Sunday, 29 June 2014

எங்கோ தவறு நடந்திருக்கிறது



மூன்று ஆண்டுகள் அவரோடு உண்டு உறவாடி
யார் பிரிந்தாலும் நாம் இருப்போம் என்றவர்கள்
கைது நடக்கும்போது ஒருவரைத்தவிர
மற்றவர் ஏன் ஓட வேண்டும்?

நகர்கள் பல சென்று நற்செய்தி அறிவித்த
நண்பர் கூட்டம் கைதுக்குப் பிறகு என்ன ஆனது?
புதுமைகளைக் கண்ட பலரும்
புரட்சி செய்தாவது மனுமகனை மீட்டிருக்க வேண்டுமே.
அப்பம் தின்ற ஐயாயிரம் பேர் எங்கே?

எருசலேம் நகர் இயேசுவுக்குப் புதிதில்லையே
அழுதுகொண்டிருந்த மகளிரின் மணவாளர்கள் எங்கு போனார்கள்?
'சிலுவையில் அறையும்' என கத்திய கூட்டத்தில்
நல்ல மனிதர் யாருமில்லையா?

தூக்க முடியாத சிலுவை
திக்குமுக்காடிச் சுமக்கையிலே
இரத்தம் மறைத்த கண்களில்
நித்தம் கூடிய கூட்டம் நின்றதே
விழுந்தபோது துப்புவதற்குப் பதில்
தூக்கியிருக்கல்லவா வேண்டும்.
மீட்பரை மீட்பதற்கு மனிதர் யாருமில்லையெனில்
மீட்பர் யாரை மீட்டார்?
எதிலிருந்து மீட்டார்?

எங்கோ தவறு நடந்திருக்கிறது.

Friday, 13 June 2014

மீண்டும் மீண்டும் யோசிக்கிறேன்




மீண்டும் மீண்டும் யோசிக்கிறேன்.
யாரையும் சீண்டியதில்லை
வம்பு தும்புக்குப் போனதில்லை.
உதவி தேவையெனக் கண்டால்
கேட்காமலேயே உதவுகிறேன்.
கண்ணெதிரே தவறு நடந்தால்
தட்டிக்கேட்க துணிந்து நிற்கிறேன்.
பொது இடங்களில் எச்சில், குப்பை மட்டுமல்ல
கண்டதும் கிடப்பது கண்டு
கனன்று எழுகிறேன்.
செய்தித்தாள்களில் வன்முறை கண்டு
மனம் நோகிறேன்.

ஒரு வேளை நா
ரொம்ப நல்லவனா இருக்கேனோ?

Tuesday, 10 June 2014

இக்கரைப்பச்சை



வண்டிகள் வரிசையாய்க் காத்திருக்க
விரைந்து வந்த விரைவு வண்டியைப் பார்த்து
'அங்க பாரு ட்ரெயினு' பரவசமாயின பேருந்துகள்.
குழந்தைகளின் குதூகலத்தில்
பெருமையோடு இடம் கடந்தேன் இரயிலில்.
அடுத்த நிலையத்தில் வண்டி நின்றது.
ஒரு மணிநேரம் நகரவேயில்லை.
கிராஸிங்காம்... 
'ச்சே... பேசாம பஸ்லயே போயிருக்கலாம்.'

Saturday, 1 March 2014

எனது சுதந்திரம் எதுவரை?


பத்தாயிரம் ரூபாய் செல்மாடல்கள்
பத்திரமாய் பையில் பதுங்கியிருக்க
பளபளக்கும் இரண்டாயிரம் ரூபாய் சைனாக்காரி
ஒரு கழிசடையின் கையில் சிக்கியிருந்தாள்.

விளங்காத வீர வசன ரிங்டோனை
வீதியில் போவோரும் கேட்கலாம். 
இலவசப் பண்பலை போல
இசை கலவரமாய் 
கிளம்பிக் கொண்டிருந்தது.
அருவருப்புகளும் சாபங்களும்
அவனை நோக்கியே தூவப்பட்டன.
என் போனு ... நான் கேட்கிறேன்
ஏகத்தாளமான சிந்தனையில் இருந்தான்.
ஒழுக்கத்தில் ஒன்றாம் வகுப்புகூட தேறாதவன்.

Tuesday, 25 February 2014

யார் தலைவன்?

மங்கிய நிலவொளியில் மாடியறையிலே
அங்கிருந்தார் இயேசு அன்புச் சீடருடனே
செங்குருதி வடிந்தபின் சிலுவைமீதிலே
தொங்கும் நினைவில் தொட்டெடுத்தார் அப்பமொன்று
இரண்டாய்ப் பிட்டு இது என் உடலென்றார்
இரசத்தை இது என் இரத்தமென்றார்.

அமைதியில் இரவு அற்பச் சுடராய் அசைந்தது.

மேசைவிட் டகன்று மெலிதாய்ப் புன்னகையில்
மேல்அங்கி அகற்றி இடைத்துண்டணிந்தே
சீடரின் பாதத்தில் சிரம் தாழ்த்தியமர்ந்து
நாடறியா வழக்கம்அது; நன்னீரால் கழுவினார்.

விழிநிறைத்த வியப்பை விழுங்க முடியாது
விக்கி நிற்கையில்
வாய்வரை வந்த வினாக்கள் வழியிருந்தும் 
வரப் பயந்தன.

'குருவென்றும் தலைவரென்றும் நீரெம்மை அழைக்கிறீர்
நான் குருதான், தலைவன்தான்.
குருவும் தலைவனுமான நானே 
ஓரடிமைபோல் பாதங்கழுவி பணிவிடைசெய்தால்
நீரும் அவ்வாறே செய்யும்
பணியாளனே தலைவன்.'

பேச்சு முடிந்தது
செயல் இன்னும் பேசுகிறது.


Friday, 14 February 2014

காதலர் தினம்

அடிக்கடி சொல்ல வேண்டிய வாக்கியம்
எப்போதாவது சொல்லப்படும் வாக்கியம்
தவறான புரிதலின் முதலிடத்தில்
ஐ லவ் யூ

பிஞ்சுக்குழந்தைக்கு ஒரு முத்தம்
சுட்டிப்பாப்பாவுக்கு ஒரு சாக்லேட்
இளம்பெண்ணுக்கு ஒரு ரோஜா
இணையானவளோடு ஒரு இறுக்கம்

அன்பு கொடுப்பதில் உள்ளது.
மலர்கள் மட்டுமல்ல, மரியாதையும்தான்.


Saturday, 25 January 2014

வளர்ந்த இந்தியா

மரத்தடியில் இரவெல்லாம் கட்டுண்டு
பனியில் கருகிய இரு மலர்கள்
காலையில் கசக்கிப் பிழியப்படும் சோகம்.

சாதி மாறி காதலிச்சது குத்தமாம்
25,000 பைன் போடுவாராம்
கட்ட பணம் இல்லைனுதனால
பொண்ண அனுபவிக்கலாம்னு 
தீர்ப்பு சொல்லுவாராம் நாட்டாமை.

மங்கல்யான் முன்னெடுத்துச் செல்வதை - சில
மிருகங்கள் பின்னோக்கித் தள்ளுகின்றன.
மூடர்கூடமாய் இன்னும் இந்தியா.
அசாத்திய கர்வத்தோடு கருவிகளும்
கூனிக் குறுகி நிற்கும் மனிதர்களும்.

வளர்ச்சிக்காக ஏங்குகிறது
தனிமனித ஒழுக்கமும்
கலாச்சாரக் கூறுகளும்.
அசுர வளர்ச்சியில் வக்கிர புத்தி.