Friday, 28 June 2013

இதோ என் சீடர்





யார் என் தாய்?
யார் என் சகோதரி?
இறைச் சித்தம் நடப்பரே என் தாய்.
இவள் நடந்திருக்கிறாள்.
இதோ இருக்கும் இவள்
ஏதோ என்னைப் பெற்றதனால் மட்டும் அல்ல

இளமை முதலே இறைவனோடு இருந்தவள்
இன்னலிலும் இறைவழி நடந்தவள்
பணிவுதனைக் கொண்டிருப்பினும்
துணிவினை துணியாக உடுத்தியவள்
இல்லையென்றால், 
மலைநாடு போயிருக்க முடியுமா? இல்லை
மன்னனிடமிருந்து என்னைக் 
காப்பாற்றியிருக்க முடியுமா?
இறைத்திட்டம் இதுவெனத் தெரிந்தவுடன்
இது எப்படி ஆகும் என
குறுக்குக் கேள்வி கேட்டவளாயிற்றே.

அடிமையென்று குறுக்கிவிடாதே.


தாழ்ச்சி நிறைந்தவளாயினும்
தனியே நின்று சாதித்தவள்.
வலியைத்தாங்கும் வலிமை நிறைந்தவள்.
பைத்தியக்காரனாகிப் பிதற்றுகிறான் என
சுற்றத்தாரும் எட்டி நடக்கையில்
என்னோடு இருந்து என்னோடு உண்டு
என் பணி புரிய என் வழி நடந்து
எனக்காகவே உயிர் வாழ்ந்த ஜீவன் இவள்.

உதவி தேவை தெரிந்துவிட்டால்
உற்ற நேரம் உதவிடுவாள்
உரிய நேரம் இல்லை என்றால்
நல்ல நேரம் அதுவே என்பாள்.
அழைக்கப்பட்டவரும் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்
துணியையும் தூக்கி எறிந்து ஓடுகையில்
சிலுவை வரை இவளின் துணிச்சல் 
எனக்கே வியப்பளித்தது.
எனக்கு இவள் சீடரா
இல்லை குருவா?

Monday, 17 June 2013

வீதியோரம்...

போட்டிருந்த சட்டையை சரிப்படுத்திக்கொண்டேன்.
நகர்வலம் வர கால்கள் தயாராகியிருந்தன.
முக்கிய வீதிகளில் இறங்கி கட்டிட வனப்புகளை
கடந்து கொண்டிருந்தேன்.

வாசலுக்கு மட்டும் வழிவிட்டு
சாலையோரக் கடைகளோடே
வாழ்ந்து வந்த குடும்பங்கள் பல.
தார்ச்சாலையிலேயே துவையல்
தார்ச்சாலையிலேயே குளியல்
ஞாயிற்றுக்கிழமைச் சடங்குகள் இவை
வீதிகள் காலியாகக் கிடப்பதால்.
மாற்றிக்கொள்ளும் துணிகள்கூட
மரப்பலகையிலே அடுக்கப்பட்டிருந்தன.

குடியிருந்த யாருக்கும் கூரையில்லை
கூரையிருந்த குடிசைகள் ஒன்றோ இரண்டோ.
கண்ணாடிக்குள் இருந்த இயேசு முகமொன்றை
கரையான் பாதி அரித்திருந்தது.
இரட்டைச் சடையிட்ட பதின்வயதுப்
பருவப்பெண் ஒருத்தி
பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்.
அவள் பள்ளி மாணவிதான்.
தோழிகள் முகவரி கேட்டால் என்ன சொல்வாளோ?

கடையின் வயர்களில் கனெக்சன் கொடுக்கப்பட்ட
பழைய டி.விப் பெட்டிகள்
வீதியில் நடப்போருக்கும் படம் காட்டின.
நடைபாதை வாழ்க்கையை கபலீகரம் செய்துவிட்டு
கற்பனையை மட்டும் தூண்டின.
பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருந்த
பரட்டைத்தலைப் பெரிசுகள்
பரவசமடைந்திருந்தன.

