Monday 30 April 2018

மரணிக்கும் மனசாட்சிகள்

கத்துகிறார்கள், கதறுகிறர்கள், கூச்சலிடுகிறார்கள்
பரிதாபமாகத்தான் கடந்துபோகிறேன்.
பங்கெடுக்க ஆளில்லை.
மாட்டுக்குச் சேர்ந்த கூட்டம் - வாடும்
மனிதனுக்கு ஏன் கூடவில்லை?
“நான் விவசாயி இல்லை” என்பதாலா?
கொழுத்த ஊதியம் வாங்கும் ஊழியருக்கும்
வியர்த்து உழைக்கும் விவசாயிதானே கடவுள்!
வருமானம் வரும் வழிகள் அதிகரித்துவிட்டதால்
அவனது இரத்தம், கண்ணீர், வியர்வை
துர்நாற்றத்தைத்தான் தருகிறதோ?
ஆம். அதனால்தான் எரிச்சலோடு முனங்குகிறேன்
“ஏன் எந்நேரமும் போராடி மக்களுக்கு இடையூறு செய்யனும்?”
அபாயம்
மக்கள் லிஸ்டில் விவசாயி இல்லை.
கிராமங்கள் அந்நியமாக்கப்படுகின்றன.
விவசாயி தீண்டத்தகாதவனாகிவிட்டான்.

Sunday 15 April 2018

மதவெறி இரதவெறி இரத்தவெறி

ஆடு மாடு குதிரை மேய்க்கும்
ஏடுதொடாத ஏழைச்சிறுமி அவள்.
ஆலய கருவறைக்குள் அலங்கோலப்பட்ட
கத்துவா கிராமத்து கத்தாத செம்மறி அவள்.
பக்தனையாக் கொல்வது என்ற பதட்டத்தில்
ஆயுதமிருந்தும் இருந்தும் கண்மூடினார் தேவி.
சிறுவர்கள் முதியவர் காவலர் என
காமக்கயவர்களின் கரங்களில் காய்ந்துபோனாள் அவள்.
காரணம், அந்த குடும்பம் வெளியேறனும்.
இந்துப் பகுதியில் இஸ்லாமியன் ஏன்?
குடும்பம் சிதைந்தது நினைத்தது நடந்தது.
மூன்று மாதங்களாக இந்துத்துவா அமைப்பு
பணம் கொடுத்து பதுக்கியது.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அமைதி துறந்த
அற்ப தலைவர்தான் நமது பிரதமர்.
குஜராத்தில் இவர்கள் நடத்தாத அக்கிரமா?
பா.ஜ.க வின் முதல்வெறி என்பது சாதி,மதவெறியே.
கயவர்களைக் காப்பாற்றும் மந்திரிகளா
இந்தியாவை வல்லரசாக்குவார்கள்?
நாய்களுக்குக்கூட நாகரீகம் தெரியும். இந்தப்
பேய்களுக்கா மூளை, இதயம் இருக்கும்?

Friday 13 April 2018

விழிகள் விசாலமாகட்டும்

இன்றா தமிழ்ப்புத்தாண்டு என்று
அன்றே மண்டையை சொரிந்தார் கலைஞர். ஆனால்
இன்றுதான் அந்த மகான் பிறந்தார்.
அறிவை ஆயுதமாக்கி பகுத்தறிவை மூலதனமாக்கி
தெளிவான சிந்தனையால் இந்தியாவின் சிற்பி.
வரலாற்றில் வீழ்த்தப்பட்டவர்களாய்க் கிடந்த
தாழ்த்தப்பட்டவர்களின் தலைமைப் போராளி
அண்ணல் அம்பேத்கர்.
தேசியத் தலைவரை சாதியத்தலைவராக மட்டும் 
பேசித்திரியும் கினற்றுத்தவளைகள்தானே நாம்.
விழிகள் விசாலமாகட்டும்.

