Thursday, 17 December 2015

என்ன ..........க்கு போராடுறோம்?




கேட்கவே கேவலமாக இருக்கிறது
பீப் சாங்
கேட்க நாதியற்றுக் கிடக்கிறது 
தமிழகத்தின் அரசியல்.

சர்வ சாதாரனமாக அரை டஜன் கெட்ட வார்த்தை இருக்கும் 
இளையோர்களின் அன்றாட உரையாடல்கள்.
கெட்ட படங்கள் பார்க்காத ஆளில்லை.
கெட்ட பேச்சு கேட்காத நாளில்லை
குடித்துவிட்டு அம்மணமாய் கிடந்து
பிள்ளைகளுக்கு முன்னாலேயே
சரளமாக கெட்ட வார்த்தை பேசும் நாம்
ஒரு பாட்டுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.

வரியாகக் கொடுத்த பணம் என்ன ஆனது?
வாழ்க்கை கொடுத்த வயல்கள் என்ன ஆயின?
வாய்க்கால்கள் கண்மாய்கள் ஏன் காணோம்?
ஆக்கிரமிப்பாளர்களை என்ன செய்தோம்?
செய்ய வேண்டிய அரசாங்கம்
கேட்பாரற்றுக் கிடக்கிறது.
இங்கே சிம்புவுக்கு எதிராக கோசமிட்டுக்கொண்டிருக்கிறோம்.
கெட்ட பாட்டு பாடிவிட்டாராம்.....

அவர்களின் அலட்சியத்தால் 
ஐநூறு பேரை இழந்திருக்கிறோம்
ஆடு மாடுகளை இழந்திருக்கிறோம்
பல்லாயிரம் கோடி நாசமாய்ப் போனது...
எவராவது அரசை எதிர்த்து போராடியிருப்போமா?
ஜட்டியில் படம் ஒட்டியவர் கைது – செய்தி
ஒட்டச் சொன்னவரும், இதுவரை ஒட்டியவர்களும்
ஏன் கைது இல்லை? மனம் கேட்டதா?
அனிருத்துக்கு எதிராக பொம்மை எரித்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழர்கள் முட்டாள்கள் என்பதை
மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம்.

அழிவு அனைத்துக்கும் ஆதிகாரணமாகி
தண்ணீரில் கால் வைக்காமலேயே
உங்கள் துக்கம் எனது துக்கம் என்ற
'மக்களின் முதல்வரின்' கொச்சைப்படுத்தும் அறிக்கையைவிட
சிம்புவின் பாடல் எவ்வகையிலும் மோசமானது அல்ல.
என்ன  ..........க்கு போராடுறோம்?

Monday, 20 April 2015

சமத்துவமே மானிட மகத்துவம்



உலகத்தின் தலை மட்டும் 
கெக்கே பிக்கேவென சிரித்துக்கொண்டிருக்கிறது.
உடலைத் தாங்கும் கால்கள்தான் 
தடுமாறிக்கொண்டிருக்கின்றன.
முதல்தர நாடுகளின் முன்னேற்றம் 
மூன்றாம் தர நாடுகளில் 
ஏக்கத்தை மட்டும் விதைத்துக்கொண்டிருக்கிறது.
இயந்திரங்கள் இறக்குமதியாகுமளவுக்கு
இன்னும் உரிமைகள் இறங்கவில்லை.
இதனால்தான் சமத்துவம் 
எட்டாக்கனியாகவே தொங்குகிறது.
எட்டியிருந்தால் எப்போதோ சந்தோசமாகியிருப்பாள்
சராசரி இந்தியப்பெண்.

முக்காடு போட்டு அலையும் முஸ்லீம் பெண்களின்,
கண்களுக்கு மட்டும் வழிவிட்டு
திரையாய் தொங்கும் சிறையை விலக்க
கைவிலங்குகள் இன்னும் கழட்டப்படவில்லை.
ஆடவரின் பார்வையிலிருந்து பாதுகாப்பாம்.
அத்தனை பெண்களுக்கு அதிபதியாயிருந்தும்
அந்த ஆண்களின் நிலை அந்தோ பரிதாபம்.

ஆணாதிக்கத்தை ஆதாமிலேயே ஆரம்பித்துவிட்டு
ஏவாளே ஏமாற்றினாள் என
எதிர்பாலை குறை சொல்லியே
வளர்ந்துவிட்ட கிறித்தவத்தை விட்டு
கிறிஸ்து வெளியேற்றப்பட்டு
ஆண்டு இரண்டாயிரம் ஆகிவிட்டது.
ஏசுவை எறிந்துவிட்டபின்
எப்படி வரும் சமத்துவம்?

