Tuesday 25 February 2014

யார் தலைவன்?

மங்கிய நிலவொளியில் மாடியறையிலே
அங்கிருந்தார் இயேசு அன்புச் சீடருடனே
செங்குருதி வடிந்தபின் சிலுவைமீதிலே
தொங்கும் நினைவில் தொட்டெடுத்தார் அப்பமொன்று
இரண்டாய்ப் பிட்டு இது என் உடலென்றார்
இரசத்தை இது என் இரத்தமென்றார்.

அமைதியில் இரவு அற்பச் சுடராய் அசைந்தது.

மேசைவிட் டகன்று மெலிதாய்ப் புன்னகையில்
மேல்அங்கி அகற்றி இடைத்துண்டணிந்தே
சீடரின் பாதத்தில் சிரம் தாழ்த்தியமர்ந்து
நாடறியா வழக்கம்அது; நன்னீரால் கழுவினார்.

விழிநிறைத்த வியப்பை விழுங்க முடியாது
விக்கி நிற்கையில்
வாய்வரை வந்த வினாக்கள் வழியிருந்தும் 
வரப் பயந்தன.

'குருவென்றும் தலைவரென்றும் நீரெம்மை அழைக்கிறீர்
நான் குருதான், தலைவன்தான்.
குருவும் தலைவனுமான நானே 
ஓரடிமைபோல் பாதங்கழுவி பணிவிடைசெய்தால்
நீரும் அவ்வாறே செய்யும்
பணியாளனே தலைவன்.'

பேச்சு முடிந்தது
செயல் இன்னும் பேசுகிறது.


Friday 14 February 2014

காதலர் தினம்

அடிக்கடி சொல்ல வேண்டிய வாக்கியம்
எப்போதாவது சொல்லப்படும் வாக்கியம்
தவறான புரிதலின் முதலிடத்தில்
ஐ லவ் யூ

பிஞ்சுக்குழந்தைக்கு ஒரு முத்தம்
சுட்டிப்பாப்பாவுக்கு ஒரு சாக்லேட்
இளம்பெண்ணுக்கு ஒரு ரோஜா
இணையானவளோடு ஒரு இறுக்கம்

அன்பு கொடுப்பதில் உள்ளது.
மலர்கள் மட்டுமல்ல, மரியாதையும்தான்.