Sunday 8 April 2018

நமோவின் கொபசெ எபசா

காற்று நச்சாகுமென்று ஸ்டெர்லைட் வேண்டாம் என்றோம்
வெட்டியான்களுக்கு வேலை கிடைக்கும் என
பெட்டி வாங்கினார் இதயதெய்வம்.
மயான அமைதியில் மக்கள் அரசு.
ஏற்றத்தாழ்வு கல்விமுறையால் நீட் வேண்டாம் என்றோம்
நம்பவைத்து கம்பி நீட்டினர், 
மலைவளம் அழியும் என்று நியூட்ரினோ வேண்டாம் என்றோம்
நியு இந்தியா இதுவென்றனர் 
விவசாயம் அழியும் மீத்தேன் வேண்டாமென்றோம்
சமைக்க கேஸ் வேண்டுமே என்றனர்
எதை சமைக்கப் போகிறோம்?
சாவான் மீனவன் என சாகர்மாலா வேண்டாம் என்றோம்
கிறித்தவர்கள் வளர்ச்சியின் எதிரிகள் என்றனர்
விவசாயி சாகிறான் காவிரியில் நீர் வேண்டுமென்றோம்
வார்த்தை விளங்கவில்லை என வாய்தா கேட்கிறான்
ஏமாற்றுக்காரர்களை விமானத்தில் ஏற்றிவிட்டு
ஏமாறும் ஏழைகளைக் கொன்றுவிட்டு 
வளர்ச்சி வளர்ச்சி என இராணுவ கண்காட்சியில்
மலர்ச்சியோடு பேசவிருக்கிறான்.
தாலி அறுத்த தாடிக்காரன்.

Friday 6 April 2018

கண்கலங்கும் காவிரித்தாய்...



கொளுத்தும் வெயிலில் புதைந்து மணலில்
படுத்துக்கிடக்கும் முதியோர் பலர்.
விளையவைத்த விவசாயிகளே
விலைக்கு வாங்கும் நிலையில் விட்ட
வெள்ளை வேட்டிக்காரர்களை என்ன சொல்லி கொல்லுவது?
பொன்னி நதியில் தண்ணீர் கேட்டு
தன்னுடல் வருத்தி விடுப்பது என்ன?
நரைத்துப்போன கிழ வயதில் நடத்துகிறேன் புரட்சி
புளுத்துப்போன சாதிமத உணர்வுகளை விரட்டி
திரைஒளியில் புரட்சி நடத்தும் போலிகளை விடுத்து
இளவயதில் ஒன்றுசேர், கற்பி, போராடு நண்பா.
என் வீடு, என் பிள்ளை, என் வேலை என்றுனை
நத்தையாய் சுருக்கும் சுயநல ஓட்டை உடைத்து
பாரடா, மானுடப் பரப்பைப் பாரடா.
சோறு திங்கும் உனக்கும் சேர்த்துதான் போராடுகிறேன்.
மதிய வெயிலுக்கு அஞ்சி மானத்தை இழப்பாயா - இல்லை
புதிய உணர்வு கொண்டு பொங்கி எழுவாயா?

Tuesday 3 April 2018

நாம் தமிழர் என்போம்…

வடக்கின்று எரிகிறது, வரலாறு திரிகிறது
சொடக்கொன்று போட்டாலே படக்கென்று வந்துநிற்கும்
நாயென நினைத்தான், நக்கிப்பிழைக்கச் சொன்னான்.
உச்சசாதி மன்றத்தின் உத்தரவை உடைத்து
திமிறி எழுந்தான், துணிந்து நடந்தான்.
வீதியில் நிற்கும் ஒடுக்கப்பட்டோர் கூட்டம்.
பணிந்தது மைய அரசு, துணிந்தது அப்பீலுக்கு.
அகிலம் போற்றும் தமிழகத்தில் அமைதிப் போராட்டம்
அகிம்சைக்கு என்று கிடைத்தது நீதி?
ஏசிகள் நடுவில் பளபளக்கும் வெண்மையில்
பல்லிளிக்கும் பணந்தின்னி கூட்டமொன்று
ஓசி பதவியில் ஒட்டிக்கொள்ள உண்ணாவிரதமாம்.
மானத்தமிழனின் அடிப்படை உரிமைகளை தாரைவார்த்த
ஈனப்பெருச்சாளிகளின் காவிரி நாடகத்தைக் காணும்போது
கேனப்பயல்களுக்குத்தானய்யா இன்னும் ஓட்டுப்போடுறானுங்க
என்று ஏசத் தோன்றுகிறது.
வெள்ளைத்தோலின் மினுமினுப்பில் மிதந்தான்
ஆட்டக்காரியில் கால் அடியில் விழுந்தான்
இனியாவது தமிழனுக்கு சொரணை இருக்குமா?