அப்போதுதான் குத்துவிளக்கு ஏற்றப்பட்டிருந்தது.
அறையை விழுங்கி கொண்டிருந்த இருள்
மெதுவாக வெளியேறிக்கொண்டிருந்தது.
குத்துவிளக்கின் ஐந்து பக்கமும்
ஒரே மாதிரி திரிதான் வைக்கப்பட்டிருந்தன.
சுவாலைகள் சில நேரம்
அழகான அசைவுகளோடு இடுப்பாட்டம்
ஆடிக்கொண்டது.
வேகமாகக் காற்று வீசும்போது
வீரியமாக எழுந்து எரிந்தது.
கரிகாலன் பாதங்களாய்
கருமையை அடியில் கொண்ட
மஞ்சள் நிற மேனியில்
முகம் மட்டும் ஆரஞ்சு நிறத்தில் அதகளப்படுத்துகிறது.
உச்சதந்தலைக் குடுமியாய் முடிவேயில்லாத சருமமாக
உச்சிமீதேறிக் கொண்டிருந்தது கரும்புகை.
இருளில்தான் ஆரம்பம்
இருளில்தான் முடிவும் என்பதை
காற்றில் கரைந்துகொண்டிருந்த வெளிச்சம்
இருள் மண்டிய உலகிற்கு உணர்த்தியது.
ஒரு நொடியேனும் நேரே நிற்கத்தெரியாது
திரியின் நுனியில் தீ நடனமாடிக்கொண்டிருந்தது.
எண்ணெய் இருக்கும்வரை எரியலாம்
ஆனாலும் பிறவிப்பயனை அளித்துவிட்டுதான்
அழிந்து போகின்றன திரிகள்.
Superb... I still remember the saying that EVERYTHING will pass... Good or bad times are there but just for a while
ReplyDelete