேன்.
மனதிற்பட்டதைப் பகிர்ந்து கொண்டேன்.

கேலன்களில் உறையும் காலனும்
கண்ணசைவில் கனிந்த காதலும்
குலம் கெடுக்கும் கூடா நட்பும்
சட்டென உதித்த கோபக்கனலுமே
மூலக்காரணமாய்ப் பட்டன.
முதலாவனே மூன்றுக்கும் முதல்வன்.

காதலினாலும் கவர்ச்சியினாலும்
கன்னிகளின் வலையில் விழுந்து
கண்ணீரில் இருந்த படிப்பாளிகள் சிலர்.
குழந்தையைக் கெடுத்தவன் சிலர்
குடும்பத்தகராறில் கொன்றவன் சிலர்.
வந்தவனெல்லாம் கொன்றவன் அல்ல
வழியோரம் சென்றவன்கூட இருந்தான்.
பல நாள் லத்தியடி வாங்கி
புத்தி மாறி போகாதிருக்கவே
செய்யாத ஒன்றை செய்தவனானான் சிலர்.
பெரும்பாலும் ஆதரவற்ற ஏழைகள்
உறவுச் சிக்கல்களில் சிக்கிக் கொண்டவர்கள்
வேடிக்கையின் விளைவாக
வேதனையில் இருப்பவர்கள்.


ஆறு, பன்னிரெண்டு, ஐந்து
சாப்பாட்டு நேரம், வானம் பார்க்கலாம்.
மீதி நேரம் ஆங்கிலேயனின் கூட்டுக்குள்தான்.
வலிமையான கால்களை
வலம்வர விடாததுதான் தண்டனை.
உடற்கழிவுகளை உள்ளேயே வாங்கிக்கொள்ளும்
வெள்ளையன் காலத்து பேசின்கள்
குடிப்பதற்கும் .....கழுவுவதற்கும்
ஒரே தண்ணீர், ஒரே இடத்தில்.
அளந்து போடப்பட்ட சோறு
அழுக்கோடு வாழ வேண்டிய கட்டாயம்.
உறவினர் தரும் உணவுப்பண்டம்
உள்ளே வருமுன்னே
காக்கிச்சட்டைகளிடம் பாதி காலி.
ஆனாலும் சுகம்தான்
விரும்பி உள்ளே இருப்பவனுக்கு.

மனது கேட்கவில்லை
இளைய நெஞ்சம் இனியும் திருந்த
வழியும் நாழியும் இருக்கின்றன.
வாழ்க்கையை வாழ வேண்டியவர்கள் இவர்கள்.
குற்றவாளி ஒரு நோயாளிதான்
அவனும் நலம் பெற வேண்டும்.

Thursday 2 May 2013

நெல்லை சந்திப்பில்...



பரந்து விரிந்த வீடு அவளுக்கு.
பல வாகனங்கள் வருவதும் போவதுமாய்.
கந்தலை அணிந்து 
கையில் துடைப்பத்துடன்
கோயில் யானை போல
ஆடி அசைந்து பெருக்கிக்கொண்டே
விகாரமற்ற பாடல்களை - செவிகளில்
விதைத்துக் கொண்டிருந்தாள்.
பயந்து ஒதுங்கிய பயணிகள் மத்தியில்
 'அந்த நாள் ஞாபகம்... 
பயமின்றி பாடிக்கொண்டிருந்தாள்.
பல் வரிசையில் 
முன் வரிசை இல்லாத வயது 
அவளுக்கு.
பல்லைப்போன்றே பாடலும்
அரைகுறையாக இருந்தது. 
கிடைத்த ஒன்றிரண்டு காசுகள் 
முந்தாணைக்குள் மூர்ச்சையாகிப் போயின.
அவசரத்தில் பஸ் ஏறிய எவனோ
ஒரு செருப்பைத் தவறவிட்டபின்
மறு செருப்பையும் எறிந்திருக்க வேண்டும்
புண்ணியவான்.
அவை இப்போது அவளின் பாதங்களில்.
ஆண்டவரும் அல்லேலூயாவும் 
அடிக்கடி வந்து சென்றன(ர்).
பக்தி முத்திப்போய் பைத்தியமாயிருக்க வேண்டும்.
பார்க்க பாவமாய் இருந்தாள்.
மகன் செய்த பாவம் அது.


