விட்டில்பூச்சியாய் வீட்டுக்குள் கிடக்கையில்
வானைக்காட்டி வாழ்வுக்கான வழி சொன்னது கல்வி
சிறுசிறு அடி வைத்து சுறுசுறுப்பாக இயங்கி
சிகரத்தை அடைய நினைத்து பயணம் தொடங்கையில்
சில நேரங்கள் சறுக்கி விழுந்தேன்
பல நேரங்கள் நொந்து அழுதேன்.
இலக்கு நோக்கிய பயணத்தில்
இமயம்கூட சாத்தியமே என
இக்கல்விச்சாலையின் சான்றோர்
ஊக்கப்படுத்தினர், உடன் நடந்து வழிகாட்டினர்.
புத்தகங்களும், பயணங்களும் என்னை
எனக்குள்ளே பயணிக்க வைத்தன.
காயங்களே அனுபவங்களாகி
கனிதர ஆரம்பித்தன.
விடியல் தர ஆரம்பித்தேன்.
1931, மார்ச் 23, நிசப்தமான லாகூர் சிறையை
இருள் தின்று மென்றுகொண்டிருந்தது.
மன்னிப்பு கடிதம் மறுக்கப்பட்டது.
மந்திரம் சொல்லச் சொன்ன தோழனின் வார்த்தை
காது மடலின் வாசலிலேயே இறந்து போனது.
பகத்சிங்கின் கரங்களில் லெனின் தவழ்ந்தார்.
வாசிப்பைத் தொடர்ந்தார்.
பைத்தியக்காரன் அவன்,
புத்தகம் வாசித்துவிட்டு பரிபூரண மகிழ்ச்சியில்
தூக்கில் தொங்கினான்.
இளமையை இலக்கு இன்றி
பறக்கும் பட்டாம்பூச்சியாய் அல்ல
கல்வி கற்று கலங்கரை விளக்காய்
இருப்பதிலும் பெருமைதான்.
கல்வியே உலகைப் புரட்டிய நெம்புகோல்
என்று ஆழந்து நம்புகிறேன்.
உலகைச் சீரமைத்த செர்மானிய தாடிக்காரனும்
இந்தியாவைக் கட்டமைத்த கருப்புக் கோட்டுக்காரரும்
கல்வியின் இன்றியமையாமை உணர்ந்தவர்கள்.
படிப்பு எதற்கு, அதுதான் செல்போன் இருக்கே
என்பது அறிவிலிகளின் அருள்வாக்கு.
அறிவை விரிவுசெய், அகண்டமாக்கு
விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை.
ஏழை இளையோர் வாழ்வின் அறியாமை அகற்றி
எங்கும் வெளிச்சம் பாய்ச்ச கல்வி என்னும் திரி ஏற்று
குன்றின்மேல் இட்ட தீபமாய் உன் வாழ்க்கை
சுடர்விட்டெரியும் உலகின் இருள் மெல்லக் குறையும்.
.jpg)
No comments:
Post a Comment