Thursday, 27 October 2011

விடியல் எப்போது?

விடிந்திருந்தும் விடியலுக்காய் காத்திருக்கிறேன்.


எங்கோ இருக்கும் எகிப்து
முப்பதாண்டுகால முபாரக் ஆட்சி 
முனகி முனகி மூர்சையாகிவிடவில்லை
முடிந்தவரை முட்டி பார்த்தனர் 
கிடைத்தது சுதந்திரம் - ஆனால்
முதல் உலக நாடுகளிடமிருந்து 
விடியல் எப்போது?

எட்டி விடும் தூரத்தில் இலங்கை 
எதிரி என்று எதிர்பட்ட இடங்களிலெல்லாம் 
கொல்லப்பட்டான் தமிழன் 
ஆரோக்கியமான ஆடவர் ஊனமுடன் சிறையில் 
ஐந்தும் பத்துமாக அழிந்தனர் தினமும்
பிணக்குவியலாயினர் பிஞ்சுகள் 
இருந்ததை எல்லாம் இழந்தனர் பெண்கள் 
என் கண்முன்னே ஒரு தேசம் நாசமானது
போர் முடிந்தது 
விடியல் எப்போது?



என் இந்தியா களவாடபடுகிறது 
கோடிகளைத் தின்ற கேடிகள் 
கேட்பாரற்று கேளிக்கையில் ஈடுபட- எதிர்த்து 
கேட்பவனை எல்லாம் கேவலமாக கொன்றனர்.
நல்லவனென்று நாட்டை கொடுத்தோம்
நசுக்கபடுவது நாம்தான் என யோசித்தோமா?
மக்களாட்சிதான் 
விடியல் எப்போது?


எதிர் வீட்டுக்காரன் என்பது பவுன் கேட்கிறான்
நான் ஐம்பது கேட்டால்
என் மானம் என்னாவது? என 
எள்ளளவும் நல் எண்ணமற்ற 
எண்ணற்ற எருமைகள் 
என் சகோதரிகளை கடைச்சரக்காக்கி
காசுக்கும் காமத்திற்குமாய் என்றாக்கிவிட்டனர் 
 விழித்திருக்கிறார்கள்  - ஆனால் விடியல் எப்போது?

விடிந்திருந்தும் விடியலுக்காய் காத்திருக்கிறேன்.





Tuesday, 18 October 2011

தமிழ் காக்க தயார்

ஆயிரமுண்டு இனங்கள், பல்லாயிரமுண்டு மொழிகள் 
ஆயினும்  ஏனோ தெரியவில்லை 
தமிழ்மொழிபோல் இனிதாவது 
தப்பிப் பிழைக்குமோ இனியாவது 

நாகரிக படிநிலைகள் ஐந்தென்பர் அறிஞர் 
இவ்வைந்தையும் இராயிரம் ஆண்டுகள் முன்னே 
எட்டிவிட்ட எழில் மொழியாம் நம் தமிழ் மொழி 
எந்த நாகரிகமும் எட்டாத சிறப்படா இது.
 
மனித சிந்தையில் சுயநலம் ஊற்றெடுக்குமுன்னே
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என 
எம் மனித குலத்திற்கே
 உலகக் கவிதை கண்டது தமிழே 
எப்படியோ இன்று அந்நிய மாயை அடிவரை பாய்ந்துவிட்டது.

ஆரியர், களப்பிரர், நாயக்கர், பல்லவர் என 
நல்லவரல்லாதோர் நாடாண்ட போதும் 
'யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் 
போரொடுங்கும் புகழ் ஒடுங்காது' என்று 
கம்பனின் எழுத்தாணி கக்கிய மொழியடா இது.

நாடு அடிமையாய் இருப்பினும் சொற்கள் சுதந்திர உலா வந்து 
பாரதியின் பாடலில் பாரதிதாசனின் படைப்பில் 
நெருப்பாய் கழன்று, விதையாய் விழுந்து 
விருட்சமானது செம்மொழியான தமிழ் மொழியே 

போதும் என மனம் சொல்கிறது - தமிழின் பழம்பெருமை பேசியே 
பொழுதை போக்கிவிட்டோம் 
ஆங்கில மொழியும் அறிவியல் உலகும் அரக்கபாம்பென 
மெல்ல மென்று வருகிறது
தலை தாழ்ந்த தமிழினத் தலைவர்களைத் தாங்கியது போதும். 
தலைசாயுமுன் தமிழை காக்கத் தயாரா?


