Thursday, 28 February 2013

செபம் என்பது...




ஒரு செயலல்ல
முணுமுணு மந்திரங்கள் 
மூடிய நம் இதயத்தைத் திறப்பதில்லை
செபம் ஒரு மனநிலை...
தொட்டுக்கொண்டில்லாவிட்டாலும்
தொடர்பில் இருக்கும் உறவு.

ஆண்டவன்முன் அம்மணமாய் 
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்னைத்தவிர
என்ற மனநிலை.

அது ஒரு உணர்வு,
என்னைவிடப் பெரியவன் என்னோடு இருக்கிறான்
அவன்முன் நான் ஒன்றுமில்லை என்ற விழிப்புணர்வு. 
எனவே ஆணவத்திற்கு வழியில்லை.

அவன் என்னோடு இருப்பதால் 
கவலைகளுக்கும் இடமில்லை
அவன் செயல்கள் நம் வழியாகவும்

நம் செயல்கள் அவன் துணையாகவும்
நடக்க ஆரம்பிக்கின்றன.

இறைமையில் இருக்கிறவனுக்கு
எல்லாமே இறையின் முகம்தான் - இதில்
இழிவானதென்று எதுவுமில்லை.


Monday, 11 February 2013

பிழைக்கத் தெரியாதவர்



பரிசேயர்கள் பழித்திருக்க மாட்டார்.
சட்ட அறிஞர்களோடு சண்டை வந்திருக்காது.
ஊரார் உதறித்தள்ளியிருக்க மாட்டார்.
ஊரெல்லாம் சுற்றித்திரியவோ
சாப்பாட்டுக்கு லாட்டரியடிக்கும் நிலையோ
வந்திருக்காது.
குற்றம் கண்டுபிடிக்கவே
குறுகுறுவென கேட்க 
கூட்டமொன்று கிளம்பியிருக்காது.
பைத்தியமாய்த் திரிகிறான் என
சுற்றத்தார் சூனியம் பேசியிருக்கமாட்டார்.
அன்னாவும் கயபாவும் அவரைக் கொன்றுவிட
அதிகாலை கூட்டம் போட தேவையிருந்திருக்காது.
இரத்தமோ இரத்த வியர்வையோ
வடிந்திருக்க வாய்ப்பில்லை.
சங்கிலியால் கட்டியிழுத்து
எள்ளிநகையாடிய வீரர்
முகத்தில் காரித்துப்பியிருக்க மாட்டார்.
கூர்மையான முள்முடியோ
கேவலமான சிலுவைச்சாவோ கிடைத்திருக்காது.
எல்லாமே முடிந்தபிறகு
பிலாத்தும் கைகழுவியிருக்க மாட்டார்

ஒருவேளை இயேசு 
தான் உண்டு தன் வேலை உண்டென இருந்திருந்தால்.

உண்மையை உரக்கக்கூறி 

ஒடுங்கியவரோடும் - சமூகத்தில் 
ஒதுக்கப்பட்டோரோடும் ஒன்றாகப் பழகி
அன்பு செய்ததற்கான பரிசுதான் மேற்சொன்னவை.

என்ன! இயேசு என்ற மாமனிதர் தெரியாமலேயே போயிருப்பார். 



Thursday, 31 January 2013

கனிவான கவனத்திற்கு...


நான்கு கவுண்ட்டர்களில் மூன்று மூடிக்கிடக்க
விட்டுக்கொடுக்க மனமில்லாது
மானை விழுங்கிய மலைப்பாம்பாய்
நகர்ந்து கொண்டிருந்தது பயணிகள்வரிசை.
எந்த வண்டி எந்த தடம்
பதிலளிக்க ஆளில்லை.
வந்த வியாபாரியிடம் வாய்ப்பேச்சு கொடுத்தபின்
வாங்கிக்கொண்டேன் பதில்களை.

வழக்கம்போல் தாமதமாக வந்த 
எக்ஸ்ப்ரஸ் ரயிலில் 
விழுந்து ஏறும் ஜனங்களில் நானும்.
எனது இடம் எதுவெனத் தேடி
கழிவுகளில் கால்படாது கடந்து செல்கிறேன்.
எட்டியிருந்த கழிவறையின் வாசம்
ஏகமும் நுழைந்திருந்தது.
வாடை வந்ததாலோ என்னவோ
வா'வென இழுத்தது.
தொடுவதற்குப் பயப்படும் தொழுநோயாளியாக
கதவினை கவனமாய்த் திறந்தேன்.
விரச வசனங்களும்
ஆண்டுகள் கடந்த மலக்கழிவும்
அறையை அவமானப்படுத்தின.
வழக்கமான
'அப்பாடா' அனுபவம் இல்லை.