அடுத்த வீதி சென்றிருந்தேன்
கிடைத்த இடத்தில் எல்லாமே சாலைவீடுகள்.
காசு வைத்து கோலி விளையாடும்
சட்டையில்லா அழுக்குச் சிறுவர்கள். -மழை
விழுந்தால் மட்டும் நனையும் உடல்கள்
உரிந்தால் மட்டுமே நனையும் உடைகள்
சரளமாய் விழுந்த சென்னையின் செந்தமிழில்
நல்ல வார்த்தைகளைச் சலித்துதான் எடுக்க வேண்டும்.
அருகிலேயே அசிங்கங்கள் கிடக்க
விளையாட்டோ மும்மரமாகிக் கொண்டிருந்தது.
நடப்பவனுக்குத்தானே சீச்சீ
அங்கேயே இருப்பவனுக்கு என்ன!

பக்கத்து வீட்டில் பாத்திரம் முழுக்க
பிராய்லர் கோழித் தலைகளும் கால்களும்;.
கறிக்கடையின் எச்சங்களைக்
எங்கிருந்தோ வாங்கி கழுவிக்கொண்டிருந்தாள்.
'இன்னக்கி எங்க வீட்லயும் நான்-வெஜ்'
சோறு அடுப்பில் வெந்து கொண்டிருந்தது.
இரண்டு பாத்திரங்கள், தட்டுகள், ஒரு டி.வி
ஒன்றிரண்டு சாமிப்படங்கள், ஒரு தட்டுவண்டி.
இருந்த உடைகளும் களையப்பட்டு
காய்ந்து கொண்டிருந்தன.
இதுதான் ஒரு வீடு.

இவர்களின் வாழ்க்கையே இப்படித்தானா?
கேள்விகள் மனதைத் துளைத்தன.
எப்டியாவது ஒரு வீடு கட்டனும்
என்று எத்தனை எத்தனை தலைகள்
ரிட்டயர் ஆகும் வருடங்களை
வருடிக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றன.

கடவுள்களுக்கும் கோயில்களுக்கு மட்டும் பஞ்சமில்லை
பாரத சமுதாயம் வாழ்கவே...



Tuesday, 4 June 2013

அண்ணே...ஒரு கட்டிங்

ஒற்றைச்சிறையாய் சில்லறையற்ற கடையாய்
ஊரின் மையப்பகுதியில்
அடேயப்பா...
கோயிலுக்கு இணையான கூட்டம்.
என்ன! ஆண்கள் மட்டுமே அனுமதி.


இங்கே வாடிக்கையாளர்தாம் உரிமையாளர்.
மக்களின் பணத்தில்
அரசு நடத்தும் சேவை மையம்.
கம்பி இடுக்குகளில்
கைகளும் காசுகளும் மட்டுமே தெரிகின்றன.
கல்லூரி போகாத விடலைகள்கூட
'அண்ணே... ஒரு கட்டிங்...'


ஏன் நீ மட்டும்தான் அடிக்கனுமா
என் காசு என் உடம்பு
மூடிக்கின்னு போயா...
பழகிப்போன பதில்களால்
கேள்வி கேட்க ஆளில்லை.
சின்னதும் பெரிசுமாய்
இடம் மாறும் பாட்டில்கள்
நீர்த்துப்போய் சதையோடு சங்கமிக்கின்றன.


 'இப்பதான் மச்சான் சந்தோசமா இருக்கேன்'
தரைதட்டுகிறது ஜில் பீர் பாட்டில்.
உற்சாகத்தோடு உளறியது
எதிர்கால இந்தியாவின் தூண் ஒன்று.
கடைசி மடக்கில் கைலாசம் போனவன் - தன்
கைப்பேசியிடம் கலந்துரையாடல் செய்கிறான்.

'சந்தோசமா இருக்காராம்...'
கெக்கே புக்கேவென சிரித்துவிட்டுச் சொன்னது
கீழே இறங்கிய பீர் பாட்டில்
விழுந்து கிடந்து பிராந்தி பாட்டிலிடம்.
"எத்தனை குடும்பத்த அழிச்சிருக்கோம்
எத்தனாயிரம்பேர கொன்னுருக்கோம்...
இவரு சந்தோசமா இருக்காராம்.


