Monday, 20 October 2014

விலை ரூ500 மட்டும்



வாங்குறவங்க வாங்கலாம்
பேரு சாயிரா
வயசு பனிரெண்டு
விலை ஆயிரம் ரூபாய்.
அவ்வளவெல்லாம் தேராது
இந்தா ஐநூறு.
தள்ளுபடி விலையில் என்னை வாங்கினான் 
என் தாய்மாமன்.

ஒரு மாதம் படுத்து படுத்து
பாடாய்ப் படுத்தினான்.
தாகம் தீர்த்துவிட்டு
இன்னொருவனிடம் தள்ளிவிட்டான்.
சதைக்கு ஏற்றவாறு சம்பளம்
ஏத்திக்கேட்டான் மாமா.
“அவனாவது நல்லா வச்சுக்கனும்”
எனது வேண்டுதலை
கடவுள் கண்டுகொள்ளவேயில்லை.
அதே அடி, அதே அவஸ்தை.
அடிமையாகத்தான் இருந்தேன்.
ஒருவேளை சோத்துக்காக
அவனுக்கு என்னை சொர்க்கமாக்கி
எனக்கு நானே நரகமாகிப்போனேன்.
ஆசை முடிந்ததும் அடுத்த ஆள் பார்த்தான்.
நல்ல விலைக்கு விற்றுவிட்டான்.

அவரோடு இருந்தது 24 ஆண்டுகள்.
எனக்கும் அவருக்கும்
நாற்பதாண்டுகள் இடைவெளி.
நான்காண்டுகள் முன் செத்துப்போனார்.
வயதாகிப்போனதால்
என்னை வாங்க ஆளில்லை.
இளமையும் வனப்பும் இருந்த வரையில்
காஸ்ட்லியாய் இருந்தேன்.
இப்போது அடிமாட்டு விலைக்கு
வீட்டுவேலை செய்ய விற்கப்பட்டேன்.

ஒருநாள் சாப்பாட்டுக்கு மட்டும்
ஐநூறு ரூபாய் செலவு செய்யும்
எனது பேத்தி.
ஐநூறு ரூபாய் நோட்டைப் பார்க்கும்போதே
நனைந்து விடுகிறது.

இந்த ஐநூறு ரூபாயில்தானே
எனது கனவும் வாழ்வும் அழிந்தது.

Tuesday, 14 October 2014

தூய்மை இந்தியா



துடைப்பம் எடுத்துப் பெருக்கும்போது
நான் புன்னகைப்பதில்லை.
எனக்குத் தெரிந்து
பெண்கள் பெருக்கும்போது
பெருமிதம் கொள்வதில்லை.
'தூய்மை இந்தியா'
முதன்முறை துடைப்பம் பிடிக்கும்
கைக்கூலிகள் முகத்தில்
என்ன சிரிப்பு, என்ன பெருமிதம்..
போட்டோ எடுக்கும் வரையிலும் அட அட.

வெளிநாடு சென்று வந்தவர்கள் வியப்பதும்
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வெறுப்பதும்
'ஏன் இந்தியா இப்படி இருக்கிறது?'
தூசிக்கும் துர்நாற்றத்திற்கும்
பழக்கப்பட்டுவிட்ட நம் நாசிகள்
ஏன் இப்படி என்று யோசிப்பதில்லை.
அசிங்கங்கள் அருவருப்பைத் தராத வகையில்
அழகாக கட்டமைக்கப்பட்ட கூறுகளும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட எதார்த்தங்களும்.

ஒருநாள் கூத்துக்காய்
விளக்குமாறு பிடிப்பது
பிரதமருக்கு எளிது.
பல்லாண்டு தயாரிப்போடு
தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் சிறப்பு.

ஆழமாக சிந்திக்கவும்
அவ்வப்போது சிரமப்படவும்
அனைவரும் தயாராகும் வரையில்
'தூய்மை இந்தியா'
ஏக்கப் பெருமூச்சுடன் களைவது நிஜம்.

