Saturday 17 March 2012

நெருப்புப் பறவையின் நெடுங்கனவு

கலைந்த கூந்தலோடு 
கனலாக எரியும் கண்களோடு
வெண்ணாடைக்குள் ஒளிந்துகொண்டு 
விண்ணக தேவதை மண்ணகம் வந்தாள்
மணிப்பூர் சென்றாள்.

இருப்பேனா இறப்பேனா என்ற பயமற்று
ஆன்மாவை ஆண்டவனிடம் கொடுத்துவிட்டு, 
உடலை மட்டும் வைத்து 
உலகையே உலுக்கி எடுக்கிறாள்.

இந்தியாவைக் காக்க வேண்டி 
இன்னுயிர் தர வேண்டிய இராணுவம் 
இவ்வளவு வக்கிரத்தோடும் 
வன்முறையோடும் 
இருப்பது கண்டு இவள் நோகிறாள்.

பறந்து திரியும் பட்டாம்பூச்சி போல
வாழத் துடிக்கும் வாலிபப் பருவத்திலேயே 
வாளெடுக்க வழியற்று - பல
வருடங்களாய் வயிற்றை மட்டுமல்லாது 
மனதையும் கறைபடாது 
காலியாக வைத்திருக்கிறாள்.



சவக்கிடங்கு போவதற்குள் 
சாதிக்க வேண்டி சத்தியம் செய்து 
சகாரா குழந்தை போல சத்தில்லாது 
தினமும் செத்துக்கொண்டிருக்கிறாள்.

சீருடைக்காரர்கள் சிறைவைத்தாலும் - இந்த 
சின்னப் பறவை நம்மை சிந்திக்க அழைக்கிறது.

இரோம் ஷர்மிலா
இன்னும் நீர் வாழ வேண்டும்
இவ்வளவு ஆண்டுப்போராட்டம் இனிதே முடிய
இன்னொரு காந்தி வர வேண்டும்.
மக்களின்  குரலாய் மகேசன் உருவாய் 
மண்ணில் தவழும் குழந்தையே - உம்
மனத்திடம் எம் மனதிடம் இருக்க வேண்டும்.

Thursday 15 March 2012

பெண் எனும் கண்

(நகரில் நாகரிகமாக இருந்தாலும் 
எனது தோழியின் அனுபவம்) 

கருவில் உருவாகி உலகில் நுழைவது ரை சிரமங்கள் பல - ஆனாலும் பிரச்சனை இல்லை 
பிறக்கப்போவது பெண் எனத் தெரியாது இருந்தால்.
பிறந்துவிட்டேன்.
களித்தோர் பலர், சுளித்தோர் சிலர்.
சுளித்தவர் எல்லாம் சுற்றத்தவர் - ஆக
துன்பமும் என்னைச் சுற்றிகொண்டே வந்தது.

சிறு வயதில் சின்ன சின்ன ஆசைகள் சிறையிடப்பட்டன.
பருவ வயதில் சிறகு வெட்டப்பட்டு 
பறக்கும் ஆசை மறக்கடிக்கப்பட்டது.
மகளிர் என்பதாலே மட்டமாக நடத்தப்பட்டேன்.
கேட்டால் பாதுகாப்பாம். 
இல்லறத்திற்கு எந்த அளவு தயாராக இருந்தேன் 
என தெரியவில்லை.
குழந்தை உள்ளம் என்னில் மாறுமுன்னே - என்
உடலின் உள்ளே இன்னொரு உயிர்.
குடும்பத்தாரின் வாழ்வுக்காகவே 
என்னை அர்ப்பணித்துவிட்டேன்.
நான் வாழ்வது வாழ்க்கையா இல்லை
வருடங்கள் நகர்கிறதா என
பிரித்துப் பார்க்க முடியாமல் நான்.
ப்ளீஸ் நான் வாழ்ந்து விடுகிறேனே
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத குழந்தை போல்.


பார்வைகளின் போதைக்கு ம் 
பாலியல் தேவைக்கும் மட்டும்தான் பெண்ணா?
பாத்திரம் தேய்ப்பதற்கும் பாய் போடுவதற்கும் மட்டும்தான் மனைவியா?
எனக்குள் மனம் இருப்பது உனக்குத் தெரியவில்லை?

மாதவிடாய் காலங்களில் மகளிரைத் தீட்டு எனக்கருதி 
சொந்த வீட்டிலேயே அகதியாக்குவது
ஆணின் அறியாமையா? ஆதிக்கமா? 

மகப்பேறு கிடைக்காதா என மரம் சுற்றி வருகையில் 
புழு பூச்சி இல்லையா என்றால் 
புழுங்கி சாவது நீயா நானா?

நீ விதைக்கும் ஒருதுளியோடு உன் 
வேலை முடிந்தது என நீ செல்லலாம்.
நான் சொல்ல முடியுமா அதற்கப்புறம் எவ்வளவு வலி என்று.



ஒருமுறை ஒரே ஒருமுறை உன் அன்னையிடம் கேள்
பெற்றெடுக்கும் வரையில் எவ்வளவு சிரமம் என்று.
பிறந்துவிட்டாய் என இருந்துவிட முடியுமா?
தூக்கம் இழந்தே துரும்பாகிப் போயிருப்பாள்
தும்மல் என்றால்கூட உன்னோடு 'அச்' போடுவாள்.
உன்னைச் சுத்தமாக்குவதற்காக அசுத்தமாவாள் - காரணம்
உன் சிரிப்பே தாய்மையின் மேன்மை.


ஆம் ஒவ்வொரு பெண்ணும் ஒரு தாய்.
உடலுக்குக் கண்தான் பிரதானம் என்றால்
உலகுக்குப் பெண்தான் பிரதானம்.
பெண் ஒரு கண்.
அந்த கண்தான் இன்று ஆணாதிக்கத்தால் 
குருடாக்கப்பட்டுள்ளது.
குத்திக்கிழித்தவருள் நீயும் ஒருவன்.
கண் சரியாக இருந்தால் மட்டுமே உலகம் தெரியும்.
பெண் சமமாக இருந்தால் மட்டுமே உலகம் அழகாகத் தெரியும்.