காதலிப்பது என்ன
அவ்வளவு பெரிய குற்றமா?
ஆதி மனிதன்ஆரம்பித்து
அன்றாட வாழ்வின் அடிநாதமே காதல்தானே!
ஆன்மீக இலக்கியங்களில் நுழைந்து
ஆராதனைக்கும் அர்ச்சனைகளுக்கும் மூலமே
இந்த காதல்தானே.
காதல் இல்லாமலா நீயும் நானும் பிறந்தோம்?
காதலுக்குக் கொள்ளி வைக்கும்
கொள்ளைக்கார கூட்டமொன்று நம்மிடையே நடமாடுகிறது.
இவரைத்தான், இதற்குள்தான் என வட்டமிட
இந்தக் காவாளிகள் யார்?
இதோ இளவரசன் இறந்துவிட்டான்/ கொல்லப்பட்டான்.
அவன் செய்த பாவம் காதல்.
பாவம் - காதல்மேலா, காதலிப்போர்மேலா?
எத்தனையோ இளவரசன்களையும் இளவரசிகளையும்
இழந்துவிட்டோம்.
இளையோரே உஷார், உஷார்.
மீன்பிடிக்க உயிரிழக்கும் புழுபோல
மானம் காக்க நீ சாகிறாய், கொல்லப்படுகிறாய்.
எது பெரியது?
மானமா? உயிரா?
மானமாவது மயிராவது
உயிர்வாழத்தான் நீ பிறந்தாய்.
தாழ்த்தப்பட்டவன் கொல்லப்பட்டாலும்
காலனிகள் கொழுத்தப்பட்டாலும்
தாழ்ந்த குரலில்கூட எதிர்க்கத் தயங்கும்
இழிந்த என் இனமே
கொல்லப்பட்டவனுக்கும் ஒரே உயிர்தானே.
விழித்தெழு தோழா!
நாளை இதே நிலை உனக்கும் வரும்.
துணைக்கு யார் வருவார்?
தைரியமானவன் மட்டுமே காதலிக்க முடியும்
தைரியம் இருந்தால் மட்டுமே காதலி.
இழிந்த இந்த இந்திய சமூகத்தில்
காதலும் சாதலும் ஒன்றே.
ஆனாலும் சாகத்துணியாதே
வாழத்தானே காதலித்தாய்.
வாழ்ந்துகாட்டு.
No comments:
Post a Comment