எளிமையான வாழ்வு கொண்டு
தான் யாரென்றறிந்து
தனக்கொரு பாதையமைத்து
தனியொரு ஆளாய்த் தடம் பதித்தவன் அவன்.
நிலத்தில் கோடு கிழித்து
சாதிச் சகதியில் மூழ்கி எழுந்து
'நாங்க இருக்கோம்' துணிச்சலில்
எதுவும் செய்யத் துணிந்துவிட்டான்.
தான் யாரென மறந்துவிட்டான் இவன்.
பரிசேயத்தைப் பகைத்தாலும்
பரிசேயனை ஏற்றுக்கொண்டு
விரும்பி விருந்துண்டான்,
கல்லாகிப்போன இதயத்தின்
கசடு பிழிந்தான் அவன்.
விருந்துண்கிறான் இவனும்
கொடுப்பவனுக்கு ஆதரவும்
துறந்தவனுக்கு ஆதாயமும் தேவையானதால்.
பாடையைத் தொட்டான்
பிணத்தினைத் தொட்டான்
பார்வையற்ற கண்களையும்
தொழுநோய்ப் புண்களையும்
பரிவோடு தொட்டு பரிசுத்தமாக்கினான் அவன்.
'வெள்ளை அங்கி தொடாதே அழுக்கு'
பீடங்களைப் பெரிதாக்கி
தீண்டாமை தினம் வளர்க்கும் இவன்.
மங்கையரை மதித்தான்
சீடராக்கி மகிழ்ந்தான்.
விபச்சாரப் பெண்களையும்
அன்போடு அணைத்தான்.
ஏழையோடும் பாவியோடும்
இயல்பாக இருந்ததாலே
எண்ணிலாக் கொடுமைகளோடு
சிலுவையில் கொல்லப்பட்டான் அவன்.
அவன் ஆணாகிப்போனதால்
ஆணாதிக்க மதமாக்கி
நிறுவன சுகத்தில்
ஏழைகளை எடுபிடிகளாக்கி
குடிசைக்குள் குணிந்து செல்லவும்
தவறியோரைக் கனிந்து பார்க்கவும்
தவறிவிட்டான் இவன்.
உயிரையா கொடுப்பான்?
இருப்பதைப் பகிர்வதே ஏழ்மை
இயல்பான பாசமே கற்பு
ஈகோ விலக்குவதே கீழ்படிவு.
No comments:
Post a Comment