குடிகாரக் கனவன். குடலைப்பிரட்டுகிறது வாடை. 'ஊரே கேட்கும்படி உளறுகிறானே. கொடுத்த சாப்பாட்டையும் கொட்டிவிட்டான். நான் என்ன செய்வேன்
உடல் பாழாய்ப் போயிடுமே' சிந்தித்த சில வினாடிகளிலேயே திடீரென எழுந்தான். அகோரப்பசியில் அவள்மேலே விழுந்தான். இரண்டு உடல்களும் பாழாய்ப்போயின. பாவம் பெண் 'வலி'யோடே வாழ்க்கை நடத்துகிறாள்.
அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தேன். பல மாதப்பயணம் அது. 'யுரேகா! இந்தியாதான் இது' என கொலம்பஸ் கொண்டாடிக் கொண்டிருந்தான். கையில் சிலுவை எடுத்து முத்தமிட்டான் பார்த்திராத ஒன்று வந்திருப்பதாக பதுங்கி முன்னேறியது செவ்விந்தியக்கூட்டம் விஷமேறிய அம்புகள் தாக்குதல் நடத்தத் தயாராகத்தான் இருந்தன. குறிபார்க்குமுன்னே பிணக்குவியலாகிப் போயினர். தோட்டாக்கள் நிரம்பியிருந்த துப்பாக்கிகள் குப்பிகளை மட்டும் துப்பிக்கொண்டிருந்தன. கொஞ்சம் முன்புவரை நீலக்கடலில் நின்ற நான் நிஜமாகவே நிறமாறிப் போனேன். மூழ்கிப்போனாலும் அழியாத செந்நிறம் அது. வெற்றிக்களிப்பில் வெறி தணிந்தவர்களாய் தாய்நாடு திரும்பினார்கள் "தந்தையே இவர்களை மன்னியும்" என மனம் நொந்து வேண்டுகையிலே மீண்டும் அதே பயணம் இன்னும் அதிக ஆயுதங்களோடு. கொள்ளைநோய்ப் போர்வைகள் பொதிகளாய் அடுக்கப்பட்டிருந்தன. போர்வீரர்கள் படைகளாய்த் திரண்டு வந்தனர். புதிதாக போதகர்கள் வேறு. உயிர்கொல்லியாக போர்வைகளும் போர்வீரர்களும் இனம்கொல்லியா போதகர்களும் நன்றாகவே போரிட்டனர். உரிமையாளர்களின் மொத்த அடையாளமும் துடைத்தழிக்கப்பட்டன. பிடுங்கிய நிலத்தை புதிய நாடெனப் பெயரிட்டனர் உயிர் பிழைத்த ஒன்றிரண்டு செவ்விந்தியக் கழுத்துகளில் தொங்கிக்கொண்டிருந்தார் இயேசு கண்ணீரை மறைக்க கையின்றி. காலனியாதிக்கத்தைக் கவனித்துப்பார். கொண்டுவரப்பட்டது வியாபாரம் மட்டுமல்ல மதமும், மொழியும்தான். கொள்ளையிடப்பட்டது வளங்கள் மட்டுமல்ல கலாச்சாரமும், சுயசிந்தனையும்தான்
காதலிப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? ஆதி மனிதன்ஆரம்பித்து அன்றாட வாழ்வின் அடிநாதமே காதல்தானே! ஆன்மீக இலக்கியங்களில் நுழைந்து ஆராதனைக்கும் அர்ச்சனைகளுக்கும் மூலமே இந்த காதல்தானே.
காதல் இல்லாமலா நீயும் நானும் பிறந்தோம்?
காற்றைப்போல நீக்கமற நிறைந்திருக்கும் காதலுக்குக் கொள்ளி வைக்கும் கொள்ளைக்கார கூட்டமொன்று நம்மிடையே நடமாடுகிறது.
இவரைத்தான், இதற்குள்தான் என வட்டமிட இந்தக் காவாளிகள் யார்? இதோ இளவரசன் இறந்துவிட்டான்/ கொல்லப்பட்டான். அவன் செய்த பாவம் காதல். பாவம் - காதல்மேலா, காதலிப்போர்மேலா?
