Saturday, 25 January 2014

வளர்ந்த இந்தியா

மரத்தடியில் இரவெல்லாம் கட்டுண்டு
பனியில் கருகிய இரு மலர்கள்
காலையில் கசக்கிப் பிழியப்படும் சோகம்.

சாதி மாறி காதலிச்சது குத்தமாம்
25,000 பைன் போடுவாராம்
கட்ட பணம் இல்லைனுதனால
பொண்ண அனுபவிக்கலாம்னு 
தீர்ப்பு சொல்லுவாராம் நாட்டாமை.

மங்கல்யான் முன்னெடுத்துச் செல்வதை - சில
மிருகங்கள் பின்னோக்கித் தள்ளுகின்றன.
மூடர்கூடமாய் இன்னும் இந்தியா.
அசாத்திய கர்வத்தோடு கருவிகளும்
கூனிக் குறுகி நிற்கும் மனிதர்களும்.

வளர்ச்சிக்காக ஏங்குகிறது
தனிமனித ஒழுக்கமும்
கலாச்சாரக் கூறுகளும்.
அசுர வளர்ச்சியில் வக்கிர புத்தி.

Wednesday, 22 January 2014

அவன் - இவன் (இயேசுவும் இன்றைய துறவியும்)



எளிமையான வாழ்வு கொண்டு
தான் யாரென்றறிந்து
தனக்கொரு பாதையமைத்து
தனியொரு ஆளாய்த் தடம் பதித்தவன் அவன்.
நிலத்தில் கோடு கிழித்து
சாதிச் சகதியில் மூழ்கி எழுந்து
'நாங்க இருக்கோம்' துணிச்சலில்
எதுவும் செய்யத் துணிந்துவிட்டான்.
தான் யாரென மறந்துவிட்டான் இவன்.

பரிசேயத்தைப் பகைத்தாலும்
பரிசேயனை ஏற்றுக்கொண்டு
விரும்பி விருந்துண்டான்,
கல்லாகிப்போன இதயத்தின் 
கசடு பிழிந்தான் அவன்.
விருந்துண்கிறான் இவனும்
கொடுப்பவனுக்கு ஆதரவும்
துறந்தவனுக்கு ஆதாயமும் தேவையானதால்.

பாடையைத் தொட்டான்
பிணத்தினைத் தொட்டான்
பார்வையற்ற கண்களையும்
தொழுநோய்ப் புண்களையும்
பரிவோடு தொட்டு பரிசுத்தமாக்கினான் அவன்.
'வெள்ளை அங்கி தொடாதே அழுக்கு'
பீடங்களைப் பெரிதாக்கி
தீண்டாமை தினம் வளர்க்கும் இவன்.

மங்கையரை மதித்தான்
சீடராக்கி மகிழ்ந்தான்.
விபச்சாரப் பெண்களையும்
அன்போடு அணைத்தான்.
ஏழையோடும் பாவியோடும்
இயல்பாக இருந்ததாலே
எண்ணிலாக் கொடுமைகளோடு
சிலுவையில் கொல்லப்பட்டான் அவன்.
அவன் ஆணாகிப்போனதால்
ஆணாதிக்க மதமாக்கி
நிறுவன சுகத்தில் 
ஏழைகளை எடுபிடிகளாக்கி
குடிசைக்குள் குணிந்து செல்லவும்
தவறியோரைக் கனிந்து பார்க்கவும்
தவறிவிட்டான் இவன்.
உயிரையா கொடுப்பான்?

இருப்பதைப் பகிர்வதே ஏழ்மை
இயல்பான பாசமே கற்பு
ஈகோ விலக்குவதே கீழ்படிவு.