Friday, 14 October 2011

திரைக்கு இரையாகும் இளைஞர்கள்


சில ஆயிரம் பேரை வாழ வைத்து 
பல லட்சம் பேரை அழித்து வரும் 
அன்யோன்யமான தீவிரவாதி - சினிமா 




கற்பனைகளில் கால் ஊன்றி பணக்கத்தைகளில் வேரூன்றி 
நிழலை நிஜமென காட்டுகிறான்.
பொய் எனத் தெரிந்தும் மெய்யை 
மெதுவாக மறந்து விடும் மனிதர்கள் நாம். 

கனவுலகில் மிதக்க
காசு கொடுத்து கொடுத்து 
கந்தலாகிப் போகிறது ரசிகனின் வாழ்க்கை.



சிவாஜி படத்தில் ரஜினியின் சம்பளம் 
15 கோடி - எவனுடைய பணம்?

கையை ஆட்டி வசனம் பேசி 
கடவுளை மிஞ்சும் அளவில் அதிசயம் செய்வார்

அண்ணா, அம்மா என கொஞ்சி பேசி 
அரசியலில் நுழைவார்.

"தலைவா"  "உயிரே" 
மாயையில் மாண்டு போகும்
 விட்டில் பூச்சிகள்
வெறி பிடித்த இளசுகள்.
கலையை கலையாக பார்த்தால்
சிலைவரை போகாதே நம் மனம்/இனம் .

முத்திரை குத்திவிட்டனர் 
சிந்திக்காதவரை தமிழன் இளிச்சவாயனே.



Friday, 23 September 2011

உங்களில் பாவமில்லாதவன் ...

இரண்டு நாடுகளின் சம்மதத்தோடு 
இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது 
ஈழ நாட்டை இலங்கையோடு இணைப்பதுதான் 
இந்தியத் தலைகளின் உள்நோக்கம். 

மூன்று ஆண்டுகளில் இப்படை செய்த சேவைகளாவன:
தமிழர்வீட்டு தங்கம் இவன் சொத்தானது.
எட்டாயிரம் பேருக்குமேல் தமிழர் கொலை
புலியையே பார்த்திராதவன்போல 
பார்த்தவனை எல்லாம் புலியாக நினைத்து கொன்றது 
ஆயிரம் பெண்களுக்குமேல் கற்பழிப்பு 
பருவமடைந்த குமரி முதல் 
பாடாதி கிழவி வரை

இதன் உச்சகட்டம் 
அறுபத்தி ஒன்பது வயது பாட்டி கற்பழிப்பு கண்டு
அந்நாட்டு பிரதமர் பிரேமதாசாவே 
அமைதிப்படையை அப்புறபடுத்த உத்தரவிட்டார்.
காரி துப்பப்பட்டு கழுதைமேல் ஏற்றாத குறையாக 
வீடு வந்து சேர்த்தவர் வி.பி. சிங் (புண்ணியவான்)

வீதியில் கிடந்த சாணியை 
வாயில் போட்டுக்கொண்ட ராஜீவ் காந்தி 
இதன் விளைவாக கொல்லப்பட்டார்.
திட்டமிட்டவர்கள் எல்லாம் 
சயனைடின் உதவியால் சமாதி ஆயினர்
செத்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது
கையில் கிடைத்த மூன்று பேருக்கு தூக்கு 
தண்டனையை நிறைவேற்ற காங்கிரஸ் உண்ணாவிரதம் 

அடப்பாவிகளா!
அமைதிப்படை மூலம் கொன்னீங்க 
கடைசிப்போரில் அறுபதாயிரம் பேர கொன்னீங்க 
இன்னும் நெலம மாற முயற்சி எதுவும் எடுக்கல 
இதுல இலங்கைக்கு வக்காலத்து வேற 
இன்னுமா உங்க  கொலைவெறி அடங்கல?
தமிழ்நாடு வாழ்க!