Wednesday, 8 October 2014

சாகக் காத்திருக்கிறார்கள்



விருந்தாவனம்
விதவைகள் சரணாலயமிது.
பராமரிக்கவும் சமாளிக்கவும் சங்கடப்பட்டு 
பரமன் பார்த்துக்கொள்வான் என
பாரம் இறக்கிய பக்திமான்களின்
தாய்கள், சகோதரிகள், சொந்தங்கள் இவர்கள்.
இருப்பதைப் பிடுங்கியபின்
தொல்லையின்றி வாழ
தள்ளிவிட்ட யமுனை நரகமிது.
இங்கிருந்துதான் மோட்சத்துக்கு 
டிக்கெட் கொடுக்கிறார்கள் என்ற
நம்பிக்கை வேறு.

மாற்று ஆடையின்றி
கொஞ்சம் கிடைக்கும்
சோத்துக்காக 
வயது மறந்து ஓடி வயிறு கழுவும்
அபலைகள்
சவப்பெட்டியில் ஆயுள் முழுதும்
ஆன்மீகச் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இறைபக்தி நிறைந்தவர்கள் அல்ல
கோயில்தூண்களைத் துணையாக்கி
கரம்கொடுக்க ஆளில்லாது
கடவுளே கதி என கிடப்பவர்கள்.
வாரிவழங்கிய வாழை இலையாய் இருந்தவர்கள்
விருந்துண்டபின்னே எறியப்பட்டு
குப்பையில் விழுந்த 
எச்சில் இலைகளாகிப்போயினர். 

உள்ளம் முழுதும் நிறைந்தபின்
பேச வழியின்றி அமுக்கி அமுக்கி
கண்கள்வரை வந்துவிட்டதால்
கண்ணீராய் வழியும் சோகங்கள்.
இவர்கள் செத்தாலும்
அடுத்தவர் தொடுவதில்லை
குப்பையாகவே அள்ளப்படும் நிலை.

மாதா, சக்தி, தேவி, மாரி
தெய்வங்கள் மட்டுமே இங்கு வாழ முடியும்.
விதவைகள் சாகக் காத்திருக்கிறார்கள்.

Monday, 22 September 2014

நிஜம் தேடும் நிழல்கள்



கோயில்கள்
இறைவனின் நிழல் படிந்த இடங்கள்.
நிஜம் அங்கிருப்பதில்லை.
இருக்கவும் முடியாது.
இறைவனும் உருவமும் உயிரும் பிணமும் போல.
ஒன்றிருந்தால் ஒன்றில்லை.
நிஜமின்றிய நிழல் ஒரு முரண்தான்
ஆனாலும் நிழலிலேயே நின்றுவிடுவது நியாயமுமில்லை.
பிச்சை எடுப்பவர்களைக் கடந்து
பிச்சை எடுக்கவே சந்நிதி நுழைவதால்
நிஜம் பெரும்பாலும் விரும்பப்படுவதில்லை.
அடையாளங்களைத் தாண்டி
ஆண்டவனைத் தேடு.
இங்குதான் எங்கோ இருக்கிறான்/ள்.
நிகழ்வுகளில், நபர்களில் 
உனக்குள்ளும் புறமும்
எங்கும் இருக்கிறான்/ள்.

ஆனால்
நிழல்களைத் தாண்டினால் மட்டுமே
நிஜம் பரிச்சயம்.

Friday, 19 September 2014

சில்லறைக் குழந்தைகள்



கூட்டம் சுமாராக இருந்தது
அந்த புறநகர் விரைவு வண்டியில்.
புத்தகம் படிப்பதும் 
புற அழகைப் பார்ப்பதுமாக 
எனது நேரம் சுருங்கிக்கொண்டிருந்தது.
ஒரு தட்டு, இரு குச்சி, ஒரு அழுக்குப்பை
அம்மாவும் அவளும் 
விரைந்து வந்த வண்டியிலும் 
விழாமல் நடந்து வந்தனர்.
பழக்கமாயிருக்கும்.
தரையில் அமர்ந்த அம்மா 
தட்டில் தாளம் தட்ட 
இரு இருக்கைக்கிடையே இருந்த சந்தில்
பல்டி அடித்தாள், வளையத்தில் நுழைந்து
வளைந்து நெளிந்து எழுந்தாள் அச்சிறுமி.
அவளிடம் சோகமுமில்லை, புன்னகையுமில்லை.
காரியத்திலே கண்ணாயிருந்தாள்.
ஐந்து நிமிடம் அப்படி இப்படி என
ஆட்டம் காட்டிவிட்டு
தட்டெடுத்து சில்லறைக்காய் நீட்ட
அதுவரை இரசித்தவர்களுக்கு அவள்
அந்நியமாகிப் போனாள்.

