Tuesday 21 May 2013

வேதனை


ஓடுகிற இரயிலில் வேகாத வெயிலில்
வெயிட்டுகளைத் தூக்கிக் கொண்டு
இடம் பிடிக்க ஓடி அலைகிறேன்.
தலைகள் நிறைந்திருந்த பெட்டியில்
இடம்பிடித்து உட்கார மட்டுமல்ல
கிடைத்த இடத்தில் உட்கார்ந்தே இருப்பதும்கூட
கஸ்டமாகத்தான் இருந்தது.

பசுமையின் மடியில்...

குற்றால மலைத் தேனருவிக்கு
நண்பர்களின் அழைப்பில்
நடைப்பயணம் செய்தேன்.
எனக்கு முன்பாகவே அவர்கள்அங்கிருந்தார்கள்.
காலையும் மதியமும் சாப்பிடாததால்
எனக்கோ கொலைப்பசி.
கையில் சில பழங்களோடு
பசுமைக்காடு வழியே பயணமானேன்.
தனிமையும் தைரியமும்
மட்டுமே என்னோடு மலையேறின.
திடீர்ச் சத்தங்களில் பயம்
மெதுவாக எட்டிப் பார்த்தது.
ஒரு மணிநேர பயணத்திற்குப் பின்
செண்பக தேவி கோயில் தென்பட்டது.
அருகிலேயே அருவி இருந்தும்
அவர்கள் அங்கு இல்லை.
மூன்று மணிநேர பயணம் என்ற
அவர்களின் அலைபேசி வார்த்தைகள்
நினைவுக்கு வர,
வந்த வயோதிகரிடம் வழி கேட்டபின்
தொடர்ந்து நடந்தேன்.
குறுகலான பாதையில்
குருட்டாம்போக்கில்
பலமுறைப் பயணப்பட்டவன்போல
நடந்தேன்.
பாதையைப் பாறைகள் வழிமறிக்க
படாத பாடுபட்டுப்போனேன்.
வேர்கள் பிடித்தேன்
விழாதிருக்க விழுதுகள் பிடித்தேன்.
சருகுகள் வழுக்கிய பொழுதெல்லாம்
சாமி உதட்டில் வந்து போனார்.
மூன்று மணிநேரம் நடந்திருப்பேன்.
இரு பாறைகள் இணையுமிடத்தில்
சிறு'நீரே' வழிந்து கொண்டிருந்தது.
இதுதான் தேனருவியோ
தெரியவில்லை.
தெரிந்து கொள்ளவும் வழியில்லை.
அவர்கள் அங்கும் இல்லை.
மரணப்பாறைகளைக் கடந்து
தொடர்ந்து நடக்க எத்தனித்தேன்.
ஆனால் வலு இல்லை, பாதையும் இல்லை.
செங்குத்துப் பாறையில்
கிளை பற்றி ஏறுகையில்
எனக்கு முன்னே ஆறடி நீள பாம்புச் சட்டை.
பாம்பாகவே என் கண்களுக்குத் தெரிந்தன.
நொடிப்பொழுதில் செத்துப் பிழைத்தவனாய்
யப்பா! போதும்டா சாமி.
திரும்பி வந்திட வழி தேடினேன்.
வந்த வழியும் இல்லை, தப்பிக்க
எந்த வழியும் இல்லை.
அரைமணி நேரம் அலைந்திருப்பேன்.
பசித்த வயிறும் பயந்த கண்களும்
மனதை இன்னும் பயமுறுத்தின.
இருப்பினும் இயற்கை அழகாகத்தான் இருந்தது.
நான் இலக்கிய மாணவனாயிற்றே.
தட்டுத்தடுமாறி கீழருவி வந்து சேர்ந்தேன்.
கிடைத்ததில் இன்பங்கொண்டு நீராடுகையில்
அங்கேயே குடியிருக்கும் பாட்டி எச்சரித்தார்.
'தம்பி மேல ஒரு அருவி இருக்கு
சிறுத்தை எல்லாம் தண்ணி குடிக்க
அங்கதான் வரும்.
பாறைகள்ல விழுந்து நாலஞ்சி பேரு
செத்துருக்காக....போயிராதிய.'

சித்தரைத் தேடும் முயற்சியில் ஒரு
சீடரைக் கண்டு வினவிய என்
நண்பர்கள் குகைவிட்டு வெளிவந்தனர்.

அனுபவம் அழகாயிருந்ததால்
அவ்வளவாகத் திட்டவில்லை.

Saturday 4 May 2013

வதங்கும் வாலிபம்

இளம் குற்றவாளிகள் இல்லம் நான்கில்
ஒரு மாத முகாம்.
கடந்த ஆண்டு அனுபவங்கள் கைகொடுத்தன.

பொறுப்புகள் இல்லைதான் - ஆனாலும்
மனங்களில் வேதனைகளும்
முகங்களில் சோகங்களும் அப்பிக்கிடந்தன.
இளைய இரத்தம் சூடாக இருப்பதால் என்னவோ
எதையுமே கூலாக செய்து விடும் பருவம் இது.
அது நகை பறிப்பதாகட்டும்
உயிர் பறிப்பதாகட்டும்.
செயல் முடிந்த பிறகும் அல்ல
ஜெயில் வந்த பிறகு
நித்திரை இல்லாத நிந்தனையில்தான்
சிந்தனைத் தெளிவு வருகிறது.
நான் ஒரு தூண்டுகோல்  மட்டுமே.
நண்பனானேன், அண்ணனானேன்,
அதட்டும்போது அதிகாரியுமானேன்.
மனதிற்பட்டதைப் பகிர்ந்து கொண்டேன்.