சாதாரண வாய்த்தகறாரைக்கூட
கொலை வரைக்கும் கொண்டுபோயிருக்கோம்.
வசதியானவங்களக்கூட ஓட்டாண்டியாக்கியிருக்கோம்
கூலி ஓட்டாண்டிகளையும்
குடிகாரனாக்கி குடும்பத்தையே ஒன்னுமில்லாம
ஆக்கியிருக்கோம்..
இவரு சந்தோசமா இருக்காராம்...


இவன் பேச்ச எவனும் மதிக்கப்போறதில்ல
தங்கச்சி இருந்தாகூட தவறா நடப்பான்
என்ன சொல்றோம்.. என்ன செய்றோம்னு தெரியாத
இவரு சந்தோசமா இருக்காராம்...


வேலைக்கிப்போற எல்லாரையும்
நமக்கு அடிமையாக்கிட்டோம்
அடுத்த தலைமுறைக்கான
சேமிப்பே இல்லாம ஆக்கிட்டோம்
குடிக்கிறது ஒன்னும் தப்பில்லனு
நல்ல பேரு வாங்கிட்டோம்
இவன் பணத்தை இவன வச்சே
கொள்ளையடிக்கிறோம்..
இவரு சந்தோசமா இருக்காராம்...


நடந்ததைப் பார்த்துப் புன்னகைத்தார்
சுவரில் மாட்டப்பட்டிருந்த முதலமைச்சர்.

Tuesday, 21 May 2013

வேதனை


ஓடுகிற இரயிலில் வேகாத வெயிலில்
வெயிட்டுகளைத் தூக்கிக் கொண்டு
இடம் பிடிக்க ஓடி அலைகிறேன்.
தலைகள் நிறைந்திருந்த பெட்டியில்
இடம்பிடித்து உட்கார மட்டுமல்ல
கிடைத்த இடத்தில் உட்கார்ந்தே இருப்பதும்கூட
கஸ்டமாகத்தான் இருந்தது.

பசுமையின் மடியில்...

குற்றால மலைத் தேனருவிக்கு
நண்பர்களின் அழைப்பில்
நடைப்பயணம் செய்தேன்.
எனக்கு முன்பாகவே அவர்கள்அங்கிருந்தார்கள்.
காலையும் மதியமும் சாப்பிடாததால்
எனக்கோ கொலைப்பசி.
கையில் சில பழங்களோடு
பசுமைக்காடு வழியே பயணமானேன்.
தனிமையும் தைரியமும்
மட்டுமே என்னோடு மலையேறின.
திடீர்ச் சத்தங்களில் பயம்
மெதுவாக எட்டிப் பார்த்தது.
ஒரு மணிநேர பயணத்திற்குப் பின்
செண்பக தேவி கோயில் தென்பட்டது.
அருகிலேயே அருவி இருந்தும்
அவர்கள் அங்கு இல்லை.
மூன்று மணிநேர பயணம் என்ற
அவர்களின் அலைபேசி வார்த்தைகள்
நினைவுக்கு வர,
வந்த வயோதிகரிடம் வழி கேட்டபின்
தொடர்ந்து நடந்தேன்.
குறுகலான பாதையில்
குருட்டாம்போக்கில்
பலமுறைப் பயணப்பட்டவன்போல
நடந்தேன்.
பாதையைப் பாறைகள் வழிமறிக்க
படாத பாடுபட்டுப்போனேன்.
வேர்கள் பிடித்தேன்
விழாதிருக்க விழுதுகள் பிடித்தேன்.
சருகுகள் வழுக்கிய பொழுதெல்லாம்
சாமி உதட்டில் வந்து போனார்.
மூன்று மணிநேரம் நடந்திருப்பேன்.
இரு பாறைகள் இணையுமிடத்தில்
சிறு'நீரே' வழிந்து கொண்டிருந்தது.
இதுதான் தேனருவியோ
தெரியவில்லை.
தெரிந்து கொள்ளவும் வழியில்லை.
அவர்கள் அங்கும் இல்லை.
மரணப்பாறைகளைக் கடந்து
தொடர்ந்து நடக்க எத்தனித்தேன்.
ஆனால் வலு இல்லை, பாதையும் இல்லை.
செங்குத்துப் பாறையில்
கிளை பற்றி ஏறுகையில்
எனக்கு முன்னே ஆறடி நீள பாம்புச் சட்டை.
பாம்பாகவே என் கண்களுக்குத் தெரிந்தன.
நொடிப்பொழுதில் செத்துப் பிழைத்தவனாய்
யப்பா! போதும்டா சாமி.
திரும்பி வந்திட வழி தேடினேன்.
வந்த வழியும் இல்லை, தப்பிக்க
எந்த வழியும் இல்லை.
அரைமணி நேரம் அலைந்திருப்பேன்.
பசித்த வயிறும் பயந்த கண்களும்
மனதை இன்னும் பயமுறுத்தின.
இருப்பினும் இயற்கை அழகாகத்தான் இருந்தது.
நான் இலக்கிய மாணவனாயிற்றே.
தட்டுத்தடுமாறி கீழருவி வந்து சேர்ந்தேன்.
கிடைத்ததில் இன்பங்கொண்டு நீராடுகையில்
அங்கேயே குடியிருக்கும் பாட்டி எச்சரித்தார்.
'தம்பி மேல ஒரு அருவி இருக்கு
சிறுத்தை எல்லாம் தண்ணி குடிக்க
அங்கதான் வரும்.
பாறைகள்ல விழுந்து நாலஞ்சி பேரு
செத்துருக்காக....போயிராதிய.'

