Wednesday 21 November 2012

அப்பனே ஆண்டவா...

ஒன்றும் புரியவில்லை எதுவும் விளங்கவில்லை குழம்பிருக்கிறேன் என்பதைதவிர. விலைவாசி உயர்வாலே நிலைகுலைந்து போனதால் உயிர்வாழ உலைவைப்பதா உயிருக்கு உலைவைப்பதா? நிஜவாழ்வைத் தள்ளிவைத்து திரைஒளியில் தனைத்தேடும் ஏழையர் நிறைந்த இந்தியா என்பதே நிதர்சனம். பட்டப்பகல் வேளையிலே நட்டநடு ரோட்டினிலே மற்றவர் பார்க்க மறித்துக்கொன்றும் விடயங்கள் எல்லாம் தடயங்களின்றிப் போவதால் விசமாகிப்போன நீதியும் வாதங்களும். மணற்கொள்ளை பகற்கொள்ளை மரம்கொள்ளை மலையும் கொள்ளை அசந்தால் ஆளையே அபேஸ் பண்ணும் அசாத்திய ஆசாமிகளுக்கு அரசிடம் பதில் இல்லை. உளருவாய் ஒருத்தன் உளறிக்கொண்டே போகிறான் 'புலிவருது' கணக்காய் புழுகிக்கொண்டே போகிறான் கூடங்குளம் ஊரிலே அவன் குடும்பம் வைப்பானோ மின்சாரத் தேவைக்கு அணுஉலைதான் தீர்வாமோ? திராவிடமெனும் திரைமறைவில் திருட்டுக்கும்பல் உலவுதிங்கே இழிச்சவாயன் தமிழர்களின் தலையெழுத்தை அழித்திடவே சாதிமறுப்புத் திருமணத்தால் சாக்கடையைக் கழுவிவிட்ட போக்குமடைப் பெரியாரின் பெரும்புண்ணிய பூமியிலே சகதி அள்ளிப்பூசிக்கொண்ட சங்கத்தலைவர் பேசுகின்றார் "சாதிவிட்டு மணம்புரிந்தால் சங்கெடுத்து விடுவேனென்று." விரும்பியவரை மணமுடிக்காது உயிர்விடும் பெண் 'வேறு' ஒருவனை மணமுடித்ததால் உயிர்விடும் தந்தை. பண்பாடாம் கலாச்சாரமாம் மானமாம் மண்ணாங்கட்டியாம் ஒன்றுமட்டும் தெரிகிறது; இங்கே வாழ நாதியில்லை. குருபூஜை எனும்பூஜை தரும்சேதி 'கொலை' பாதி. பரமக்குடி, தர்மபுரி மற்றும் பரந்த இந்தியாவில் பிறந்த குலம் இழிந்த குலம் என்னும் நிலை இருக்கும்வரை செத்துக்கொண்டே வாழ்கிறார் கையறு நிலைக்கடையர். சுற்றிச் சுற்றிப் புயல் அடித்தும் அசையாத நங்கூரமாய் பற்றியெரியும் பூமியிலே – எதைப் பற்றியும் கவலையின்றி எனக்கெ(ன்)ன வாழ்ந்துவருபவரில் என்னையும் சேர்க்க வேண்டுமோ? ஒன்றுமே புரியவில்லை. அப்பனே ஆண்டவா எப்ப நீ தோன்றுவாய்?

Tuesday 20 November 2012

செத்துப்போனா...

இரந்து வாழ்பவன் இருப்பிடம் வந்தால்
விரைந்து சென்று தாழிடுவான்
பத்துப்பைசாகூட 
பரிவோடு பறந்ததில்லை
தவறி விழுந்தாலும் 
தவறாமால் எடுத்திடுவான்.
சொந்த பந்தமில்லாமல்
சொத்து, சுகத்தை மட்டும்
பத்திரமாய் பார்த்து வந்தான்.
அந்த வருடம் அமோக விளைச்சல்.
களஞ்சியங்கள் நிறைந்ததால்
கழனியிலேயே தங்கின கதிர்கள்.
'ஐயோ என்ன செய்வேன்!'
உளறினான் உற்சாகத்தின் உச்சத்தில்.