படுத்துறங்கும் பகவானின் பாதம் தொட்டு வணங்கி
பணிவோடு பணிவிடை புரியும் தேவிக்கு
வீணை மீட்டி நடனமாடி
நாயகனை சந்தோசப்படுத்தத் தெரியுமே தவிர
சமத்துவம் பற்றி சத்தியமாய்த் தெரிய வாய்ப்பில்லை.
கல்லானாலும் கணவன் என
கட்டிய தாலியை கண்களில் ஒற்றிக்கொண்டு
காலம் பூராவும் கஸ்டப்பட 
கற்புக்கரசிகள் தயாராக இருக்கும்வரை
சமத்துவம் - கலைந்திடும் மேகம்தான்.

இங்கு ஆணாதிக்க வேதங்களே 
மதங்களை ஆள்கின்றன.
மதங்களை மறுபரிசீலனை செய்ய
ஆண்டவன் அவதாரம் எடுத்தாலும்
இவன் விடப்போவதில்லை.

வள்ளுவன் அழைத்தவுடன் 
வாளியை விட்டாளாம் வாசுகி
வாளியும் அப்படியே நின்றதாம்.
கேட்பவன் கேனப்பயல் என்பது தெரிந்ததால்தானே
பொய் இன்னும் வடிந்துகொண்டிருக்கிறது.
எடுபிடிக்கும் ஏவல் செய்யவும்
எவ்வளவு அடித்தாலும் எதிர்த்துப்பேசாத
எழில்மிகு மங்கையருக்குத்தான் மவுசு அதிகம்.
குடும்பப்பெண்ணாம் குத்துவிளக்காம்.

எனக்கிருக்கும் உயிர், உடல், உணர்வு, உரிமை
இவளுக்கும் உண்டு, இவள் என் சரிபாதி என
யோசிக்கிறானோ அப்போதே சமத்துவம் பிறக்கும்.
தாம் அடிமைபடுத்தப்படுகிறோம் என்ற
விழிப்புணர்வின்றி இன்னும் 
உறக்க நிலையிலேயே உழன்று திரியும் மங்கையர்
என்னால் முடியும் என
மயக்கம் தெளிந்தால் மட்டுமே
மலரும் சமத்துவம்.

ஏனெனில் சமத்துவமே மானிட மகத்துவம்.

Wednesday, 19 November 2014

அட்டக்கத்தி கலைஞர்கள் மொன்னக்கத்தி மனிதர்கள்


கருப்புப்பணம்
இலஞ்சம்
ஊழல்
விவசாயம்
தண்ணீர் தட்டுப்பாடு
இயற்கைப் பேரழிவு
இவையனைத்திற்கும் முடிவு தரும்
மீட்பருக்காய் காத்திருக்கிறோம்.
திரையின் ஒளியில் மிளிரும் கலைஞன்
உயிர் கொடுத்தாவது தீர்வு தருவான்
என இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
மாற்றங்களை ஏற்படுத்த வக்கில்லாத நாம்
கோடீஸ்வர நடிகர்களுக்காய்
வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க
மங்கையரின் விசும்பலை நிறுத்த
விரல்களை மடக்கி வீர வசனம் பேசி
எதிரிகளைத் துவசம் செய்யும்
திரைக் கூத்தாடிகள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
சண்டைக்காய் வாயிலிட்ட இரத்தத்தைத் 
துடைத்துக்கொண்டு
அடுத்த ஷாட்டுக்குத் தயாராகிறார்கள்.
கலைஞனுக்கு காவிரியும்இ கருப்புப்பணமும்
வருமானம் வாரித்தரும் கதைக்களம்
அவ்வளவுதான்.
அடுத்த நாள்
துருக்கியிலோஇ மெக்சிகோவிலோ
நடனத்துக்கான இடம் தேடுவார்.

நீரின் அருமை தெரியாது
குளங்களைஇ கால்வாய்களை
ஆக்கிரமித்துக் கட்டிய வீடுகளில்
வீணாகும் நீரை நினையாத நாம்
தண்ணீர்ப் பஞ்சம் பற்றி பேசும்
அட்டக்கத்தி தளபதிகளை
தலையில் வைத்துக் கொண்டாடி
சிலையெடுத்து சாமி கும்பிடும்
மொன்னக்கத்தி மனிதர்கள் நாம்.