கேலன்களில் உறையும் காலனும்
கண்ணசைவில் கனிந்த காதலும்
குலம் கெடுக்கும் கூடா நட்பும்
சட்டென உதித்த கோபக்கனலுமே
மூலக்காரணமாய்ப் பட்டன.
முதலாவனே மூன்றுக்கும் முதல்வன்.

காதலினாலும் கவர்ச்சியினாலும்
கன்னிகளின் வலையில் விழுந்து
கண்ணீரில் இருந்த படிப்பாளிகள் சிலர்.
குழந்தையைக் கெடுத்தவன் சிலர்
குடும்பத்தகராறில் கொன்றவன் சிலர்.
வந்தவனெல்லாம் கொன்றவன் அல்ல
வழியோரம் சென்றவன்கூட இருந்தான்.
பல நாள் லத்தியடி வாங்கி
புத்தி மாறி போகாதிருக்கவே
செய்யாத ஒன்றை செய்தவனானான் சிலர்.
பெரும்பாலும் ஆதரவற்ற ஏழைகள்
உறவுச் சிக்கல்களில் சிக்கிக் கொண்டவர்கள்
வேடிக்கையின் விளைவாக
வேதனையில் இருப்பவர்கள்.


ஆறு, பன்னிரெண்டு, ஐந்து
சாப்பாட்டு நேரம், வானம் பார்க்கலாம்.
மீதி நேரம் ஆங்கிலேயனின் கூட்டுக்குள்தான்.
வலிமையான கால்களை
வலம்வர விடாததுதான் தண்டனை.
உடற்கழிவுகளை உள்ளேயே வாங்கிக்கொள்ளும்
வெள்ளையன் காலத்து பேசின்கள்
குடிப்பதற்கும் .....கழுவுவதற்கும்
ஒரே தண்ணீர், ஒரே இடத்தில்.
அளந்து போடப்பட்ட சோறு
அழுக்கோடு வாழ வேண்டிய கட்டாயம்.
உறவினர் தரும் உணவுப்பண்டம்
உள்ளே வருமுன்னே
காக்கிச்சட்டைகளிடம் பாதி காலி.
ஆனாலும் சுகம்தான்
விரும்பி உள்ளே இருப்பவனுக்கு.

மனது கேட்கவில்லை
இளைய நெஞ்சம் இனியும் திருந்த
வழியும் நாழியும் இருக்கின்றன.
வாழ்க்கையை வாழ வேண்டியவர்கள் இவர்கள்.
குற்றவாளி ஒரு நோயாளிதான்
அவனும் நலம் பெற வேண்டும்.

Thursday 2 May 2013

நெல்லை சந்திப்பில்...



பரந்து விரிந்த வீடு அவளுக்கு.
பல வாகனங்கள் வருவதும் போவதுமாய்.
கந்தலை அணிந்து 
கையில் துடைப்பத்துடன்
கோயில் யானை போல
ஆடி அசைந்து பெருக்கிக்கொண்டே
விகாரமற்ற பாடல்களை - செவிகளில்
விதைத்துக் கொண்டிருந்தாள்.
பயந்து ஒதுங்கிய பயணிகள் மத்தியில்
 'அந்த நாள் ஞாபகம்... 
பயமின்றி பாடிக்கொண்டிருந்தாள்.
பல் வரிசையில் 
முன் வரிசை இல்லாத வயது 
அவளுக்கு.
பல்லைப்போன்றே பாடலும்
அரைகுறையாக இருந்தது. 
கிடைத்த ஒன்றிரண்டு காசுகள் 
முந்தாணைக்குள் மூர்ச்சையாகிப் போயின.
அவசரத்தில் பஸ் ஏறிய எவனோ
ஒரு செருப்பைத் தவறவிட்டபின்
மறு செருப்பையும் எறிந்திருக்க வேண்டும்
புண்ணியவான்.
அவை இப்போது அவளின் பாதங்களில்.
ஆண்டவரும் அல்லேலூயாவும் 
அடிக்கடி வந்து சென்றன(ர்).
பக்தி முத்திப்போய் பைத்தியமாயிருக்க வேண்டும்.
பார்க்க பாவமாய் இருந்தாள்.
மகன் செய்த பாவம் அது.


பையில் இருக்கின்ற சொத்தை 
கையில் இழுத்துக் கொண்டு திரியும்
மகிழ்ச்சியான மன நோயாளிகளைக் 
கடக்கும்போதெல்லாம்
என்னவோ மனதை இடிக்கிறது.
மருத்துவச் செலவை மிச்சப்படுத்திய 
பல குடும்பங்கள் 
மனித நேயத்தைக் கொச்சைப்படுத்தி விட்டதே.

நோய் யாருக்கும் வரலாம்.
கவலைப்படாதே
பேருந்து நிறுத்தங்கள் உனக்கும் உதவலாம்.