'கிடங்குகள் பெரிதாக்குவேன் - பல
இடங்களை உரித்தாக்குவேன்
தானியம் சேமிப்பேன் - நல்ல
நாணயம் சேர்த்திடுவேன்
பெண்டு பிடித்து உண்டு குடித்து
மனமே மகிழ்ந்திரு' 
செருக்கான சிந்தனையோடு 
மெத்தையில் பொத்தென விழுந்தான்
'அட முட்டாளே'
எங்கிருந்தோ ஒரு குரல்.
செவிகளில் விழுந்தும் 
சேதி சென்று சேரவில்லை.
மீண்டும் அதே குரல் அதே வார்த்தை.
'யாரது? யா.....ர்...
வார்த்தைகள் வாயோடு ஒட்டிக்கொண்டன.
வராத எச்சிலையும் வரவைத்து 
வெடுக்கென விழுங்கினான்.
'இன்றிரவே நீ சாகப்போகிறாய்
சேர்த்த செல்வம் யாரிடம் சேரும்?
மண்ணின் சொத்து மக்குமென 
மக்கு மண்டையா நீ அறியாதோ?'
அரண்டு போனான் 
அசரீரி தந்த அதிர்ச்சியில்.

'பத்திரம்' பத்திரம்
பேச்செல்லாம் பணம்
எவனிடம் எப்படிப் பிடுங்கலாம் என
எந்நேரமும் 'எண்ணிக்' கொண்டிருப்பவன்
தன்னிடம் சொல்ல வேண்டும்
'இருப்பவை எல்லாம் நிலைப்பவை அல்ல
இறப்பது என்பது நிச்சயம் உண்டு.
தேவையானது மட்டும் சேர்த்திட்டால்- இங்கே
தேவையிலிருப்போர் மாறிடுவார்
ஏங்கியே தவிக்கும் ஏழையர் – மண்ணில்
எப்படி வாழ்கிறார் பார்த்திடுவேன்

ஏழையில் ஈசனைக் கண்டும்
ஈதலில் இன்பம் கொண்டும் 
காலம், அறிவு, திறமைதனைத்
தானாக தந்திடுவோம்





Friday 16 November 2012

நம்பிக்கை நாயகனாய்...





ஊழல்களில் ஊறித்திளைத்தும்
உம்மென்று மௌனம் காத்து
ஊமையான நீலிக்கண்ணீரோடு
ஏழைகளின் துன்பம் எங்களின் துன்பமென
கள்ள நாடகம் போடும்
குள்ளநரிக் கூட்டங்களின் விரலிடுக்கில் மாட்டிக்கொண்டு
காசுவாங்கிய காரணத்தாலே கைவிரலில் மைவைக்க
கால்கடுத்து ஓட்டுப்போட்டதால்
இருக்கவும் முடியாமல் இறக்கவும் முடியாமல்
இரண்டுங்கெட்ட நிலையில்
இமைப்பொழுதைக்கழிப்பதே இன்னலாகிப்போன
'இளிச்சவாயர்'களின் நம்பிக்கை யார்?

எவ்வளவோ நாடிருக்க
இங்குவந்து ஏன் பிறந்தேன்?
எத்தனையோ சாதியிருக்க
இக்குலத்தில் பிறந்தேனே என
அனுதினமும் அல்லல்பட்டு
அரைகுறை உயிரோடு
ஊருக்குப்புறம்பே உள்ள ஒரு காலனியில்
உள்ளே வாழ நாதியற்று
வெளியில் கழற்றப்படும் காலணியாய்
ஒரு சொட்டு மரியாதையும் 
தரும் 'மனிதர்' யாருமின்றி
வேண்டாத நகமொன்று ஒரு இஞ்ச் வளர்ந்திடினும்
ஓராயிரம் கடிபட்டு வெளியே துப்பப்படும் நிலையான
கடைநிலை மனிதர்களின் கடைசி நம்பிக்கை யார்?