வியாபாரத்திற்காகவும் யாசிக்கவும்
வெவேறு பாணியில்
வித்தியாசமான மனிதர்கள்
பயணம் முழுக்க படர்ந்திருந்தனர்.
அருகில் அறுபதுகள் இருக்க
வெளியே வேடிக்கை பார்த்தேன்.
ஆளில்லா பகுதிகள் எங்கும் அழகு
குடியேற்றப்பகுதிகள் எங்கும் குப்பை.
ஊதிய உயர்வு, பணி அமர்வு
ஆர்ப்பாட்ட போஸ்டர்களால்
அலங்கோலப்பட்டுக்கிடக்கும்
இரயில்வே சுவர்களைப் பார்க்கும்போதெல்லாம்
இருப்பவர்கள் சிறப்பான பணிசெய்ய
யார் போராட்டம் செய்வார்?
மனம் வலித்தது.
இறங்கும் நிலையத்தில்
இருக்கைவிட்டு எழுந்தவுடன்
இடம்பிடித்தவர்களில் 
எதிர்பால் இளசுகள்தேடி
கண்கள் சென்றதைத் தடுக்கவில்லை.

வல்லரசு இந்தியாவின்
இரயில் செல்லும் பாதைகள் எல்லாம்
நாறிப்போய்க் கிடந்தன.
மஞ்சள் நிறம் அப்போது 
மங்கலமாகத் தெரியவில்லை.

இரயில்வேயின் கனிவான கவனத்திற்கு...



Tuesday, 22 January 2013

கொட்டிக்கொண்டிருக்கும் பால்...




பாலியல் குற்றங்கள்- யார் காரணம்?
காரசாரமான வாதங்கள்
குற்றவாளிதான், சட்டங்கள்தான்.
பெண்களின் ஆடைகள்தான்
சில அறிவுக்கொழுந்துகள்.
மேற்கத்திய கலாச்சாரம்தான்,
ஆராய்ச்சியின் முடிவில் 
அரைவேக்காட்டுக்காவிகள்.

மானுடத்தின் சரிபாதி நீ - உரிமை
மறுக்கப்பட்ட – பார்வையில் 
மறைக்கப்பட்ட மறுபாதி நீ.
திமிறி எழுந்து உரிமை கேள்.
அடங்கிக்கிடந்தால் முடக்கிவிடுவர் - உன்
முனகல் சத்தம்கூட வெளியே கேட்காது.


பிரித்துப்பார்த்தே பழக்கப்பட்டவர்கள் நாம்.
நா ஆம்பள, நீ பொம்பள.
உடை, உறவு, மது, புகை...
கட்டுப்பாடுகள் உனக்கு மட்டுமே.
நமக்கிடையே சொர்க்க நரக இடைவெளி.

மடத்தனம் நம் மனம் முழுதும்
நிரம்பி வழிகிறது.

தன் தங்கையைத் தொட்டால்கூட
கொலைவெறி கொள்ளும் இவனுக்கு
மற்றவள் எல்லாம் தொட்டுக்கொள்ளத்தான்.
கிள்ளுக்கீரையாகிப்போனது உன் குற்றமல்ல
கலாச்சாரக் கொடுமை.

அடக்கி வைப்பதும் – வீட்டிலே
அடைத்து வைப்பதும்
ஆணின் பயத்தாலும் பலவீனத்தாலும்தான்.
கேட்டால் பாதுகாப்பென்பான்.
கல்பனா சாவ்லாவைக் கொண்டாடும் இவன் தன்
பதின்வயது மகளைப் 
பக்கத்து வீட்டிற்குக்கூட
அனுப்ப மாட்டான்.
சானியாவையும் சாய்னாவையும் 
சாதனையாளரென்பான்,
சாயுங்காலம் விளையாட
சத்தநேரம் தரமாட்டான்.
சாமியாகப் பார்க்கும் இவனின் கண்களில்
சமமாகப் பார்க்கும் பார்வையில்லை.

கேவலமான காமப்பார்வைக்குக் 
கடவுள்கூட தப்புவதில்லை.

போலி மனசாட்சியில் 
நாறிக்கிடக்கிறது நம் இந்தியா.
தூர்வார வந்தவர்களையெல்லாம் துரத்திவிட்டு
துக்கம் கொண்டாடும் துர்பாக்கியர்கள் நாம்.

தெய்வமாக்கினது போதும்.
ஆண்பெண் வித்தியாசம் களை.
மகளையும் மனிதனாக நினைத்து
வாய்ப்புக் கொடுத்து வளர்த்துப் பார்.
முட்டிமோதி முக்தியடைவாள் - தீயன
எட்டி மிதித்து சக்தி பெறுவாள்.
ஆணைவிட அவளே பலசாலி.

Friday, 18 January 2013

யார் நீ?


தொழுவம், தொட்டி, வயல், தொட்டி, தொழுவம்.
வீடு, பேருந்து ,பணியிடம், பேருந்து, வீடு.

மாட்டுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் பெரிதில்லை
செக்குமாடாய் செத்தவாழ்வு வாழ்வது முடிவில்லை
சிந்தனையைச் சீர்படுத்து.

வாழ்க்கையை வாழாதவன் 
கல்லறையில் மட்டுமே இருக்க வேண்டும்.

