Friday, 8 August 2014

மனிதன்



விபத்துகள்
கடத்தல்
கற்பழிப்பு
காதல் கொலைகள்
கலவரங்கள்
இன்னும் பல்வேறு நிகழ்வுகள்
வெறும் செய்திகளாய் மட்டும் 
கடந்து விடுமோ?

உன் வீடு எரிந்தால்?
உன் தங்கை இறந்தால்?

நமக்கு நடந்தால் மட்டும்தான் 
தெரியவேண்டும் என்பதில்லை.
இதயம் கொஞ்சம் நனைந்தாலே
நாம் மனிதர்கள்தான்.

Thursday, 7 August 2014

இரவுக்கடன்



முன்புபோல் இல்லை
உலகம் மாறிவிட்டது. 
மாற்றமில்லாமல் கிடக்கின்றன
நமது வீடுகளும் எண்ணங்களும்.
காடுகளும் கழனிகளும் 
காலி மனைக் கட்டங்களாக
மாறிப்போன காரணத்தாலே
கடன் முடிக்கும் காலம்
காலை இரவாய்ப்போனது.
சாலைகளையும், இருப்புப் பாதைகளையும்
இன்னும் எத்தனை நாள்
நம்பியிருப்போம்?
பலாத்கார பூமியில்
பாதகர்கள் அங்கும் காத்திருக்கிறார்கள்.
பாவம் இவள்
மரியாதைக்காக இல்லாவிட்டாலும்
நின்றுகொண்டிருக்கிறாள்.
அறையிருந்தும் சிலர் அங்கே
ஐந்து அறிவு ஜீவிகளாய்.

இருப்பிடத்தில் கழிப்பிடம்
எப்போது இடம் பெரும்?
குற்றவுணர்வு இல்லாமலேயே
குடும்பம் நடத்துகிறோம். சீச்சீ...

Friday, 25 July 2014

முட்புதரில் அன்று...



பார்த்தேன் இரசித்தேன்
பழகினேன் விரும்பினேன்
காதல் என்று நினைத்துக்கொண்டேன்.
கட்டாயப்படுத்தியாவது அவள் 
என்னைக் காதலிக்க வேண்டினேன்.
அவள் எனக்குறியவள் என முடிவெடுத்திருந்தேன்.
என்னைத் தவிர யாரும் அவளை
அண்டக்கூடாது என அடம்பிடித்தேன்.
ஆசைப்பட்டேன் மனைவியாக்க ஆசைப்பட்டேன்.
அவளுடைய எண்ணம், விருப்பு
எதுவும் நான் வினவியதில்லை.
அவள் எட்டியே நின்றாள்.
அவளின் கண்டுகொள்ளாமை
என் கல்லான இதயத்தைக் கருங்கல்லாக்கியது.
கத்தி, திராவகம், கல், கயிறு என எப்படி 
பழிவாங்கலாம் என நினைத்தேன்.
இதோ நினைத்ததை முடித்துவிட்டேன்.
என் உயிரையும் முடித்துக்கொண்டேன்.

நண்பா
கவர்ச்சியின் தூண்டலில் காமத்தின் தூண்டிலில்
கவனமாயிரு.
இல்லாவிட்டால் இருப்பு வெறுப்பாகும்
இழப்பு இரட்டிப்பாகும்.
சுதந்திரம் கொடுக்காதவன்
அதை அனுபவிக்க உரிமை இல்லை.

ஆசைகள் பேராசையாகி
தொல்லைகள் வெறியாகும்போது 
இடம் வலம் வரும் காதலர்களும்
ஆபத்தானவர்கள் என அறிவாய் தோழி.

Monday, 21 July 2014

இங்கு வரன் பார்க்கப்படும்



பொண்ணு அழகா இருக்கனும், அடக்கமா இருக்கனும்
நல்லா படிச்சுட்டு வீட்டுல வெட்டியா இருந்தாலும் பரவால
நாப்பது அம்பது பவுனு போட்டா போதும்.
வீட்டுல ஒத்த பொண்ணா இருந்தா ரொம்ப சந்தோசம்.

மாப்ள பி.இ படிச்சுருக்கனும்
நல்ல கம்பெனில கை நெறய சம்பளம் வாங்கனும்
பாரின் போக வாய்ப்பு இருந்தா முன்னுரிமை
சொத்துபத்தும் சொந்தவீடும் இருந்தா ரொம்ப சந்தோசம்.