போராடிபெற்ற சுதந்திரம் காக்கவே
வலிமையான போராட்டம் தேவையாய் இருக்க
இந்த பாதகத்தி அரசு
அகிம்சையை அவமதித்து
அடக்குமுறையால் மடக்கப்பார்த்தும்
துணிவோடு கர்ஜிக்கும்
ஒற்றைத்துணி காந்திகளை
கொல்லத்துடிக்கும் கோட்சேக்களின் 
இயந்திரத்தில் மாட்டிக்கொண்டு
நிலம் காக்க நீர் காக்க உடல் காக்க – பல்
உயிர் காக்க போராடும் பாமர மக்களின்
பதிலாகும் நம்பிக்கை யார்?

பிறக்கப்போகும் இறைமகனிடம் 
வேண்டுதல் ஆயிரம் இருக்க
எழுதப்பட்ட மனுக்கள்மீது
மனுமகனின் தீர்ப்பு என்ன?
மனிதனாய் பிறந்திட்ட 
மானிடமகன் வந்து சென்று
வருடங்கள் ஆயிரம் ஆனபின்பு
மறுபடியும் பிறப்பாரா - இல்லை
மறுஉலகிலேயே இருப்பாரா?
'கடவுள் நம்மோடெ'ன்றால்
மனுமகன் நீயும் நானுமன்றோ!

விடையில்லா வினாக்களுடன் 
விடியலுக்காய்க் காத்திருக்கும் இவர்களின்
நம்பிக்கை நாயகன் நாமாவோம்.

Thursday 15 November 2012

அழகான மழை


அடைமழைக்கயிறுகள் சாட்டைகளாகி
மண்ணை சவட்டுகின்றன
ஓங்கி வளர்ந்த பாதாம் மர இலைகள்
ஊடுருவும் நீரைத் தடுக்க முயல
முயற்சியில் வெற்றிகாணாது
வெறித்துப்பார்த்து கைவிரிக்கின்றன.

புதிதாக உருவான குட்டிக்குளங்களில்
விரைவாக விழும் பொட்டுத்துளிகள்
ஒரு நொடியில் உருண்டையாகி
மறுநொடியில் உடைகின்றன.
சில துளிகள் மட்டும்
பூமிப்பந்தாய் இடம்நகர்கின்றன.
சுற்றிவர நினைத்தும் சூரியன் இல்லாமையால்
மனம் வெதும்பி வெடிக்கின்றன.

அசைவற்ற செடிகள் உணர்வற்று உச் கொட்டி
வளர்ந்துவிட்ட அண்ணன்மார்களை
உதவிக்கு அழைக்கின்றன.

நனையக்கூடாது என்பதற்காகவே
கையைக் குடையாக்கி
கால்வைக்க இடம்தேடும் சிலரும்
எப்போது விடுமோ என
இடம், வலம் பார்த்து மழைசபிக்கும் இன்னும் சிலர்.

எப்போதோ விழ வேண்டிய
பாதிப்பழுத்த பழுப்பு இலைகள்
முன்மரண வேதனையில் கிளையோடு சண்டையிட்டு
முத்தமிடுகின்றன மண்ணை.
விழ மறுத்த சில இலைகள்
மறு கிளையில் தொற்றிக்கொண்டு
நமட்டுச்சிரிப்பு சிரிக்கின்றன
சாதித்துவிட்ட சந்தோசத்தில்.


ரசித்த மழையின் இருதுளி
என் கவிதையில் விழுந்து கரைபடுத்தியபோது
விரைந்து எழுந்தேன்
வலியோடு வந்த சாபத்தால்.

Wednesday 14 November 2012

சா.மு – சா.பி

(சாலக்குடி டிவைன் தியான மையத்தில் எழுதிய வரிகள்.)


