Tuesday, 18 October 2011

தமிழ் காக்க தயார்

ஆயிரமுண்டு இனங்கள், பல்லாயிரமுண்டு மொழிகள் 
ஆயினும்  ஏனோ தெரியவில்லை 
தமிழ்மொழிபோல் இனிதாவது 
தப்பிப் பிழைக்குமோ இனியாவது 

நாகரிக படிநிலைகள் ஐந்தென்பர் அறிஞர் 
இவ்வைந்தையும் இராயிரம் ஆண்டுகள் முன்னே 
எட்டிவிட்ட எழில் மொழியாம் நம் தமிழ் மொழி 
எந்த நாகரிகமும் எட்டாத சிறப்படா இது.
 
மனித சிந்தையில் சுயநலம் ஊற்றெடுக்குமுன்னே
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என 
எம் மனித குலத்திற்கே
 உலகக் கவிதை கண்டது தமிழே 
எப்படியோ இன்று அந்நிய மாயை அடிவரை பாய்ந்துவிட்டது.

ஆரியர், களப்பிரர், நாயக்கர், பல்லவர் என 
நல்லவரல்லாதோர் நாடாண்ட போதும் 
'யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் 
போரொடுங்கும் புகழ் ஒடுங்காது' என்று 
கம்பனின் எழுத்தாணி கக்கிய மொழியடா இது.

நாடு அடிமையாய் இருப்பினும் சொற்கள் சுதந்திர உலா வந்து 
பாரதியின் பாடலில் பாரதிதாசனின் படைப்பில் 
நெருப்பாய் கழன்று, விதையாய் விழுந்து 
விருட்சமானது செம்மொழியான தமிழ் மொழியே 

போதும் என மனம் சொல்கிறது - தமிழின் பழம்பெருமை பேசியே 
பொழுதை போக்கிவிட்டோம் 
ஆங்கில மொழியும் அறிவியல் உலகும் அரக்கபாம்பென 
மெல்ல மென்று வருகிறது
தலை தாழ்ந்த தமிழினத் தலைவர்களைத் தாங்கியது போதும். 
தலைசாயுமுன் தமிழை காக்கத் தயாரா?


No comments:

Post a Comment