அன்றாடம் திருப்பலி
அடிக்கடி அல்லேலுயா
கோயிலைக் கண்டால் சிலுவை
வாயின் முத்தத்தில் ஆரம்பிக்கும் வாசகம்
ஜெபத்தின் பின்னரே சாப்பாடு - இரவு
சாப்பாடு முடிந்ததும் செபமாலை என
அனுதினமும் ஆன்மீக காரியங்களில் செலவிடும்
பக்திமான்களின் விசுவாசம்
பச்சைக்குழந்தைகளின் விசுவாசத்திற்குமுன்
பஸ்பமாகி விடுகிறது.
ஆண்டவரின் அழைப்பு ஆச்சரியமாய் வந்தது.
சொத்துக்களோடு சுகமாக இருந்திருக்கலாம்.
எழுபத்தைந்து வயதிலும் எழுந்து நடந்தார்
நாடு கடந்தார்.
"குழந்தை தருவேன்" என கூறியபோது
மனம் குருகியிருப்பர்.
"நுறு வயதிலா குழந்தை பிறக்கும்?"
ஆனாலும் காத்திருந்தார்.
இறைவாக்கு நிறைவேற இருபத்தைந்து ஆண்டுகள்.
குழந்தை பிறந்தது.
அகம் குளிர்ந்து முகம் மலர்ந்து
கண்கள் விரியக் கண்டு மகிழ்ந்திருப்பார்.
இப்போதாவது கொடுத்த வாக்கைக் காப்பாற்றினாரே.
"குழந்தையைப் பலியிடு" எனும் வார்த்தைகள்
இடியாக இறங்கியபோது
நானா கேட்டேன்? என கேட்க நா துணியவில்லை.
வானத்து விண்மீன்களாய் வாரிசு வருமென்றாரே
மனதிலே என்ன நினைத்தாரோ பாவம்.
தீயவரோடு நீதிமானையும் சேர்த்து அழிப்பீரோ என
யாருக்காகவோ பேசிய வாய்
வார்த்தையற்றுக்கிடந்தது
பார்வை கிடைத்தபின் பறிபோன
பிறவிக்குருடனாய்.
விதியே என பாராமல்
அதிகாலை எழுந்தார்.
மூன்று நாள் பயணம்
என்ன பேசியிருப்பார்?
சத்தமிட்டு அழ நினைத்தும் பெத்த பிள்ளைக்காய்
பொறுத்திருப்பார்.
மகனோடு மலை ஏறுகையில்
"நெருப்பிருக்க விறகிருக்க
பலியிட செம்மறி எங்கே?" என
மகன் கேட்கையில்
நெஞ்சு வெடித்து "நீதாம்பா அது"
என்று மலை அதிரும் அளவுக்கு அழுதிருந்திருக்கலாம்.
"கடவுள் தருவார்" எனும் வார்த்தைகளோடு
வாயடைத்துக் கொள்கிறார்.
மகனைக் கட்டுகையில்,
பீடத்தில் கிடத்துகையில்
துண்டுபோட துணிந்து கத்தி எடுக்கையில்
என்னெவெல்லாம் நினைத்திருப்பார்?
பச்சைக் குழந்தையின் விசுவாசத்தோடு
நிச்சயம் இறைவன் நிறைவையேத் தருவார் என
பலியிடத் துணிந்தார்
பன்மடங்கு ஆசீர் பெற்றார்
விசுவாசத்தந்தை ஆபிரகாம்.
விசுவாச ஆண்டு விடியப்போகிறது.
விளக்கின் வெளிச்சம் போல் விரியட்டும் நம் விசுவாசம்.
No comments:
Post a Comment