இதே இடம்தான்


மூன்று ஆண்டுகளுக்குமுன் 

சிந்தனை சிதறியவனாய் 

சிரிக்க மனமில்லாது 

செத்தவன்போல் திரிந்தது 

இதே இடம்தான்.


வாழ்க்கையின் திசைகள் 

எட்டில்லாது எண்ணற்றதாக தெரிய

யாராவது திசைகாட்டுவாரா என

உண்மையானவரைத்தேடி 

உறக்கம் கெட்டுத்திரிந்ததும் 

இதே இடம்தான்


நாட்கள் நகர நகர 

துறவற வாழ்வைத் துறந்திட எண்ணி

மீண்டும் நரகத்திற்குப் போவேனோஎன

ஏக்கம் கொண்டு துவண்டுகிடந்து 

துக்கம் கொண்டாடியதும் 

இதே இடம்தான்.


நண்பர்கள் அருகிருக்க 

விடுபட நினைத்து விலகிநடந்து

முடிந்தவரையில் முயற்சி செய்து

இறைவனோடு இணைந்து 

இயற்கையோடு நடந்து 

இல்வாழ்க்கையை இதமோடு அணைக்க 

திட்டம் கொண்டு திரிந்ததும் 

இதே இடம்தான்.


அதற்கான ஆலோசனையில் திருப்திபடாது

திட்டிக்கொண்டே காத்திருந்து 

மனம் திறக்கும் முன்பே – என்

மறைவாழ்வையும்மடையெனக் கொட்டிய மற்றொருவரிடம் 

ஆச்சரியம் தாங்காது 

ஆண்டவனைக் கொண்டாடியதும் 

இதே இடம்தான்.


இதே இடம்தான்

இப்போது கொஞ்சம் தெளிவாகக்குழம்பியுள்ளேன்.

சந்தேகம் தலைகாட்டினாலும்

இதெல்லாம் சகஜமப்பா என சொல்ல

மனது பக்குவப்பட்டிருக்கிறது.


இறைஅனுபவம் வேண்டும் - 

அதற்குஎன்னையே இழக்க வேண்டும்.

என்னுள் இருக்கும் இறைவன்

என்னில் தெரிய வேண்டும்.


Sunday 11 November 2012

வலியற்றவனின் மொழி



தெருவே நாற்றமடித்தது.
அந்தப்பக்கமாய் யாரும் போவதில்லை
விலக்கப்பட்டவர் தவிர.
தொழுநோயாளியை யாரும்
தொட விரும்புவாரோ?
வலி இல்லாத அவர்களின் உடலில்
வலி இருந்தது 
புறக்கணிப்பின் எச்சமாய்.
அவ்வலியோடு வழிபார்த்தவர்
வியப்புடன் விழி விரித்தனர்.
வந்தவர் இறைமகன்.
'வராதே' வரவேண்டிய வாயில்
'வாரும், இரக்கமாய்ப் பாரும்'
வழிந்த கண்களின் வரிகளோடு 
வணங்கின அழுகியதன் மிச்சம்
விரல்கள், வராத இரவலானதால்.

பரமனின் பார்வையில் பரிவு இருந்தது.
'குருக்களிடம் காட்டுவீர்
குணம்பெற்றாயிற்று'
கடமையைச் செய்ய கால்கள் விரைந்தன.
ஒருவன் மட்டும் திரும்பி வந்தான்.
அவனோ சமாரியன் (ஒதுக்கப்பட்டவன்).
இறைவனின் பாதம் விழுந்து 
நிறைவோடு நன்றி சொன்னான்.
'பத்துப்பேரும் குணமாகவில்லையா
மற்றவர் எங்கே?'
வியப்போடு எழுந்த வினாவோடு
அவனை அரவணைக்கிறார்.