ஐந்தாண்டுகள் சினிமாவை முடக்குங்கள்
தமிழகம் தழைத்தோங்கும் என ஆருடம் சொன்ன
அண்ணன் பிரபாகரன் தீர்க்கதரிசிதான்

Tuesday, 18 November 2014

திரியின் நுனியில் தீயின் நடனம்


அப்போதுதான் குத்துவிளக்கு ஏற்றப்பட்டிருந்தது.
அறையை விழுங்கி கொண்டிருந்த இருள்
மெதுவாக வெளியேறிக்கொண்டிருந்தது.
குத்துவிளக்கின் ஐந்து பக்கமும்
ஒரே மாதிரி திரிதான் வைக்கப்பட்டிருந்தன.
சுவாலைகள் சில நேரம் 
அழகான அசைவுகளோடு இடுப்பாட்டம்
ஆடிக்கொண்டது.
வேகமாகக் காற்று வீசும்போது
வீரியமாக எழுந்து எரிந்தது.

கரிகாலன் பாதங்களாய் 
கருமையை அடியில் கொண்ட
மஞ்சள் நிற மேனியில்
முகம் மட்டும் ஆரஞ்சு நிறத்தில் அதகளப்படுத்துகிறது.
உச்சதந்தலைக் குடுமியாய் முடிவேயில்லாத சருமமாக
உச்சிமீதேறிக் கொண்டிருந்தது கரும்புகை.
இருளில்தான் ஆரம்பம்
இருளில்தான் முடிவும் என்பதை
காற்றில் கரைந்துகொண்டிருந்த வெளிச்சம்
இருள் மண்டிய உலகிற்கு உணர்த்தியது.
ஒரு நொடியேனும் நேரே நிற்கத்தெரியாது
திரியின் நுனியில் தீ நடனமாடிக்கொண்டிருந்தது.

எண்ணெய் இருக்கும்வரை எரியலாம்
ஆனாலும் பிறவிப்பயனை அளித்துவிட்டுதான் 
அழிந்து போகின்றன திரிகள்.

Friday, 14 November 2014

நெருப்புப் பறவையின் நெடுங்கனவு


கலைந்த கூந்தலோடு
கனலாக எரியும் கண்களோடு
வெண்ணாடைக்குள் ஒளிந்து கொண்டு
விண்ணக தேவதை மண்ணகம் வந்தாள்
மணிப்பூர் சென்றாள்.
இருப்பேனா இறப்பேனா என்ற பயமற்று
உடலை மட்டும் வைத்து 
உலகையே உலுக்கி எடுக்கிறாள்.
இரோம் ஷர்மிளா

இந்தியா மறந்துவிட்ட போராளி.


பறந்து திரியும் பட்டாம்பூச்சிபோல
வாழத்துடிக்கும் வாலிபப் பருவத்தில்
இராணுவச் சீருடைக்காரர்கள் 
வக்கற்ற சில்லறை மனிதர்களை
வக்கிரத்தோடும் வன்முறையோடும்
சீரழித்தது கண்டு சினந்து எழுந்தவள்
வாளெடுத்துப் போரெடுக்க வழியில்லாது
உடலையே ஆயுதமாக்க
ஒரு டம்ளர் பழரசத்தோடு நிறுத்திக்கொண்டாள்.
பொதுவாக பழரசத்தோடு முடியும் உண்ணாவிரதம்
இங்கே அப்படித்தான் ஆரம்பமானது.
உதடுகள் உணவு தொட்டும்
நாக்கில் ருசி பட்டும்
வருடங்களாகிப்போனதால்
வயிறு வறண்டுவிட்டது
மாதவிடாய் நின்றுவிட்டது.

சவக்கிடங்கு போவதற்குள்
சாதிக்க வேண்டி சத்தியம் செய்து
சகாராக் குழந்தைபோல சத்தில்லாது 
தினமும் செத்துக்கொண்டிருக்கிறாள்.
இந்த நோஞ்சானைக் கண்டு
நொண்டியடிக்கிறது அரசு.
தற்கொலை என்ற பெயரிலே
சிறை வைக்கிறது.
அறப்போராட்டத்தின் மதிப்பு
காந்தியோடு புதைக்கப்பட்டுவிட்டதால்
வெட்டியான் வேலை செய்யப்போவதில்லை
நமது அரசியல்வாதிகள்.
குஞ்சுகளைக் காப்பாற்றும் தாய்க்கோழியாக 
போர்புரிய முனைந்து
நகங்களைப் பயன்படுத்தினால்
நக்சலைட்டுகளாக்கி கொன்றுவிடும் 
அவலநிலையை என்ன சொல்வது?
  
