Thursday, 21 June 2018

வளரட்டும் சமூகவிரோதிகள்

பத்தாயிரம் கோடியில் பசுமை சாலை
எப்படியும் வந்தே தீரும் என்கிறார் முதல்வர்.
பல்லாயிரம் வளங்கள் அழித்துவிட்டு
பசுமை சாலை யாருக்காம்?
நெடுஞ்சாலை மரங்களை அகற்றிய அரசின்
சமூக அக்கறையை கள்ளிச் செடிகள்கூட மன்னிக்காது.
வளர்ச்சி என வாய்கிழிய கத்தும் காவடிதூக்கிகள் 
காரை ஏற்றுமதி செய்துவிட்டு 
சோறை எங்கு உற்பத்தி செய்வார்களாம்?
ஏரிகள் நான்கை செம்மைப்படுத்தி
ஏராளமான மரங்கள் நட்டு காடு வளர்க்கும்
எம் தோழர் பியூஸ் மனு~; சமூகவிரோதி.
சமூகசீர்கேட்டை சினிமாவில் பணமாக்கும்
புரட்சித்தளபதிகள் மத்தியில் 
உண்மையிலேயே போராடும் மன்சூர் அலிகான் சமூகவிரோதி
வெள்ளை வேட்டிகளாலும், பூட்ஸ் கால்களாலும் மிதிபடும்
ஏழை விவசாயிகளுக்கு ஒத்தையில் நின்று போராடும் 
நிஜ வேங்கை மகள் வளர்மதி ஒரு சமூக விரோதி.
என்னடா உங்க சட்டம்? 
என்னடா உங்க திட்டம்?

Tuesday, 8 May 2018

கடவுளுக்கும் வியர்க்குமோ?

சாலையோர மரங்கள் சவக்குழிக்குப் போனபின்
சோலைதேடி அலையும் ஞானப்பழங்கள் நாம் – சிவப்பு
சேலை கட்டியதால் வேம்பும் அரசும் தப்பித்தாலும்
பாலைவனமாகும் இந்தியாவில் பாமரனும் பரமனும் ஒன்றுதான்.
இருவருக்குமே வியர்த்துக் கொட்டுகிறது.
பரமனுக்கு பாஜக இருக்க
பாமரனுக்கு யார் இருக்கிறார்?
பார்வதியின் வியர்வையில் பிறந்த விநாயகருக்கு
வியர்க்கிறது என்று ஏசி வைத்திருக்கிறார்கள்
காவியோடு திரியும் யோகியின் பூமியில்.
கருவறைக்குள் கடவுளைத் தேடாதே – அவர்
கல்லுடைப்பவரின் கறையோடு உழைக்கிறார்
கழனியில் உழைப்பவனின் வியர்வையில் இருக்கிறார்.
தாகூரை எவ்வளவு முட்டாளாக்கிவிட்டோம்?
சிலை அகற்றுமுன் லெனின், அம்பேத்கர், பெரியார்
சித்தாத்தங்களைப் படித்திருக்கலாம்
காவி குர்தாக்களும் காக்கி டவுசர்களும்.
மாடுகளுக்கு ஆம்புலன்சும் ஆதாரும் கொடுத்து - ஏழை
மனிதர்களை விளிம்புக்கு விரட்டிவிட்டு
சாமிகளுக்கு ஏசி போடும் மடச்சாம்பிராணி யோகியின்
மண்டையில் முடிதான் இல்லையென்று நினைத்திருந்தேன்…

Monday, 30 April 2018

மரணிக்கும் மனசாட்சிகள்

கத்துகிறார்கள், கதறுகிறர்கள், கூச்சலிடுகிறார்கள்
பரிதாபமாகத்தான் கடந்துபோகிறேன்.
பங்கெடுக்க ஆளில்லை.
மாட்டுக்குச் சேர்ந்த கூட்டம் - வாடும்
மனிதனுக்கு ஏன் கூடவில்லை?
“நான் விவசாயி இல்லை” என்பதாலா?
கொழுத்த ஊதியம் வாங்கும் ஊழியருக்கும்
வியர்த்து உழைக்கும் விவசாயிதானே கடவுள்!
வருமானம் வரும் வழிகள் அதிகரித்துவிட்டதால்
அவனது இரத்தம், கண்ணீர், வியர்வை
துர்நாற்றத்தைத்தான் தருகிறதோ?
ஆம். அதனால்தான் எரிச்சலோடு முனங்குகிறேன்
“ஏன் எந்நேரமும் போராடி மக்களுக்கு இடையூறு செய்யனும்?”
அபாயம்
மக்கள் லிஸ்டில் விவசாயி இல்லை.
கிராமங்கள் அந்நியமாக்கப்படுகின்றன.
விவசாயி தீண்டத்தகாதவனாகிவிட்டான்.