நமது பார்வை வஞ்சகப்பார்வை
நமது மனம் சுயநலம்.
குறைகளால் நிறைந்திடினும்
நிறைவாய் அருள் பெறுகிறோம்.
அன்றாட அலுவல் முடித்து
அயர்ந்து உறங்கும் முன்பு
ஐந்து நிமிடம் அலசிப்பார்த்தால் - அகத்தில்
அகப்படும் ஆண்டவன் அன்பு.

நன்றியுள்ள மனதில்தான் 
அன்பு தங்கும்
அன்பு இறைவனும்தான்.

Thursday 8 November 2012

இதிலென்ன இருக்கிறது?




சின்னச் சின்ன விசயங்கள்தான்

நம்மை நமக்கும் 

நம்மிடையேயிருப்போருக்கும்

யாரெனக் காட்டுகின்றன.


6 மணிக்கு எழ நினைத்தேன்

6.15ஆகிவிட்டது.

விலகிய போர்வையை இழுத்துப்போர்த்தினேன்.

முகம் கழுவ  ஐந்து நிமிடம் போதாதா?

இதிலென்ன இருக்கிறது?


7.15 பாடம் படிக்க.

பரவாயில்லை, படித்துக்கொள்ளலாம்

விரிந்த விரல்கள் விகடன் எடுத்தன.


8 மணிக்குச் சாப்பாடு

ம்... சாப்பிடுவோம்

எங்கே போகப்போகிறது?


நாட்கள் நகர்கின்றன.

நான் எடுத்த தீர்மானத்திற்கும்

நடைமுறைப்பழக்கத்திற்கும் நடுவே

மாட்டிக்கொண்ட என் சுயம்

பதிலில்லாமல் பல்லிளிக்கிறது.


காலம் தவறுவதோ, கடமையை மறப்பதோ

பெருங்குற்றமல்லதான் - ஆனால்

பெருமாற்றம் நிகழும் மனதில்.

எடுத்த பொறுப்பை முடிக்க நினைக்கையில்

விழுந்து சிரிக்கும் மனம்.

'நீயாவது இத செய்றதாவது'

மற்றவர் சொல்லுமுன் பிதற்றிடும் எண்ணம்.

உன்மீது நம்பிக்கை உனக்கில்லாது போகும்.

விளைவு, 

திட்டங்கள் தீர்மானங்களாகவே இருக்கும்.


உணர்வுக்கு மட்டும் இடமளித்தால்

இழப்புக்கு மேலும் உணவளிப்பாய்

உன்னை ஆள வேண்டியது நீ

உணர்வுகள் அல்ல.



Thursday 1 November 2012

அரைகுறை ஆண்மை



 அற வழியில் போராடினோம்
ஆணவம் கொண்ட ஆங்கிலேயரும் 
அடி பணிந்தனர்.
வெறுங்கை முன் துப்பாக்கி 
எழக்கூட முடியவில்லை.
அவனிடம் இருந்தது 
ஆயுதம் மட்டுமல்ல
ஆண்மையும்தான்.

மீண்டும் அறவழிப் போராட்டம்
ஆண்டுகளாக, மாதங்களாக, நாட்களாக
கத்தியின்றி, ரத்தமின்றி தொடர்கிறது.
கின்னசில் ஏறினால் வெட்கப்பட வேண்டும் அரசு.
லத்தி வைத்துள்ள காவல்துறை 
பாமர மக்களை பலவந்தமாக அடிக்கிறது.
உரிமைக்காக குரல் கொடுத்த நிராயுதபாணியை 
துப்பாக்கி கொண்டு சுட்டுக்கொன்ற ஆண்மை.
வீரம் வீரம் அடேங்கப்பா...
ஸ்காட்லாந்துப் போலிசுக்கு இணையான வீரம்.

ஒன்று மட்டும் நிச்சயம் 
ஆங்கிலேயக் காவலர்களை விட
சுதந்திரத்தியாகிகளை  சுட்டுக்கொன்றது 
அவனுக்கு வேலை செய்த 
ஆண்மையற்ற இந்தியரே .