சித்தரைத் தேடும் முயற்சியில் ஒரு
சீடரைக் கண்டு வினவிய என்
நண்பர்கள் குகைவிட்டு வெளிவந்தனர்.

அனுபவம் அழகாயிருந்ததால்
அவ்வளவாகத் திட்டவில்லை.

Saturday, 4 May 2013

வதங்கும் வாலிபம்

இளம் குற்றவாளிகள் இல்லம் நான்கில்
ஒரு மாத முகாம்.
கடந்த ஆண்டு அனுபவங்கள் கைகொடுத்தன.

பொறுப்புகள் இல்லைதான் - ஆனாலும்
மனங்களில் வேதனைகளும்
முகங்களில் சோகங்களும் அப்பிக்கிடந்தன.
இளைய இரத்தம் சூடாக இருப்பதால் என்னவோ
எதையுமே கூலாக செய்து விடும் பருவம் இது.
அது நகை பறிப்பதாகட்டும்
உயிர் பறிப்பதாகட்டும்.
செயல் முடிந்த பிறகும் அல்ல
ஜெயில் வந்த பிறகு
நித்திரை இல்லாத நிந்தனையில்தான்
சிந்தனைத் தெளிவு வருகிறது.
நான் ஒரு தூண்டுகோல்  மட்டுமே.
நண்பனானேன், அண்ணனானேன்,
அதட்டும்போது அதிகாரியுமானேன்.
மனதிற்பட்டதைப் பகிர்ந்து கொண்டேன்.

கேலன்களில் உறையும் காலனும்
கண்ணசைவில் கனிந்த காதலும்
குலம் கெடுக்கும் கூடா நட்பும்
சட்டென உதித்த கோபக்கனலுமே
மூலக்காரணமாய்ப் பட்டன.
முதலாவனே மூன்றுக்கும் முதல்வன்.

காதலினாலும் கவர்ச்சியினாலும்
கன்னிகளின் வலையில் விழுந்து
கண்ணீரில் இருந்த படிப்பாளிகள் சிலர்.
குழந்தையைக் கெடுத்தவன் சிலர்
குடும்பத்தகராறில் கொன்றவன் சிலர்.
வந்தவனெல்லாம் கொன்றவன் அல்ல
வழியோரம் சென்றவன்கூட இருந்தான்.
பல நாள் லத்தியடி வாங்கி
புத்தி மாறி போகாதிருக்கவே
செய்யாத ஒன்றை செய்தவனானான் சிலர்.
பெரும்பாலும் ஆதரவற்ற ஏழைகள்
உறவுச் சிக்கல்களில் சிக்கிக் கொண்டவர்கள்
வேடிக்கையின் விளைவாக
வேதனையில் இருப்பவர்கள்.


