Thursday, 4 October 2012

சொரணையற்ற மனசாட்சி


காய்த்துக் கனிந்த கழனிகள் எல்லாம்
காய்ந்த மரச் சருகுகளாய் வெளுத்துக்கிடக்க 
ஏரியும் குளமும் கூட காரியவாதிகளின் கவனிப்பால் 
ஏந்தி நிற்கின்றன 'விற்பனைக்கு' பதாகைகள்.
மலைபிளந்து தரைகுடைந்த கிரானைட் கள்வர்களால்
களையிழந்து கண்ணீர் விடும் கண்மாய்க் கரையோரங்களில்
விலைகொடுத்து வாங்கப்பட்டது கல் மட்டுமல்ல, கலெக்டர்களும்தான்.
பொல்லாத உரமும் மக்காத பையும்
பொன்னான மண்ணை  பொலிவிழக்க செய்து விட்டன.

வருடம் முழுதும் வந்த நீர் வாய்க்கால் நிறைத்ததால்
வரப்பும் குடியும் உயர்ந்து கோன் மகிழ்ந்த நாடிது.
பொறுப்பற்ற அரசுகளால் நீர் இருப்பற்ற ஆறுகளின் 
மேலாடையும் உள்ளாடையும் (நீரும் மணலும்) 
உரியப்பட்டு விட்டன.
வெட்கமில்லாது வேடிக்கை பார்க்கிறோம் 
அவளின் வெற்றுடலை.
வற்றாத நதிகளாய் வழிந்தோடும் கழிவு நீர்
எட்டாத விலையில் ஏகாதிபத்திய நாடுகளின் குடிநீர் 
உடலோடு ஒன்றாகி விஷமாகும் சுவைநீர்
அதிகாரத்தின் ஆதாயத்தின் மிச்சம் ஏழையின் கண்ணீர்.


 நகரத்து சாலைகளில் படிந்த தூசி இப்போது 
நகருமிடமெல்லாம் பரவுகிறது.
சத்தமில்லாமல் பறக்கும் சுத்தமில்லாத காற்று - அத்
தூசியினால் நாசி அடைக்கும் சளி 
சளியைத் துப்பி நோய் பரப்பும் நாம்தான் 
காரித்துப்பப்பட வேண்டியவர்கள். த்தூ 
புகைத்துப்பார் புற்று நோய் வரும் -இருந்தும்
புகைபிடிக்கும் புத்தியில்லா புத்திசாலிகள்.
குப்பை எரிப்பதில் முடியும் நம் கடமை.
எரிக்கும் புகை எமன் என்று யாருக்குத் தெரியாது?
வளிமண்டலம் சளிமண்டலமாகவும் 
புகைமண்டலமாகவும் ஆக்கிவிட்டு 
மரம்நடத்தான் ஆளில்லை.

 நூறாவது செயற்கைக்கோள் செலுத்தியது இந்தியா
மீதி தொண்ணூற்றி ஒன்பது எங்கே?
நம்நாடு மட்டும் நூறேன்றால், மற்ற நாடுகள்?
எல்லையற்ற குப்பைமேடாகும் நிலையால் 
விண்ணகம் மண்னகமாய் நாறிப்போனது 
பாவம்! எப்படித்தான் இருக்கிறாரோ கடவுள்.

நிலம், நீர், காற்று, ஆகாயமெல்லாம் அழிகின்றன.
"எதுவும் தப்பில்லை", "யாருதான் செய்யல" 
உரிமை உள்ள உனக்கு உலகம் காக்கும் 
கடமையும் உண்டென களத்தில் இறங்கு.
சந்ததி பெருக்குமுன் இந்த சங்கதி தெரிந்துகொள்.

No comments:

Post a Comment