Sunday, 19 January 2014

டிக்கெட்



பிதுங்கிக்கொண்டிருந்த பேருந்தில்
விரும்பி ஏறிக்கொண்டேன்.
மிச்சமாய்க் கிடைத்த ஏமாற்றத்தை
கையில் மடித்துக்கொண்டு
டிக்கெட் வாங்காமலே நின்றிருந்தேன்.
பத்து ரூபாய் சேமித்துவிட்ட சந்தோசம்
சட்டென்று மறைந்தது.
பரிசோதகன் எப்படித்தான் கண்டுபிடித்தானோ
என்னை விடவே இல்லை.
இருப்பதை எல்லாம் பிடுங்கிக்கொள்ள
நூறு தண்டமாய்ப் போனது.
தம்பி படிச்சவன்தானே...ஏம்ப்பா இப்படி?
வழக்கமான அல்லக்கைகளின் வார்த்தைகளை
விழுங்க முடியாது விக்கி நின்றது மனம்.

பரிசோதகனின் திறமையைப் பாராட்டினேன்.
கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும 
மெத்தப் படித்த நம் அரசியல் வியாபாரிகளும்
கண்முன்னே நின்றனர்.


Wednesday, 4 December 2013

மாங்கல்யம் தந்துனானேனா



மழிக்கப்பட்ட மண்டை
முடியப்பட்ட ஒரு கொத்து மயிறு
பூணூல் காட்டும் மார்பு
உருண்டு திரண்டு தொங்கும் தொந்தி
எண்ணெய் வடியும் தோல்
கொழுப்பேறிப் பிதுங்கும் சதை
புரியாத மொழியில் பூசை நடத்தும்
புரோகிதன் கொடுத்தால் மட்டும் 
தாலி கட்டும் ஏழை மாப்பிள்ளை.

உன் இரத்தத்தையும் உழைப்பையும்
வாழ்க்கையின் வாய்ப்புகள் அனைத்தையும்
உறிஞ்சிக் குடித்த ஓநாயின் கரங்களிலிலா
உன் இல்லறம்?

சமர்ப்பயாமி என்றால் 'உன்னிடம் உள்ளதைக் கொடு'
ஸ்வாகா என்றால் 'பெற்றுக்கொண்டவன் விழுங்கி விடு'
பிடுங்குவதற்குத்தான் குண்டம் அமைக்கிறான்.

தெரிந்துகொள்.
திருமணச் சடங்கில்
நீ ஒரு பார்வையாளன்தான்.
ஒருபோதும் பங்கெடுப்பாளன் அல்ல.
தெளிவாகவே இருக்கிறான் அவன் 
மூடனாக நீ இருப்பதால்.
சுரண்டுபவனுக்கும் 
சுரண்டப்படுவனுக்குமிடையே உள்ள உறவு அது

Friday, 22 November 2013

சர்க்கரையாய் இரு



கோயிலுக்குச் சென்றான் பக்தன் 
திருப்பீடத்தில் பெருமையாக நின்றான்.
வருடம் ஒருமுறை புண்ணியத்தலம் செல்கிறேன்.
பிறந்த நாளில் ஆதரவற்றோர் இல்லம் செல்கிறேன்.
கோயிலுக்குக் கொட்டிக் கொடுத்திருக்கிறேன்.
ஏழைக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன்.
என் குடும்பம் நல்லா இருக்கனும்.

'உதவி செய்பவனாக அல்ல
உதவுபவனாக இரு.
இருப்பதால் கொடுக்கிறாய்
இல்லாதபோதும் கொடு.
காலம் பார்த்து கனிதராது
எப்போதும் இனிக்கும் சர்க்கரையாய் இரு.'
புன்னகையோடு கடவுள் சொன்னார்.

Thursday, 14 November 2013

பால்யப் பருவம்



பட்டனில்லா சட்டைக்குள்ளே 
தட்டு இருக்கும்.
சிட்டுக்குருவிகளிடம் சில நேரம் பேசமட்டும்
பால்வாடி போவேன்.

கீழே போட்டு நெளிப்பெடுத்தபின்
சைக்கிள் டயரில் 
ஊர் சுற்றி வருவேன்.

