கருப்புப்பணம் இலஞ்சம் ஊழல் விவசாயம் தண்ணீர் தட்டுப்பாடு இயற்கைப் பேரழிவு இவையனைத்திற்கும் முடிவு தரும் மீட்பருக்காய் காத்திருக்கிறோம். திரையின் ஒளியில் மிளிரும் கலைஞன் உயிர் கொடுத்தாவது தீர்வு தருவான் என இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம். மாற்றங்களை ஏற்படுத்த வக்கில்லாத நாம் கோடீஸ்வர நடிகர்களுக்காய் வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க மங்கையரின் விசும்பலை நிறுத்த விரல்களை மடக்கி வீர வசனம் பேசி எதிரிகளைத் துவசம் செய்யும் திரைக் கூத்தாடிகள் என்பது அவர்களுக்குத் தெரியும். சண்டைக்காய் வாயிலிட்ட இரத்தத்தைத் துடைத்துக்கொண்டு அடுத்த ஷாட்டுக்குத் தயாராகிறார்கள். கலைஞனுக்கு காவிரியும்இ கருப்புப்பணமும் வருமானம் வாரித்தரும் கதைக்களம் அவ்வளவுதான். அடுத்த நாள் துருக்கியிலோஇ மெக்சிகோவிலோ நடனத்துக்கான இடம் தேடுவார். நீரின் அருமை தெரியாது குளங்களைஇ கால்வாய்களை ஆக்கிரமித்துக் கட்டிய வீடுகளில் வீணாகும் நீரை நினையாத நாம் தண்ணீர்ப் பஞ்சம் பற்றி பேசும் அட்டக்கத்தி தளபதிகளை தலையில் வைத்துக் கொண்டாடி சிலையெடுத்து சாமி கும்பிடும் மொன்னக்கத்தி மனிதர்கள் நாம். ஐந்தாண்டுகள் சினிமாவை முடக்குங்கள் தமிழகம் தழைத்தோங்கும் என ஆருடம் சொன்ன அண்ணன் பிரபாகரன் தீர்க்கதரிசிதான்
அப்போதுதான் குத்துவிளக்கு ஏற்றப்பட்டிருந்தது. அறையை விழுங்கி கொண்டிருந்த இருள் மெதுவாக வெளியேறிக்கொண்டிருந்தது. குத்துவிளக்கின் ஐந்து பக்கமும் ஒரே மாதிரி திரிதான் வைக்கப்பட்டிருந்தன. சுவாலைகள் சில நேரம் அழகான அசைவுகளோடு இடுப்பாட்டம் ஆடிக்கொண்டது. வேகமாகக் காற்று வீசும்போது வீரியமாக எழுந்து எரிந்தது. கரிகாலன் பாதங்களாய் கருமையை அடியில் கொண்ட மஞ்சள் நிற மேனியில் முகம் மட்டும் ஆரஞ்சு நிறத்தில் அதகளப்படுத்துகிறது. உச்சதந்தலைக் குடுமியாய் முடிவேயில்லாத சருமமாக உச்சிமீதேறிக் கொண்டிருந்தது கரும்புகை. இருளில்தான் ஆரம்பம் இருளில்தான் முடிவும் என்பதை காற்றில் கரைந்துகொண்டிருந்த வெளிச்சம் இருள் மண்டிய உலகிற்கு உணர்த்தியது. ஒரு நொடியேனும் நேரே நிற்கத்தெரியாது திரியின் நுனியில் தீ நடனமாடிக்கொண்டிருந்தது. எண்ணெய் இருக்கும்வரை எரியலாம் ஆனாலும் பிறவிப்பயனை அளித்துவிட்டுதான் அழிந்து போகின்றன திரிகள்.
கலைந்த கூந்தலோடு கனலாக எரியும் கண்களோடு வெண்ணாடைக்குள் ஒளிந்து கொண்டு விண்ணக தேவதை மண்ணகம் வந்தாள் மணிப்பூர் சென்றாள். இருப்பேனா இறப்பேனா என்ற பயமற்று உடலை மட்டும் வைத்து உலகையே உலுக்கி எடுக்கிறாள். இரோம் ஷர்மிளா இந்தியா மறந்துவிட்ட போராளி.
