மூன்று ஆண்டுகள் அவரோடு உண்டு உறவாடி
யார் பிரிந்தாலும் நாம் இருப்போம் என்றவர்கள்
கைது நடக்கும்போது ஒருவரைத்தவிர
மற்றவர் ஏன் ஓட வேண்டும்?
நகர்கள் பல சென்று நற்செய்தி அறிவித்த
நண்பர் கூட்டம் கைதுக்குப் பிறகு என்ன ஆனது?
புதுமைகளைக் கண்ட பலரும்
புரட்சி செய்தாவது மனுமகனை மீட்டிருக்க வேண்டுமே.
அப்பம் தின்ற ஐயாயிரம் பேர் எங்கே?
எருசலேம் நகர் இயேசுவுக்குப் புதிதில்லையே
அழுதுகொண்டிருந்த மகளிரின் மணவாளர்கள் எங்கு போனார்கள்?
'சிலுவையில் அறையும்' என கத்திய கூட்டத்தில்
நல்ல மனிதர் யாருமில்லையா?
தூக்க முடியாத சிலுவை
திக்குமுக்காடிச் சுமக்கையிலே
இரத்தம் மறைத்த கண்களில்
நித்தம் கூடிய கூட்டம் நின்றதே
விழுந்தபோது துப்புவதற்குப் பதில்
தூக்கியிருக்கல்லவா வேண்டும்.
மீட்பரை மீட்பதற்கு மனிதர் யாருமில்லையெனில்
மீட்பர் யாரை மீட்டார்?
எதிலிருந்து மீட்டார்?
எங்கோ தவறு நடந்திருக்கிறது.
No comments:
Post a Comment