அடிமைத்தனம் நிறத்தில் தெரிவதால்
அருவருப்பு முகத்தில் தெரிக்கிறது.
அமெரிக்கா அழகானதுதான்
அழகாக்கியது அழுக்கு அடிமைகள்.
இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகள் வரை
இரண்டாம்தர குடிமக்களாக
இல்லை இல்லை
இருண்ட கண்டப் பிராணிகளாக
நடத்தப்பட்டனர்.
திமிறி எழுந்தவர்களெல்லாம்
ரவைக்குப் பலியாகிப் போனதுதான் மிச்சம்.
தாடிக்கார லிங்கன் எடுத்த முயற்சி
பிரிவினைக்குத்தான் வித்திட்டது.
ஒட்டுவதற்கு அவன் கொடுத்த விலை
அமெரிக்க வரலாற்றின் மோசமான நிலை.
உரிமையா! அடிமைகளுக்கா?
ஹா ஹா ஹா ஹா நல்லாருக்கே கதை.
அப்டின்னா விவசாயம் செய்றது யாரு?
சுமை தூக்கி கட்டுமானம் செய்றது யாரு?
சாக்கட, குப்பையெல்லாம் நாமலா அள்ள முடியும்?
நம்ம வீட்ட நாமதான் பெருக்கி சுத்தம் செய்யனும்மா?
இது என்னயா கூத்து?
சட்டம் வழங்கிய உரிமைகள் பார்த்து
சந்தி சிரித்தது.
வரிகளில் இருந்தால் போதுமா – அதற்கு
வாழ்வு கொடுக்கப் போவது யார்?
கர்ஜனைக்காகக் காத்திருந்தார்கள்
மியாவ் மியாவ் கருப்பர்கள்.
லூத்தர்கிங் கர்ஜனையில் அமைதி தெரிந்தது
மால்கம்-எக்ஸ் கர்ஜனை ஆத்திரம் தெளித்தது.
நோக்கம் ஒன்றாயினும் பாதைகள் தனித்தனி.
'அறைபவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு'
ஆதிக்க வெறிக்கு எதிரான போராட்டம்
கருப்புக்காந்தி லூத்தருடையது.
ஒரு கன்னத்தில் அறைந்தால்
இரு கன்னத்திலும் திருப்பி அடி.
வெள்ளையன் எவனுமே என்றுமே நல்லவனல்ல
இனத்திற்கு எதிரான போராட்டம்.
மால்கம்-எக்ஸ் கொஞ்சம் சூடாகவே மிரட்டினார்.
இயேசுவைப் போதிக்கும் போதகராய் இருப்பினும்
அவன் தந்தை சமூகத்தைத் தட்டிக்கேட்கத் தவறவில்லை.
அதனாலேயே கொல்லப்பட்டார்.
ஏழையாய், திருடனாய், ஏமாற்றுபவனாய்
கடத்தல்காரனாய் கைதியாய் இருந்தவன் எக்ஸ்.
ஆதிக்க இனமாய் இருந்த வெள்ளையரோடு
அல்லாஹ்வின் பெயரில் அறப்போர் நடத்தினார்,
அதைத் தீவிரமாய் நடத்தினார்.
கருப்பர்களின் கவலையற்ற வாழ்வுக்காய்
இருப்பதையெல்லாம் இழந்தார்
பாவம்! வெள்ளாடுகள் சில செம்மறியாயும்
செம்மறிக்கூட்டத்தில் சில கருப்பாடுகளும்
அவன் கண்களுக்குத் தெரியாமலேயே போய்விட்டன.
No comments:
Post a Comment