Thursday, 22 September 2011

மரணிக்கும் மனங்கள்

ஆதியில் ஆண்டவன் படைத்தான்
மனிதன் குறையின்றி வாழவே படைத்தான் 
தனியே இருந்த ஆணுக்கு 
துணையாய் சேர்ந்தாள் பெண் 
இருவரும் இணைந்தாலும் இறைவனின்றி
உயிர் இல்லையே - உயிர் கொடுப்பவன் அவனே 
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என 
வாழ்ந்தவர் நாடல்லவா இது 
மானிட உயிரை மாய்த்திட - நெஞ்சம்
எளிதில் துணிந்தது ஏனோ?
கொலை செய்பவனெல்லாம் கொல்லப்பட வேண்டும் என்றால் 
கோடிபேருக்கு மேல் சாக வேண்டுமே நம்நாட்டில் மட்டும்.

ஆராய்ந்து பார்த்தால் அம்பலமாகும் 
பணம் இருப்பவனுக்கு அல்ல - திருந்திய 
மனம் உள்ள எளியவருக்கு மட்டுமே மரணதண்டனை.


Wednesday, 21 September 2011

கலைமகள் கண் திறந்திருந்தால்...

அழகான கிராமம்
வளமான வயல்கள் 
வழியில் வசதியான வீடுகள் - பல
வசதியோடு வீதிகள்
வளைந்து நெளிந்து போகும் பாதையில் 
வம்பிழுக்கும் இளசுகள்.
தார்ச்சாலை முடிந்ததும் மண் சாலை ஆரம்பம்
ஒட்டிய வீடுகளின் ஓரங்களில் சேரும் சகதியும்
உள்ளே வருவோரை வழுக்கிவிட தயாராக
பார்க்கும் குழந்தைகளில் புன்னகை
படிப்பவர்களிடம் மரியாதை
விரைவாக வேலை முடித்து
புத்தகம் எடுத்து படிக்க விரைந்தோடும்
கிழிந்த டவுசர்களும் ஒட்டுபோட்ட பாவாடைகளும் 

கலைமகள் கொஞ்சம் முன்பே கண்திறந்திருக்கக் கூடாதா? 


Monday, 19 September 2011

ஏற்றுகொள்வாயா?


ரிமோட்டைத் தட்டியவுடன் தடுமாறினேன்
டிவியில் அழகான அரவாணி காம்பியரிங் செய்துகொண்டிருந்தாள்.
முதலில் வந்தவர் சரவனன் என்ற வித்யா
ஒரு எழுத்தாளர்
தான் அரவாணியான கதை சொல்லியபோது
தாரைதாரையாக கண்ணீர் - இருவர் கண்ணிலும்
M.A வரை படித்தது தமிழ்ப்பல்கலைக்கழகம்
அதிகம் படித்தும்
அரவாணி என்பதாலேயே பிச்சை கேட்க நேரிடும் சூழல்
ஒருமுறை அவருடைய கல்லூரி ஆசிரியரே
பிச்சையிட்ட கொடுமை.
அடக்கடவுளே!
எத்தனைமுறை நாம் அவர்களைப் பார்த்தவுடன் இளித்திருப்போம் ஏளனத்தோடு.
யோசித்துப்பார்
அவர்கள் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை
அரவணைக்க ஆட்கள் இல்லை
அண்ட வீடு இல்லை
அடுத்தவர் ஆசையோடு பேசுவதுமில்லை.
வேலைசெய்யத் தயாராயிருந்தும்
கூப்பிட நீயுமில்லை, நிறுவனங்களுமில்லை
அவர்களும் மனிதர்களே.
நாம் ஏங்கும் அன்பு, காதல், பாசம்
அவர்களுக்கும் உண்டுதானே.
அரவாணியானது குறைபாடு அல்ல
அது இயற்கை

நாளை உன் குழந்தையும் அரவாணியாகலாம். ஏற்றுக்கொள்வாயா?