Saturday 25 January 2014

வளர்ந்த இந்தியா

மரத்தடியில் இரவெல்லாம் கட்டுண்டு
பனியில் கருகிய இரு மலர்கள்
காலையில் கசக்கிப் பிழியப்படும் சோகம்.

சாதி மாறி காதலிச்சது குத்தமாம்
25,000 பைன் போடுவாராம்
கட்ட பணம் இல்லைனுதனால
பொண்ண அனுபவிக்கலாம்னு 
தீர்ப்பு சொல்லுவாராம் நாட்டாமை.

மங்கல்யான் முன்னெடுத்துச் செல்வதை - சில
மிருகங்கள் பின்னோக்கித் தள்ளுகின்றன.
மூடர்கூடமாய் இன்னும் இந்தியா.
அசாத்திய கர்வத்தோடு கருவிகளும்
கூனிக் குறுகி நிற்கும் மனிதர்களும்.

வளர்ச்சிக்காக ஏங்குகிறது
தனிமனித ஒழுக்கமும்
கலாச்சாரக் கூறுகளும்.
அசுர வளர்ச்சியில் வக்கிர புத்தி.

Wednesday 22 January 2014

அவன் - இவன் (இயேசுவும் இன்றைய துறவியும்)



எளிமையான வாழ்வு கொண்டு
தான் யாரென்றறிந்து
தனக்கொரு பாதையமைத்து
தனியொரு ஆளாய்த் தடம் பதித்தவன் அவன்.
நிலத்தில் கோடு கிழித்து
சாதிச் சகதியில் மூழ்கி எழுந்து
'நாங்க இருக்கோம்' துணிச்சலில்
எதுவும் செய்யத் துணிந்துவிட்டான்.
தான் யாரென மறந்துவிட்டான் இவன்.

பரிசேயத்தைப் பகைத்தாலும்
பரிசேயனை ஏற்றுக்கொண்டு
விரும்பி விருந்துண்டான்,
கல்லாகிப்போன இதயத்தின் 
கசடு பிழிந்தான் அவன்.
விருந்துண்கிறான் இவனும்
கொடுப்பவனுக்கு ஆதரவும்
துறந்தவனுக்கு ஆதாயமும் தேவையானதால்.

பாடையைத் தொட்டான்
பிணத்தினைத் தொட்டான்
பார்வையற்ற கண்களையும்
தொழுநோய்ப் புண்களையும்
பரிவோடு தொட்டு பரிசுத்தமாக்கினான் அவன்.
'வெள்ளை அங்கி தொடாதே அழுக்கு'
பீடங்களைப் பெரிதாக்கி
தீண்டாமை தினம் வளர்க்கும் இவன்.

மங்கையரை மதித்தான்
சீடராக்கி மகிழ்ந்தான்.
விபச்சாரப் பெண்களையும்
அன்போடு அணைத்தான்.
ஏழையோடும் பாவியோடும்
இயல்பாக இருந்ததாலே
எண்ணிலாக் கொடுமைகளோடு
சிலுவையில் கொல்லப்பட்டான் அவன்.
அவன் ஆணாகிப்போனதால்
ஆணாதிக்க மதமாக்கி
நிறுவன சுகத்தில் 
ஏழைகளை எடுபிடிகளாக்கி
குடிசைக்குள் குணிந்து செல்லவும்
தவறியோரைக் கனிந்து பார்க்கவும்
தவறிவிட்டான் இவன்.
உயிரையா கொடுப்பான்?

இருப்பதைப் பகிர்வதே ஏழ்மை
இயல்பான பாசமே கற்பு
ஈகோ விலக்குவதே கீழ்படிவு.

Sunday 19 January 2014

டிக்கெட்



பிதுங்கிக்கொண்டிருந்த பேருந்தில்
விரும்பி ஏறிக்கொண்டேன்.
மிச்சமாய்க் கிடைத்த ஏமாற்றத்தை
கையில் மடித்துக்கொண்டு
டிக்கெட் வாங்காமலே நின்றிருந்தேன்.
பத்து ரூபாய் சேமித்துவிட்ட சந்தோசம்
சட்டென்று மறைந்தது.
பரிசோதகன் எப்படித்தான் கண்டுபிடித்தானோ
என்னை விடவே இல்லை.
இருப்பதை எல்லாம் பிடுங்கிக்கொள்ள
நூறு தண்டமாய்ப் போனது.
தம்பி படிச்சவன்தானே...ஏம்ப்பா இப்படி?
வழக்கமான அல்லக்கைகளின் வார்த்தைகளை
விழுங்க முடியாது விக்கி நின்றது மனம்.

பரிசோதகனின் திறமையைப் பாராட்டினேன்.
கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும 
மெத்தப் படித்த நம் அரசியல் வியாபாரிகளும்
கண்முன்னே நின்றனர்.