காளைகளுக்கு இல்லாதது
கயல்களுக்கு மட்டுமே என
காலங்காலமாய் கட்டமைக்கப்பட்ட
கலாச்சாரக்கூறாகிவிட்டது
கற்பு.
கணவனை மட்டும் ‘கவனி’த்துக்கொள்வதும்
அவனை மட்டும் நினைத்துக்கொள்வதுமா?
காலையில் எழுந்து காப்பி கொடுப்பதும்
கால்களில் விழுந்து ஆசி பெருவதுமா?
கற்பின் வரையரை என்ன?
நேர்மை தவறிய மதுரைக்காக – தன்
மார்பைப் பிடுங்கிய கண்ணகி
வாழ்க்கையில் தவறிய கணவனைக் கண்டு
என்ன செய்தாள்?
எப்படியும் இருந்துவிட்டு வருபவன்
எப்போது வருவானோ என்று காத்திருக்கவேண்டும்.
இதுதானய்யா அடிமைத்தனம்?
கடத்திய இராவணின் கைநிழல் படவில்லையெனினும்
கட்டிய கணவன் கடிந்து விழுகிறான்.
ஆசை மனைவி அன்போடு பணிகையில்
ஆக்கினை போக்க அக்கினியில் நடவென்கிறான்.
தீய்ந்தது அவ்எரி கற்பின் தீயினால் - ஆக
எரித்திருக்க வேண்டும் தீயவனை.
மனதில் நினைத்தவன் மரியாதை தந்தான்
மணத்தில் இருந்தவன் இரணத்தில் மிதந்தான்.
இதுவரை நான் வாசித்ததேயில்லை
ஆண் கற்பழிக்கப்பட்டானென்று.
ஆணுக்கு கற்பில்லையா - இல்லை
அழிக்கப்பட முடியாதொன்றா?
கயிறுகள் மட்டுமல்ல
கருத்துக்கள்கூட நம்மை கட்டியிருக்கலாம்.
கட்டவிழ்ப்போம்.
No comments:
Post a Comment