Thursday, 2 April 2026

சிலுவை

எளிமையில் பிறந்த இறைமகனார்

சிலுவையில் மரித்த நிலையினைப் பார்

அன்பு மரணம்போல் வலியதுவே – பிறர்

துன்பம் களையும் மொழியதுவே

சிலுவையே மாபரன் தத்துவம், அது மட்டுமே மானிட மகத்துவம்


விரிந்த கரங்களின் ஆணிகள் அன்று

கிழித்த சதையின் வலியினைக் கொண்டு

பேரன்பின் வழியே பெரும்புரட்சி செய்தவர்

கள்வனின் கனவையும் கனிவுடன் கேட்டார்.

போதித்த நற்செய்தி போதுமென்ற மனதோடு

காயங்கள் மறந்து கடவுளை வேண்டினார்.

மரங்கள் வளர்ப்பது அறமாகும் - சிலுவை

மரம்தானே நமக்கெல்லாம் வரமாகும்.


ஏழைக்கு நற்செய்தி சொல்லிடும் சிலுவை

சேவைக்குத் தேவையாய் வந்திடும் சிலுவை 

பாவிக்குத் துணையாய் நின்றிடும் சிலுவை – விசாலப்

பார்வைக்கு இயேசுவைத் தந்திடும் சிலுவை

வேண்டும் பொருளாய் சிலுவை இருந்தால் 

காணும் துன்பம் கண்ணீராய் மாறும்

தீமை கண்டு கிளர்ந்து எழுவோம்

தினமும் சிலுவை சுமந்து நடப்போம்.

Wednesday, 25 February 2026

குற்றவாளி: 9658


அவன் செய்த குற்றம் 

இந்த தேசத்தில் நல்லவனாக இருந்தான். 


வாக்குச்சாவடியில்கூட அடிப்படை வசதிகள் இல்லை

ஆனாலும் அரன்மனையில் வாழும் அரசியல்வாதிகள்

ஓட்டுக்கு நோட்டு கொடுத்தால் போதும்

எதைப் பற்றியும் கவலைப்படாத தேசம்.

தற்குறிக்கூட்டம் ஜனநாயகத்தில் எதையும் செய்ய முடியும்.

செய்திருக்கிறார்கள், செய்யவிருக்கிறார்கள்.

திரைப்போராளிகளுக்குத் தூபம் காட்டத்தான் 

திராவிடக்கல்வி வடிக்கப்பட்டது போல.

களப்போராளிகள் கழுவேற்றப்படுகின்றனர்.

காமராசர், நல்லகன்னு என வரிசை நீள்கிறது.

செவப்பா இருந்தாலே போதும் எனும் அருவருப்பான அம்மாக்களில்

இவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று எண்ணியதால்

நல்லகன்னு… 

ஜெயன்