Thursday, 14 November 2013

பால்யப் பருவம்



பட்டனில்லா சட்டைக்குள்ளே 
தட்டு இருக்கும்.
சிட்டுக்குருவிகளிடம் சில நேரம் பேசமட்டும்
பால்வாடி போவேன்.

கீழே போட்டு நெளிப்பெடுத்தபின்
சைக்கிள் டயரில் 
ஊர் சுற்றி வருவேன்.

பனைமர மட்டையின் கவட்டையில்
கால் பதித்து உட்கார்ந்து
கரபுரவென இழுத்துத் திரிவேன்.

இளநுங்கு இரண்டை
குச்சியால் இணைத்து
ஸ்டியரிங்கோடு வண்டி ஓட்டுவேன்.

பனையோலை நறுக்கி
வேலாமர முள் குத்தி
ஆட்டுப்புழுக்கையிட்டு
காத்தாடி சுற்றுவேன்

மஞ்சனத்திப் பழம் பறித்து
கொட்டாங்குச்சியில் இறக்கி
நா கருக்க கடித்திடுவேன்.

மஞ்சள் நிற கண்மாய் நீரில்
கண் மஞ்சளாகும்வரை
நண்பர்களோடு ஆட்டம் போடுவேன்.

மாட்டு வண்டி தென்பட்டால்
புத்தகப்பை தொங்கவிட்டு
நானும் தொங்கி வருவேன்.

கடவுளுக்குக் கருணை காட்டா ஓணான்களை
கருணையின்றி கொலை செய்ய
கம்பெடுத்துப் புறப்படுவேன்.

முள்தைக்கும் ஒத்தையடிப்பாதையிலும்
சூடான தார்ச்சாலையிலும்
செருப்பின்றி நடந்திடுவேன்.

அப்பா கண்ணில் பட்டுவிடாது
வெள்ளிக்கிழமை இரவுகளில்
ஒளியும் ஒலியும் பார்த்திட 
அலைந்திடுவேன்.

நாலரைக்குப் போடப்படும் 
ஞாயிறு படம் பார்க்க
டி.வி இருக்கும் ஒரே வீட்டில்
அரைமணிநேரம் முன்னதாகவே
வரிசையில்  உட்கார்ந்துவிடுவேன்.

களையெடுப்பு கருதருப்பு
கலப்பையிட்டு ஏர் உழுக
அப்பா அம்மாவுக்கு உதவிடுவேன்.

கிட்டி, துட்டு, பம்பரம், தாயம்,
சில்லு, சீட்டு, எறிபந்து, ஐஸ்பான்டு
பளிங்கு, பல்லாங்குழி, குதிரை, நொண்டி
எப்போதாவது கிரிக்கெட் விளையாடுவேன்.

பால்ய நினைவுகள்
நெஞ்சடைத்து நிற்க
எதிர்வரும் எதிர்காலம்
மண்ணிலிருந்து என்னை
அந்நியப்படுத்திவிடுமோ என
அஞ்சுகிறேன்.

No comments:

Post a Comment