பையில் இருக்கின்ற சொத்தை 
கையில் இழுத்துக் கொண்டு திரியும்
மகிழ்ச்சியான மன நோயாளிகளைக் 
கடக்கும்போதெல்லாம்
என்னவோ மனதை இடிக்கிறது.
மருத்துவச் செலவை மிச்சப்படுத்திய 
பல குடும்பங்கள் 
மனித நேயத்தைக் கொச்சைப்படுத்தி விட்டதே.

நோய் யாருக்கும் வரலாம்.
கவலைப்படாதே
பேருந்து நிறுத்தங்கள் உனக்கும் உதவலாம்.



Friday 8 March 2013

என்னைத் தெரியுமா?


நான் யாரென உனக்குத் தெரியும்
எனக்கும் தெரியும்.
உண்மையிலேயே 'நான்' யாரெனத் தெரியுமா?
எனக்குத் தெரிந்த நான் நானில்லை.
தெரிந்திருந்தால் நான் நானில்லை.
அதை உணர்ந்தவன் 
எப்படியும் இருப்பதில்லையே.
'நான்' அவனிடமிருந்தோ அவளிடமிருந்தோ 
மாறுவதில்லை.
உருவம்தான் மாறுகிறது உள்ளிருப்பது அல்ல.
எல்லோருக்குள் இருப்பதும் அதுதான்.
'நான் யாருனு தெரியுமா?' 
அரை வாளிதான் அப்படி சொல்ல முடியும்.
தெரிந்தவன் சொல்வதில்லை. 
அது தீயன செய்தாலும் கரைபடுவதில்லை
நல்லது செய்வதில் பெருமை கொள்வதில்லை.
மனிதருக்குள் மனிதம் மாறுபடுவதில்லை.

அடுத்தவர் துயரினில் மகிழாது
அவனோடு துடித்திடும்.
மனிதனின் மாண்பு அதுதான்.

இதை உணர்ந்திடும் மனிதனாய் இரு.
மனிதனாகவாவது இரு.




Wednesday 6 March 2013

யார் சொன்னால் என்ன?


நல்லவை நாலு பேரிடமிருந்து வரலாம்
அறிவுரை யாரிடமிருந்தும் வரலாம்
உண்மையாயிருந்தால் ஏற்றுக்கொள்.
யார் சொன்னால் என்ன?

சிலந்திப்பூச்சியும் பாடம் சொல்லலாம்
சிறு குழந்தையும் குத்திக் காட்டலாம்
மலர்கள்கூட மனதை நெருடி
மகிழ்ச்சியாய் இருக்க வழி சொல்லலாம்.
யார் சொன்னால் என்ன?

குடிக்காதவன் உன்னிடம் குடிக்காதே எனலாம்
குடிக்கிறவன்கூட அதையே சொல்லலாம்
யாரிடமிருந்து என்பதல்ல
'என்ன' என்பதுதான் முக்கியம்

இயேசு, கிருஷ்னா, நபிகளின் 
வரிகள் மட்டுமா இறைவார்த்தை?
மதங்களில் மனதை இழந்து விடாதே
ஆண்டிமுத்து ராசாகூட  தன் 
அனுபவத்திலிருந்து அறிவுரை கூறலாம்.
யார் சொன்னால் என்ன?

நல்லவர்தான் சொல்ல வேண்டுமென்றால்
தொல்லுலகில் எவருமிலர்.

தெள்ளிய அறிவு பெற
மனதை எப்போதும் திறந்தே வைத்திரு.
யார் சொன்னால் என்ன?



Monday 4 March 2013

மன்றாட்டு...



அபார வளமும் அசுர பலமும் கொண்ட 
என் பூமித்தாயே வாழ்க
எளியோர் மட்டுமே உம்முடன் இருக்கிறார்
அதனால்தான் அவர்கள் எளியோராகவே இருக்கிறார்.
அனைவரும் நலமோடு இருப்பது பற்றிய பசியில்
ஆண்டுகள் கழிக்கிறாய்
அதிகாரச் சுவர்களை ஆன மட்டும் 
அவ்வப்போது எட்டி உதைக்கிறாய்
புனிதப் பெண்ணே – நின் 
புனிதப்போரில் பங்குகொள்ளாமைக்கு மன்னியும்.
மக்களைப் பற்றிய கவலை 
எங்களிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.
எனது குடும்பம் மட்டுமே என் சிந்தனையில் ஓடுகிறது.
மாக்களாய்த் திரியும் நாங்கள்
மறுபடி காந்தி வந்தால் மனமாறலாம்
அதுவரை பொறுத்தருளும் தாயே.