பனைமர மட்டையின் கவட்டையில்
கால் பதித்து உட்கார்ந்து
கரபுரவென இழுத்துத் திரிவேன்.

இளநுங்கு இரண்டை
குச்சியால் இணைத்து
ஸ்டியரிங்கோடு வண்டி ஓட்டுவேன்.

பனையோலை நறுக்கி
வேலாமர முள் குத்தி
ஆட்டுப்புழுக்கையிட்டு
காத்தாடி சுற்றுவேன்

மஞ்சனத்திப் பழம் பறித்து
கொட்டாங்குச்சியில் இறக்கி
நா கருக்க கடித்திடுவேன்.

மஞ்சள் நிற கண்மாய் நீரில்
கண் மஞ்சளாகும்வரை
நண்பர்களோடு ஆட்டம் போடுவேன்.

மாட்டு வண்டி தென்பட்டால்
புத்தகப்பை தொங்கவிட்டு
நானும் தொங்கி வருவேன்.

கடவுளுக்குக் கருணை காட்டா ஓணான்களை
கருணையின்றி கொலை செய்ய
கம்பெடுத்துப் புறப்படுவேன்.

முள்தைக்கும் ஒத்தையடிப்பாதையிலும்
சூடான தார்ச்சாலையிலும்
செருப்பின்றி நடந்திடுவேன்.

அப்பா கண்ணில் பட்டுவிடாது
வெள்ளிக்கிழமை இரவுகளில்
ஒளியும் ஒலியும் பார்த்திட 
அலைந்திடுவேன்.

நாலரைக்குப் போடப்படும் 
ஞாயிறு படம் பார்க்க
டி.வி இருக்கும் ஒரே வீட்டில்
அரைமணிநேரம் முன்னதாகவே
வரிசையில்  உட்கார்ந்துவிடுவேன்.

களையெடுப்பு கருதருப்பு
கலப்பையிட்டு ஏர் உழுக
அப்பா அம்மாவுக்கு உதவிடுவேன்.

கிட்டி, துட்டு, பம்பரம், தாயம்,
சில்லு, சீட்டு, எறிபந்து, ஐஸ்பான்டு
பளிங்கு, பல்லாங்குழி, குதிரை, நொண்டி
எப்போதாவது கிரிக்கெட் விளையாடுவேன்.

பால்ய நினைவுகள்
நெஞ்சடைத்து நிற்க
எதிர்வரும் எதிர்காலம்
மண்ணிலிருந்து என்னை
அந்நியப்படுத்திவிடுமோ என
அஞ்சுகிறேன்.

Friday, 8 November 2013

மரித்துப்போன இசை

இசைப்பிரியா பார்த்தீரோ?
'அது நான் இல்லை' என்ற
அழுகுரல் கேட்டீரோ?
இச்சையால் உடலை நிறைத்து
மிச்சத்தை என்ன செய்தனரோ?
செத்துக்கிடக்கிறாள்.

பெண்பிள்ளை பெற்றோரே

உம்பிள்ளைக்கிது என்றால்
என் செய்வீர்?
இவள் வயது இளையோரே
உன்னோடு பிறந்தவளின் 
நிலையிது என நினைப்பீரோ?

நள்ளிரவில் ஒரு பெண்ணை

நடுரோட்டில் நான்கு பேர்
வெறிகொண்டு கொன்றதற்கு

நாடே எரிந்ததடா?
'இதோ ஒரு பெண்'
மிருகங்களின் உடல்சூடு தணியப்பட
ஒன்றுமில்லாமையில் உயிர்விட்ட
ஒவ்வொரு பெண்ணும் 
இப்படித்தானே செத்திருப்பாள்.

இந்த இரத்தக் காட்டேறிகளின் 

கெட்ட நாடகத்தை
வேடிக்கை பார்க்கிறோம்.
வேடிக்கையாய்ப் பார்க்கிறோமே.
இதற்கும் வழக்கம்போல் 
பதில்- மௌனம்தானா?