Sunday, 15 April 2018

மதவெறி இரதவெறி இரத்தவெறி

ஆடு மாடு குதிரை மேய்க்கும்
ஏடுதொடாத ஏழைச்சிறுமி அவள்.
ஆலய கருவறைக்குள் அலங்கோலப்பட்ட
கத்துவா கிராமத்து கத்தாத செம்மறி அவள்.
பக்தனையாக் கொல்வது என்ற பதட்டத்தில்
ஆயுதமிருந்தும் இருந்தும் கண்மூடினார் தேவி.
சிறுவர்கள் முதியவர் காவலர் என
காமக்கயவர்களின் கரங்களில் காய்ந்துபோனாள் அவள்.
காரணம், அந்த குடும்பம் வெளியேறனும்.
இந்துப் பகுதியில் இஸ்லாமியன் ஏன்?
குடும்பம் சிதைந்தது நினைத்தது நடந்தது.
மூன்று மாதங்களாக இந்துத்துவா அமைப்பு
பணம் கொடுத்து பதுக்கியது.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அமைதி துறந்த
அற்ப தலைவர்தான் நமது பிரதமர்.
குஜராத்தில் இவர்கள் நடத்தாத அக்கிரமா?
பா.ஜ.க வின் முதல்வெறி என்பது சாதி,மதவெறியே.
கயவர்களைக் காப்பாற்றும் மந்திரிகளா
இந்தியாவை வல்லரசாக்குவார்கள்?
நாய்களுக்குக்கூட நாகரீகம் தெரியும். இந்தப்
பேய்களுக்கா மூளை, இதயம் இருக்கும்?

Friday, 13 April 2018

விழிகள் விசாலமாகட்டும்

இன்றா தமிழ்ப்புத்தாண்டு என்று
அன்றே மண்டையை சொரிந்தார் கலைஞர். ஆனால்
இன்றுதான் அந்த மகான் பிறந்தார்.
அறிவை ஆயுதமாக்கி பகுத்தறிவை மூலதனமாக்கி
தெளிவான சிந்தனையால் இந்தியாவின் சிற்பி.
வரலாற்றில் வீழ்த்தப்பட்டவர்களாய்க் கிடந்த
தாழ்த்தப்பட்டவர்களின் தலைமைப் போராளி
அண்ணல் அம்பேத்கர்.
தேசியத் தலைவரை சாதியத்தலைவராக மட்டும் 
பேசித்திரியும் கினற்றுத்தவளைகள்தானே நாம்.
விழிகள் விசாலமாகட்டும்.

Sunday, 8 April 2018

நமோவின் கொபசெ எபசா

காற்று நச்சாகுமென்று ஸ்டெர்லைட் வேண்டாம் என்றோம்
வெட்டியான்களுக்கு வேலை கிடைக்கும் என
பெட்டி வாங்கினார் இதயதெய்வம்.
மயான அமைதியில் மக்கள் அரசு.
ஏற்றத்தாழ்வு கல்விமுறையால் நீட் வேண்டாம் என்றோம்
நம்பவைத்து கம்பி நீட்டினர், 
மலைவளம் அழியும் என்று நியூட்ரினோ வேண்டாம் என்றோம்
நியு இந்தியா இதுவென்றனர் 
விவசாயம் அழியும் மீத்தேன் வேண்டாமென்றோம்
சமைக்க கேஸ் வேண்டுமே என்றனர்
எதை சமைக்கப் போகிறோம்?
சாவான் மீனவன் என சாகர்மாலா வேண்டாம் என்றோம்
கிறித்தவர்கள் வளர்ச்சியின் எதிரிகள் என்றனர்
விவசாயி சாகிறான் காவிரியில் நீர் வேண்டுமென்றோம்
வார்த்தை விளங்கவில்லை என வாய்தா கேட்கிறான்
ஏமாற்றுக்காரர்களை விமானத்தில் ஏற்றிவிட்டு
ஏமாறும் ஏழைகளைக் கொன்றுவிட்டு 
வளர்ச்சி வளர்ச்சி என இராணுவ கண்காட்சியில்
மலர்ச்சியோடு பேசவிருக்கிறான்.
தாலி அறுத்த தாடிக்காரன்.

Friday, 6 April 2018

கண்கலங்கும் காவிரித்தாய்...



கொளுத்தும் வெயிலில் புதைந்து மணலில்
படுத்துக்கிடக்கும் முதியோர் பலர்.
விளையவைத்த விவசாயிகளே
விலைக்கு வாங்கும் நிலையில் விட்ட
வெள்ளை வேட்டிக்காரர்களை என்ன சொல்லி கொல்லுவது?
பொன்னி நதியில் தண்ணீர் கேட்டு
தன்னுடல் வருத்தி விடுப்பது என்ன?
நரைத்துப்போன கிழ வயதில் நடத்துகிறேன் புரட்சி
புளுத்துப்போன சாதிமத உணர்வுகளை விரட்டி
திரைஒளியில் புரட்சி நடத்தும் போலிகளை விடுத்து
இளவயதில் ஒன்றுசேர், கற்பி, போராடு நண்பா.
என் வீடு, என் பிள்ளை, என் வேலை என்றுனை
நத்தையாய் சுருக்கும் சுயநல ஓட்டை உடைத்து
பாரடா, மானுடப் பரப்பைப் பாரடா.
சோறு திங்கும் உனக்கும் சேர்த்துதான் போராடுகிறேன்.
மதிய வெயிலுக்கு அஞ்சி மானத்தை இழப்பாயா - இல்லை
புதிய உணர்வு கொண்டு பொங்கி எழுவாயா?