பண்டமாற்று முறையில் மனிதப்
பிண்டங்கள் மாற்றிக்கொள்ளும் காலமிது.
காதலிச்சு கைபிடிக்கலாம்னாலும்
கௌரவக்கொலைத் தோரனையில் மொத்த குடும்பமும்.
குலசாமியிடம் பிரதான வேண்டுதலே
'காலாகாலத்துல கல்யாணம் நடக்கனும் சாமி'
கடவுளே கதிகலங்கிப் போய் நிக்கிறார்.
கருப்பான பொண்ணுகளுக்கும்
கஸ்டப்படும் பசங்களுக்கும்
என்ன பதில் சொல்லப்போறாரோ?

இந்தியர்களில் இதயம் இருக்குமிடம்
இன்னும் பத்திரமாகவே இருக்கிறது. அதனாலேயே
களவு போகக் காத்திருக்கும் இதயங்கள் 
காலாவதியாகிப்போகின்றன.



Sunday, 29 June 2014

எங்கோ தவறு நடந்திருக்கிறது



மூன்று ஆண்டுகள் அவரோடு உண்டு உறவாடி
யார் பிரிந்தாலும் நாம் இருப்போம் என்றவர்கள்
கைது நடக்கும்போது ஒருவரைத்தவிர
மற்றவர் ஏன் ஓட வேண்டும்?

நகர்கள் பல சென்று நற்செய்தி அறிவித்த
நண்பர் கூட்டம் கைதுக்குப் பிறகு என்ன ஆனது?
புதுமைகளைக் கண்ட பலரும்
புரட்சி செய்தாவது மனுமகனை மீட்டிருக்க வேண்டுமே.
அப்பம் தின்ற ஐயாயிரம் பேர் எங்கே?

எருசலேம் நகர் இயேசுவுக்குப் புதிதில்லையே
அழுதுகொண்டிருந்த மகளிரின் மணவாளர்கள் எங்கு போனார்கள்?
'சிலுவையில் அறையும்' என கத்திய கூட்டத்தில்
நல்ல மனிதர் யாருமில்லையா?

தூக்க முடியாத சிலுவை
திக்குமுக்காடிச் சுமக்கையிலே
இரத்தம் மறைத்த கண்களில்
நித்தம் கூடிய கூட்டம் நின்றதே
விழுந்தபோது துப்புவதற்குப் பதில்
தூக்கியிருக்கல்லவா வேண்டும்.
மீட்பரை மீட்பதற்கு மனிதர் யாருமில்லையெனில்
மீட்பர் யாரை மீட்டார்?
எதிலிருந்து மீட்டார்?

எங்கோ தவறு நடந்திருக்கிறது.

Friday, 13 June 2014

மீண்டும் மீண்டும் யோசிக்கிறேன்




மீண்டும் மீண்டும் யோசிக்கிறேன்.
யாரையும் சீண்டியதில்லை
வம்பு தும்புக்குப் போனதில்லை.
உதவி தேவையெனக் கண்டால்
கேட்காமலேயே உதவுகிறேன்.
கண்ணெதிரே தவறு நடந்தால்
தட்டிக்கேட்க துணிந்து நிற்கிறேன்.
பொது இடங்களில் எச்சில், குப்பை மட்டுமல்ல
கண்டதும் கிடப்பது கண்டு
கனன்று எழுகிறேன்.
செய்தித்தாள்களில் வன்முறை கண்டு
மனம் நோகிறேன்.

ஒரு வேளை நா
ரொம்ப நல்லவனா இருக்கேனோ?

Tuesday, 10 June 2014

இக்கரைப்பச்சை



வண்டிகள் வரிசையாய்க் காத்திருக்க
விரைந்து வந்த விரைவு வண்டியைப் பார்த்து
'அங்க பாரு ட்ரெயினு' பரவசமாயின பேருந்துகள்.
குழந்தைகளின் குதூகலத்தில்
பெருமையோடு இடம் கடந்தேன் இரயிலில்.
அடுத்த நிலையத்தில் வண்டி நின்றது.
ஒரு மணிநேரம் நகரவேயில்லை.
கிராஸிங்காம்... 
'ச்சே... பேசாம பஸ்லயே போயிருக்கலாம்.'