கொலை செய்வதும், தற்கொலைக்குத் தூண்டுவதும்
அரசின் கொள்கையே தவிர
அதற்கு அப்பாவிகள் காரணமல்ல.

Thursday, 6 November 2014

கற்பு


காளைகளுக்கு இல்லாதது
கயல்களுக்கு மட்டுமே என 
காலங்காலமாய் கட்டமைக்கப்பட்ட
கலாச்சாரக்கூறாகிவிட்டது
கற்பு.
கணவனை மட்டும் ‘கவனி’த்துக்கொள்வதும்
அவனை மட்டும் நினைத்துக்கொள்வதுமா?
காலையில் எழுந்து காப்பி கொடுப்பதும்
கால்களில் விழுந்து ஆசி பெருவதுமா?
கற்பின் வரையரை என்ன?

நேர்மை தவறிய மதுரைக்காக – தன்
மார்பைப் பிடுங்கிய கண்ணகி
வாழ்க்கையில் தவறிய கணவனைக் கண்டு 
என்ன செய்தாள்?
எப்படியும் இருந்துவிட்டு வருபவன்
எப்போது வருவானோ என்று காத்திருக்கவேண்டும்.
இதுதானய்யா அடிமைத்தனம்?

கடத்திய இராவணின் கைநிழல் படவில்லையெனினும்
கட்டிய கணவன் கடிந்து விழுகிறான்.
ஆசை மனைவி அன்போடு பணிகையில்
ஆக்கினை போக்க அக்கினியில் நடவென்கிறான்.
தீய்ந்தது அவ்எரி கற்பின் தீயினால் - ஆக
எரித்திருக்க வேண்டும் தீயவனை.
மனதில் நினைத்தவன் மரியாதை தந்தான்
மணத்தில் இருந்தவன் இரணத்தில் மிதந்தான்.

இதுவரை நான் வாசித்ததேயில்லை
ஆண் கற்பழிக்கப்பட்டானென்று.
ஆணுக்கு கற்பில்லையா - இல்லை
அழிக்கப்பட முடியாதொன்றா?

கயிறுகள் மட்டுமல்ல
கருத்துக்கள்கூட நம்மை கட்டியிருக்கலாம்.
கட்டவிழ்ப்போம்.

Monday, 20 October 2014

விலை ரூ500 மட்டும்



வாங்குறவங்க வாங்கலாம்
பேரு சாயிரா
வயசு பனிரெண்டு
விலை ஆயிரம் ரூபாய்.
அவ்வளவெல்லாம் தேராது
இந்தா ஐநூறு.
தள்ளுபடி விலையில் என்னை வாங்கினான் 
என் தாய்மாமன்.

ஒரு மாதம் படுத்து படுத்து
பாடாய்ப் படுத்தினான்.
தாகம் தீர்த்துவிட்டு
இன்னொருவனிடம் தள்ளிவிட்டான்.
சதைக்கு ஏற்றவாறு சம்பளம்
ஏத்திக்கேட்டான் மாமா.
“அவனாவது நல்லா வச்சுக்கனும்”
எனது வேண்டுதலை
கடவுள் கண்டுகொள்ளவேயில்லை.
அதே அடி, அதே அவஸ்தை.
அடிமையாகத்தான் இருந்தேன்.
ஒருவேளை சோத்துக்காக
அவனுக்கு என்னை சொர்க்கமாக்கி
எனக்கு நானே நரகமாகிப்போனேன்.
ஆசை முடிந்ததும் அடுத்த ஆள் பார்த்தான்.
நல்ல விலைக்கு விற்றுவிட்டான்.

அவரோடு இருந்தது 24 ஆண்டுகள்.
எனக்கும் அவருக்கும்
நாற்பதாண்டுகள் இடைவெளி.
நான்காண்டுகள் முன் செத்துப்போனார்.
வயதாகிப்போனதால்
என்னை வாங்க ஆளில்லை.
இளமையும் வனப்பும் இருந்த வரையில்
காஸ்ட்லியாய் இருந்தேன்.
இப்போது அடிமாட்டு விலைக்கு
வீட்டுவேலை செய்ய விற்கப்பட்டேன்.

ஒருநாள் சாப்பாட்டுக்கு மட்டும்
ஐநூறு ரூபாய் செலவு செய்யும்
எனது பேத்தி.
ஐநூறு ரூபாய் நோட்டைப் பார்க்கும்போதே
நனைந்து விடுகிறது.

இந்த ஐநூறு ரூபாயில்தானே
எனது கனவும் வாழ்வும் அழிந்தது.