Monday, 14 January 2013

கடவுள் கொண்டாடிய பொங்கல்


களிமண்ணைப் பிசைந்து வைத்து
சக்கரத்தில் சுழற்றிவிட
உருகொடுத்து உயிர் கொடுத்தான் 
உழைப்பாளி, ஓர் உன்னத படைப்பாளி
மனிதன் ரெடி, பானையும் ரெடி.

புதுவாழ்வு தந்திட புத்துலகம் படைத்திட்டபின்
அழகான தோட்டம் அமைத்து
அருஞ்சுவை கனிகள் நிறைத்து
அரிசியை உணவாகத் தந்தான்.

ஒளியின்றி உயிரில்லை
உயிரளிக்கும் நானே உலகின் ஒளி என
படைத்தவன் பாடி வைக்க
பானையிலிடப்பட்ட அரிசி
பக்குவமாய் பதத்துக்கு வந்தது
ஒளி கொடுத்த பின்.

மனிதன் தனியே இருப்பது நல்லதன்று
மசாலா தேவைப்பட்டது
சர்க்கரையாய் உப்பாய்
பல்சுவை அனுபவங்களால் பக்குவப்பட வைத்தான்.

சுகமாக இருக்கும்வரை
பலனுள்ள வாழ்வு இல்லை
பயனுள்ள வாழ்க்கை வாழ
முயன்று நீயும் முட்டிப்பார்
தோட்டம் விட்டு வெளியே வா
மாற்றம் நீயும் கொண்டு வா.
பதத்துக்கு வந்த அரிசி
பானையைத்தாண்டி பொங்கி வழிந்து
பார்ப்போரை பரவசப்படுத்தியது.


தடைகள் தாண்டி அறுவடையில்

ஆண்டவனை நினைக்கும் உழவன்போல்
மடைவெள்ளம் போன்ற அருளுக்காய் 
மகிழ்வோடு நன்றி சொல்வோம்.


Monday, 10 December 2012

நிலத்தில் விழுந்த நீல(ள)ப்போர்வை


உச்சத்தில் சூரியன் நச்சரித்தாலும்
நன்றாகத்தான் இருந்தது.
உக்கிரப்படுத்துவது நம் மனம்தான்
இருந்த இடம் அப்படி.


மிரட்சியோடு வெறித்துப்பார்க்கும்
இடுப்புக்குழந்தைகள்
நிதானமின்றி நிர்வாணம் பெற்று
ஆடை துறந்த வாண்டுகளின் கைகளில்
கரைமணலில் கிணறுதோண்டி
ஒருசாண் ஆழத்தில் ஊற்றெடுத்த நீரால்
பூத்த புன்னகையில் மறைந்திருந்தது
சாதித்துவிட்ட சந்தோசம்.
அவிழ்ந்து விழும் அங்கவஸ்த்திரத்தை
இடது கையால் இழுத்துப்பிடித்து
அலையோடு மோத தயார்நிலையில் சிறுவர்.

எழுந்து வருகையில் விரைந்து விலகி
திரும்பி செல்கையில் வீரம் காட்டி
கால் மட்டும் நனைக்க எண்ணி
உடல் நனைத்த காந்தக்கன்னிகள்.

எட்டும் மட்டும் நீர் இருந்தும்
எட்டே நின்று நீர் அள்ளி
முகத்தைச்சுற்றி மூன்றுமுறை
சாத்திரம் சாற்றும் மங்கல மகளிர்.

இவனை இழுக்க வந்தவளை
இவன் இழுத்து விலகியதால்
 'சரி போ சனியனே'
நனைந்த சேலையை கசக்கிப்பிழிந்தபின்
கோபத்தில் கரையேரும் அதட்டல் அம்மா.

கலையுமின்றி எக்கவலையுமின்றி
கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்து
காலாட்டி ஸ்டைல் காட்டும்
மேல்வர்க்க மைனர்குஞ்சு

கால்விரலால் மண்வெட்டுப்பதித்து
கிறுக்கலை மனதார சிலோகிக்கையில்
இருப்பவர் அழிக்க இறுக்கம் கொண்டு
எழுதிமுடிக்குமுன் எழுத்தையழித்த
அலையின் வலையில் பருவப்பெண்டிர்.

விரசமாகப்பேசும் காதலரிடம் 
விவகாரமாகப் பேசிய விவரமானவன்
கால்காசு சம்பாதித்துவிட்ட சந்தோசத்தில்
மீண்டும் கத்தினான் சுண்டல்..சூடா.. சுண்டல்.

எந்தக்கோயிலில் நேர்ச்சையோ,
வந்தவரெல்லாம் மகிழ்ந்திருக்க
காலடிபடாத கரையோரம்
அங்கபிரதட்சனம் செய்த அழுகிய தேங்காய் 

குளிக்கின்ற யாரையும் குழந்தையாக்கும்
இரண்டு காலம் மறக்கச்செய்யும்
இருக்கும் நேரம் இனிமையாக்கும்
பரந்த கடல் பரப்பிலே அமர்ந்து
விழிமுழுதும் வியப்போடு நிற்கிறேன்.

திரும்பி வர விரும்பாத இடம்
கல்லறை மட்டுமல்ல
கடற்கரையும்தான்