“பேரன்னப்பா?” 
எனது வினாவுக்கு விடையில்லை.
ஏன் குழந்தைங்க பிச்சை எடுக்கனும்?
விளையாட ஆசை இருக்காதா?
உரிமையில்லையா? வாய்ப்புக் கிடைக்குமா?
இல்லை இதுதான் விளையாட்டா?
அறிவு ஆத்திரத்தோடு புலங்கியது.
கொடுக்கவா வேண்டாமா என
முடிவெடுப்பதற்குள்
அடுத்த காட்சிக்கு அடுத்த பெட்டிக்குச் 
சென்றிருந்தாள்.

Wednesday, 10 September 2014

நிலாமனிதன்


வானமென வாழ்க்கை
வரையரையின்றி விரிந்திருக்க
வாய்ப்புகள் விண்மீன்களாய்
எட்டாத தூரத்தில் கொட்டிக் கிடக்கும்.
வருமென்று தூண்டில் போட்டவர்கள்
காணாமல் போனார்கள்.

விரைந்திடும் மேகங்களாய்
நெருக்கடிகள் மறைக்கத்தான் பார்க்கும்.
மனது மங்கலாகும் வேளையில்
இருள் கண்டு மருளாதே
முண்டியடித்து முன்னேற
முறுக்கிடு மீசையை
பகலும் பௌர்ணமியும் நிச்சயம்.
உள்ளுக்குள்ளே பள்ளமிருந்தும்
உள்வாங்கி ஒளிகாட்டும் நிலவாய்
விருப்பமுடன் வழிகாட்டு நீ.
உன்னை நம்பியும் உயிர் இருக்கின்றன.

Monday, 1 September 2014

படகுகள் கரைசேரட்டும்



எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தெரியுமா?
எப்போது கடைசியில் சிரித்தேனென்று ஞாபகமில்லை.
இங்குதான் சாகவேண்டும் என ஆசை- ஆனால்
படகேறி பக்கத்து நாட்டிற்குச் சென்று
எப்படியும் வாழ்ந்து விடுவோமே என்றும் ஆசை.
இருப்பதையெல்லாம் விற்றுவிட்டு
வழி மறித்தவர்களிடம் வாரிக்கொடுத்துவிட்டு
கள்ளத்தோணியில் காணாமல்போகவே
உள்ளம் தயாராயிருந்தது.

காற்றின் வேகம் குறையக் குறைய
இதயத்தின் வேகம் அதிகமானது.
எப்படியும் கரைசேர்த்திடு என
கடவுளிடம் ஒற்றைக் கோரிக்கையே இருந்தது.
இராணுவம் பிடித்துவிட்டால்,
புயலடித்தால்,
படகு கவிழ்ந்தால்?
சும்மா இரு. எதுவும் நடக்காது.
மனதின் ஆட்டம் படகின் அசைவைவிட 
வேகமாக ஆடியது.

அகதிகளுக்கு நாட்டில் அனுமதில்லையாம்
அரசு அதிகாரி சொல்லிவிட்டார்.
எத்தனையோ அகதிகளை 
ஆசுவாசமாய்த் தின்று ஏப்பம்விட்ட ஆழி
எங்கள் படகுக்காக வாய் திறந்து காத்திருந்தது.
கூட்டமாய்ப் பறந்த கடற்காகங்கள்
போகிறபோக்கில் பொறாமை தெளித்துப் போயின.

கடவுளே நாங்கள் கரையேற வழியே இல்லையா?