Saturday, 13 July 2013

சாந்தா மரியா

அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தேன்.
பல மாதப்பயணம் அது.
'யுரேகா! இந்தியாதான் இது' என
கொலம்பஸ் கொண்டாடிக் கொண்டிருந்தான்.
கையில் சிலுவை எடுத்து முத்தமிட்டான்

பார்த்திராத ஒன்று வந்திருப்பதாக 
பதுங்கி முன்னேறியது செவ்விந்தியக்கூட்டம்
விஷமேறிய அம்புகள் தாக்குதல் நடத்தத் 
தயாராகத்தான் இருந்தன.
குறிபார்க்குமுன்னே பிணக்குவியலாகிப் போயினர்.
தோட்டாக்கள் நிரம்பியிருந்த துப்பாக்கிகள்
குப்பிகளை மட்டும் துப்பிக்கொண்டிருந்தன.
கொஞ்சம் முன்புவரை நீலக்கடலில் நின்ற நான்
நிஜமாகவே நிறமாறிப் போனேன்.
மூழ்கிப்போனாலும் அழியாத செந்நிறம் அது.

வெற்றிக்களிப்பில் வெறி தணிந்தவர்களாய்
தாய்நாடு திரும்பினார்கள்
"தந்தையே இவர்களை மன்னியும்" என
மனம் நொந்து வேண்டுகையிலே
மீண்டும் அதே பயணம்
இன்னும் அதிக ஆயுதங்களோடு.
கொள்ளைநோய்ப் போர்வைகள் 
பொதிகளாய் அடுக்கப்பட்டிருந்தன.
போர்வீரர்கள் படைகளாய்த் திரண்டு வந்தனர்.
புதிதாக போதகர்கள் வேறு.

உயிர்கொல்லியாக போர்வைகளும் போர்வீரர்களும்
இனம்கொல்லியா போதகர்களும் 
நன்றாகவே போரிட்டனர்.
உரிமையாளர்களின் மொத்த அடையாளமும்
துடைத்தழிக்கப்பட்டன.
பிடுங்கிய நிலத்தை புதிய நாடெனப் பெயரிட்டனர்
உயிர் பிழைத்த ஒன்றிரண்டு செவ்விந்தியக் கழுத்துகளில்
தொங்கிக்கொண்டிருந்தார் இயேசு
கண்ணீரை மறைக்க கையின்றி.

காலனியாதிக்கத்தைக் கவனித்துப்பார்.
கொண்டுவரப்பட்டது வியாபாரம் மட்டுமல்ல
மதமும், மொழியும்தான்.
கொள்ளையிடப்பட்டது வளங்கள் மட்டுமல்ல
கலாச்சாரமும், சுயசிந்தனையும்தான்



சாந்தா மரியா
(கொலம்பஸ் பயணம் செய்த கப்பல் பெயர்)


No comments:

Post a Comment