கலைந்த கூந்தலோடு
கனலாக எரியும் கண்களோடு
வெண்ணாடைக்குள் ஒளிந்து கொண்டு
விண்ணக தேவதை மண்ணகம் வந்தாள்
மணிப்பூர் சென்றாள்.
இருப்பேனா இறப்பேனா என்ற பயமற்று
உடலை மட்டும் வைத்து
உலகையே உலுக்கி எடுக்கிறாள்.
இரோம் ஷர்மிளா
இந்தியா மறந்துவிட்ட போராளி.
பறந்து திரியும் பட்டாம்பூச்சிபோல
வாழத்துடிக்கும் வாலிபப் பருவத்தில்
இராணுவச் சீருடைக்காரர்கள்
வக்கற்ற சில்லறை மனிதர்களை
வக்கிரத்தோடும் வன்முறையோடும்
சீரழித்தது கண்டு சினந்து எழுந்தவள்
வாளெடுத்துப் போரெடுக்க வழியில்லாது
உடலையே ஆயுதமாக்க
ஒரு டம்ளர் பழரசத்தோடு நிறுத்திக்கொண்டாள்.
பொதுவாக பழரசத்தோடு முடியும் உண்ணாவிரதம்
இங்கே அப்படித்தான் ஆரம்பமானது.
உதடுகள் உணவு தொட்டும்
நாக்கில் ருசி பட்டும்
வருடங்களாகிப்போனதால்
வயிறு வறண்டுவிட்டது
மாதவிடாய் நின்றுவிட்டது.
சவக்கிடங்கு போவதற்குள்
சாதிக்க வேண்டி சத்தியம் செய்து
சகாராக் குழந்தைபோல சத்தில்லாது
தினமும் செத்துக்கொண்டிருக்கிறாள்.
இந்த நோஞ்சானைக் கண்டு
நொண்டியடிக்கிறது அரசு.
தற்கொலை என்ற பெயரிலே
சிறை வைக்கிறது.
அறப்போராட்டத்தின் மதிப்பு
காந்தியோடு புதைக்கப்பட்டுவிட்டதால்
வெட்டியான் வேலை செய்யப்போவதில்லை
நமது அரசியல்வாதிகள்.
குஞ்சுகளைக் காப்பாற்றும் தாய்க்கோழியாக
போர்புரிய முனைந்து
நகங்களைப் பயன்படுத்தினால்
நக்சலைட்டுகளாக்கி கொன்றுவிடும்
அவலநிலையை என்ன சொல்வது?
கொலை செய்வதும், தற்கொலைக்குத் தூண்டுவதும்
அரசின் கொள்கையே தவிர
அதற்கு அப்பாவிகள் காரணமல்ல.
No comments:
Post a Comment