பறந்து திரியும் பட்டாம்பூச்சிபோல வாழத்துடிக்கும் வாலிபப் பருவத்தில் இராணுவச் சீருடைக்காரர்கள் வக்கற்ற சில்லறை மனிதர்களை வக்கிரத்தோடும் வன்முறையோடும் சீரழித்தது கண்டு சினந்து எழுந்தவள் வாளெடுத்துப் போரெடுக்க வழியில்லாது உடலையே ஆயுதமாக்க ஒரு டம்ளர் பழரசத்தோடு நிறுத்திக்கொண்டாள். பொதுவாக பழரசத்தோடு முடியும் உண்ணாவிரதம் இங்கே அப்படித்தான் ஆரம்பமானது. உதடுகள் உணவு தொட்டும் நாக்கில் ருசி பட்டும் வருடங்களாகிப்போனதால் வயிறு வறண்டுவிட்டது மாதவிடாய் நின்றுவிட்டது. சவக்கிடங்கு போவதற்குள் சாதிக்க வேண்டி சத்தியம் செய்து சகாராக் குழந்தைபோல சத்தில்லாது தினமும் செத்துக்கொண்டிருக்கிறாள். இந்த நோஞ்சானைக் கண்டு நொண்டியடிக்கிறது அரசு. தற்கொலை என்ற பெயரிலே சிறை வைக்கிறது. அறப்போராட்டத்தின் மதிப்பு காந்தியோடு புதைக்கப்பட்டுவிட்டதால் வெட்டியான் வேலை செய்யப்போவதில்லை நமது அரசியல்வாதிகள். குஞ்சுகளைக் காப்பாற்றும் தாய்க்கோழியாக போர்புரிய முனைந்து நகங்களைப் பயன்படுத்தினால் நக்சலைட்டுகளாக்கி கொன்றுவிடும் அவலநிலையை என்ன சொல்வது? கொலை செய்வதும், தற்கொலைக்குத் தூண்டுவதும் அரசின் கொள்கையே தவிர அதற்கு அப்பாவிகள் காரணமல்ல.
காளைகளுக்கு இல்லாதது கயல்களுக்கு மட்டுமே என காலங்காலமாய் கட்டமைக்கப்பட்ட கலாச்சாரக்கூறாகிவிட்டது கற்பு. கணவனை மட்டும் ‘கவனி’த்துக்கொள்வதும் அவனை மட்டும் நினைத்துக்கொள்வதுமா? காலையில் எழுந்து காப்பி கொடுப்பதும் கால்களில் விழுந்து ஆசி பெருவதுமா? கற்பின் வரையரை என்ன? நேர்மை தவறிய மதுரைக்காக – தன் மார்பைப் பிடுங்கிய கண்ணகி வாழ்க்கையில் தவறிய கணவனைக் கண்டு என்ன செய்தாள்? எப்படியும் இருந்துவிட்டு வருபவன் எப்போது வருவானோ என்று காத்திருக்கவேண்டும். இதுதானய்யா அடிமைத்தனம்? கடத்திய இராவணின் கைநிழல் படவில்லையெனினும் கட்டிய கணவன் கடிந்து விழுகிறான். ஆசை மனைவி அன்போடு பணிகையில் ஆக்கினை போக்க அக்கினியில் நடவென்கிறான். தீய்ந்தது அவ்எரி கற்பின் தீயினால் - ஆக எரித்திருக்க வேண்டும் தீயவனை. மனதில் நினைத்தவன் மரியாதை தந்தான் மணத்தில் இருந்தவன் இரணத்தில் மிதந்தான். இதுவரை நான் வாசித்ததேயில்லை ஆண் கற்பழிக்கப்பட்டானென்று. ஆணுக்கு கற்பில்லையா - இல்லை அழிக்கப்பட முடியாதொன்றா? கயிறுகள் மட்டுமல்ல கருத்துக்கள்கூட நம்மை கட்டியிருக்கலாம். கட்டவிழ்ப்போம்.