Thursday, 26 September 2013

செபம்



கடவுளே, நீ நல்லாருக்கியா?
நா நல்லாவே இல்ல. போ
இன்னக்கி அந்த பெரிய வீட்டுப்பையன்
என்னப் பாத்ததுமே மூஞ்சிய சுளிச்சானா.
அவங்க அப்பா என்கூட பேசக்கூடாதுனு சொன்னாங்களாம்.
குடிசைவீட்ல இருந்தா அசிங்கமா?
நீயே சொல்லு.

நா போட்ருக்க சட்டை கிழிஞ்சிருக்குனு சொல்லி
சுரேசும் மணியும் கேலி பண்ணி சிரிக்கிறானுக.
எனக்கு மட்டும் புது சட்டை போடனும்னு
ஆச இருக்காதா?
அம்மாகிட்ட சொன்னா 
போன தீவாளிக்குத்தானே எடுத்தேங்கிறாங்க.
ஏதாவது சட்டை இருந்தா குடேன்.

பள்ளிக்கொடத்துல இன்னிக்கு எல்லாரையும்
என்ன சாப்டிங்கனு சாரு கேட்டாங்களா.
நா கஞ்சி குடிச்சேனு சொன்னேன்.
எல்லாரும் சிரிச்சிட்டாங்க.
அவனுக இட்லி தோசதான் சாப்புடுவானுகளாம்.
அது மாதிரிதானே கஞ்சியும்.
கஞ்சி சாப்டக்கூடாதா?

என் தம்பிக்கு ஒரு பொம்ம குடுப்பியா?
குப்ப மேட்டுல கெடந்து எடுத்த 
கொரங்கு பொம்மய உடச்சிட்டான்.

அப்புறம்...
எங்க அப்பா நெறய குடிக்கிறாரு
அம்மாட்ட காசு இல்லனு ஒரே சண்டையா இருக்கு.
வீட்ல இருக்கவே கஸ்டமா இருக்கு.
எங்கப்பா வந்தாருனாவே நா
கோகிலா வீட்டுக்குப் போயிடுவேன்.
அங்கதானே கலர் டி.வி இருக்கு.

எப்டியாச்சும் நா நல்லா படிச்சு பாஸாகனும்.
ப்ளீஸ் பா...

No comments:

Post a Comment