ஆறு, பன்னிரெண்டு, ஐந்து
சாப்பாட்டு நேரம், வானம் பார்க்கலாம்.
மீதி நேரம் ஆங்கிலேயனின் கூட்டுக்குள்தான்.
வலிமையான கால்களை
வலம்வர விடாததுதான் தண்டனை.
உடற்கழிவுகளை உள்ளேயே வாங்கிக்கொள்ளும்
வெள்ளையன் காலத்து பேசின்கள்
குடிப்பதற்கும் .....கழுவுவதற்கும்
ஒரே தண்ணீர், ஒரே இடத்தில்.
அளந்து போடப்பட்ட சோறு
அழுக்கோடு வாழ வேண்டிய கட்டாயம்.
உறவினர் தரும் உணவுப்பண்டம்
உள்ளே வருமுன்னே
காக்கிச்சட்டைகளிடம் பாதி காலி.
ஆனாலும் சுகம்தான்
விரும்பி உள்ளே இருப்பவனுக்கு.

மனது கேட்கவில்லை
இளைய நெஞ்சம் இனியும் திருந்த
வழியும் நாழியும் இருக்கின்றன.
வாழ்க்கையை வாழ வேண்டியவர்கள் இவர்கள்.
குற்றவாளி ஒரு நோயாளிதான்
அவனும் நலம் பெற வேண்டும்.

Thursday, 2 May 2013

நெல்லை சந்திப்பில்...



பரந்து விரிந்த வீடு அவளுக்கு.
பல வாகனங்கள் வருவதும் போவதுமாய்.
கந்தலை அணிந்து 
கையில் துடைப்பத்துடன்
கோயில் யானை போல
ஆடி அசைந்து பெருக்கிக்கொண்டே
விகாரமற்ற பாடல்களை - செவிகளில்
விதைத்துக் கொண்டிருந்தாள்.
பயந்து ஒதுங்கிய பயணிகள் மத்தியில்
 'அந்த நாள் ஞாபகம்... 
பயமின்றி பாடிக்கொண்டிருந்தாள்.
பல் வரிசையில் 
முன் வரிசை இல்லாத வயது 
அவளுக்கு.
பல்லைப்போன்றே பாடலும்
அரைகுறையாக இருந்தது. 
கிடைத்த ஒன்றிரண்டு காசுகள் 
முந்தாணைக்குள் மூர்ச்சையாகிப் போயின.
அவசரத்தில் பஸ் ஏறிய எவனோ
ஒரு செருப்பைத் தவறவிட்டபின்
மறு செருப்பையும் எறிந்திருக்க வேண்டும்
புண்ணியவான்.
அவை இப்போது அவளின் பாதங்களில்.
ஆண்டவரும் அல்லேலூயாவும் 
அடிக்கடி வந்து சென்றன(ர்).
பக்தி முத்திப்போய் பைத்தியமாயிருக்க வேண்டும்.
பார்க்க பாவமாய் இருந்தாள்.
மகன் செய்த பாவம் அது.


பையில் இருக்கின்ற சொத்தை 
கையில் இழுத்துக் கொண்டு திரியும்
மகிழ்ச்சியான மன நோயாளிகளைக் 
கடக்கும்போதெல்லாம்
என்னவோ மனதை இடிக்கிறது.
மருத்துவச் செலவை மிச்சப்படுத்திய 
பல குடும்பங்கள் 
மனித நேயத்தைக் கொச்சைப்படுத்தி விட்டதே.

நோய் யாருக்கும் வரலாம்.
கவலைப்படாதே
பேருந்து நிறுத்தங்கள் உனக்கும் உதவலாம்.