எத்தனையோ இளவரசன்களையும் இளவரசிகளையும் இழந்துவிட்டோம். இளையோரே உஷார், உஷார். மீன்பிடிக்க உயிரிழக்கும் புழுபோல மானம் காக்க நீ சாகிறாய், கொல்லப்படுகிறாய். எது பெரியது? மானமா? உயிரா? மானமாவது மயிராவது உயிர்வாழத்தான் நீ பிறந்தாய். தாழ்த்தப்பட்டவன் கொல்லப்பட்டாலும் காலனிகள் கொழுத்தப்பட்டாலும் தாழ்ந்த குரலில்கூட எதிர்க்கத் தயங்கும் இழிந்த என் இனமே கொல்லப்பட்டவனுக்கும் ஒரே உயிர்தானே. விழித்தெழு தோழா! நாளை இதே நிலை உனக்கும் வரும். துணைக்கு யார் வருவார்? தைரியமானவன் மட்டுமே காதலிக்க முடியும் தைரியம் இருந்தால் மட்டுமே காதலி. இழிந்த இந்த இந்திய சமூகத்தில் காதலும் சாதலும் ஒன்றே. ஆனாலும் சாகத்துணியாதே வாழத்தானே காதலித்தாய். வாழ்ந்துகாட்டு.
அடிமைத்தனம் நிறத்தில் தெரிவதால் அருவருப்பு முகத்தில் தெரிக்கிறது. அமெரிக்கா அழகானதுதான் அழகாக்கியது அழுக்கு அடிமைகள். இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகள் வரை இரண்டாம்தர குடிமக்களாக இல்லை இல்லை இருண்ட கண்டப் பிராணிகளாக நடத்தப்பட்டனர். திமிறி எழுந்தவர்களெல்லாம் ரவைக்குப் பலியாகிப் போனதுதான் மிச்சம். தாடிக்கார லிங்கன் எடுத்த முயற்சி பிரிவினைக்குத்தான் வித்திட்டது. ஒட்டுவதற்கு அவன் கொடுத்த விலை அமெரிக்க வரலாற்றின் மோசமான நிலை. உரிமையா! அடிமைகளுக்கா? ஹா ஹா ஹா ஹா நல்லாருக்கே கதை. அப்டின்னா விவசாயம் செய்றது யாரு? சுமை தூக்கி கட்டுமானம் செய்றது யாரு? சாக்கட, குப்பையெல்லாம் நாமலா அள்ள முடியும்? நம்ம வீட்ட நாமதான் பெருக்கி சுத்தம் செய்யனும்மா? இது என்னயா கூத்து? சட்டம் வழங்கிய உரிமைகள் பார்த்து சந்தி சிரித்தது. வரிகளில் இருந்தால் போதுமா – அதற்கு வாழ்வு கொடுக்கப் போவது யார்? கர்ஜனைக்காகக் காத்திருந்தார்கள் மியாவ் மியாவ் கருப்பர்கள். லூத்தர்கிங் கர்ஜனையில் அமைதி தெரிந்தது மால்கம்-எக்ஸ் கர்ஜனை ஆத்திரம் தெளித்தது. நோக்கம் ஒன்றாயினும் பாதைகள் தனித்தனி. 'அறைபவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு' ஆதிக்க வெறிக்கு எதிரான போராட்டம் கருப்புக்காந்தி லூத்தருடையது. ஒரு கன்னத்தில் அறைந்தால் இரு கன்னத்திலும் திருப்பி அடி. வெள்ளையன் எவனுமே என்றுமே நல்லவனல்ல இனத்திற்கு எதிரான போராட்டம். மால்கம்-எக்ஸ் கொஞ்சம் சூடாகவே மிரட்டினார். இயேசுவைப் போதிக்கும் போதகராய் இருப்பினும் அவன் தந்தை சமூகத்தைத் தட்டிக்கேட்கத் தவறவில்லை. அதனாலேயே கொல்லப்பட்டார். ஏழையாய், திருடனாய், ஏமாற்றுபவனாய் கடத்தல்காரனாய் கைதியாய் இருந்தவன் எக்ஸ். ஆதிக்க இனமாய் இருந்த வெள்ளையரோடு அல்லாஹ்வின் பெயரில் அறப்போர் நடத்தினார், அதைத் தீவிரமாய் நடத்தினார். கருப்பர்களின் கவலையற்ற வாழ்வுக்காய் இருப்பதையெல்லாம் இழந்தார் பாவம்! வெள்ளாடுகள் சில செம்மறியாயும் செம்மறிக்கூட்டத்தில் சில கருப்பாடுகளும் அவன் கண்களுக்குத் தெரியாமலேயே போய்விட்டன.