Thursday, 29 March 2018

வேதாந்தா….வேணான்டா…

நித்தம் கடலோடி பத்துக்காசு சேர்க்கும் 
முத்துக்குளித்துறையில் செத்துவிழும் மனிதன்
புற்றுநோயிலும் சுவாச நோயிலும் சூம்பியதைக்
கற்றறிந்த நல்லோர் காண்பீர் இக்காட்சி.
கமிசனுக்காக அலையும் கருப்பு சிவப்பு நாய்கள்
கண்ட இடத்தில் ஒப்பமிட்டு காவு வாங்கியதைப் பாரும்.
நூற்றாண்டு விழா முடித்துவிட்டு, ஓராண்டு விழா மூடில்
டீக்கடைக்காரருக்கு  ஈயாற்றும் இலைகளுக்கு
ஸ்டெர்லைட் ஆலையோரம் ஆளுக்கொரு வீடுகட்டி
குடி புகுந்தால் தெரியும், நரக வேதனை புரியும்.
காரில் விழுந்து கும்பிட்டவனின் காலடியில்
காத்துக்கிடக்குது ஓட்டுபோட்ட கூட்டம்.
சாலையோர டீக்கடையில் ஓசி டீ குடித்தது போதும்
பாலைவனமாகும் தமிழகத்தில் நீர் ஓடும் காலம் வேண்டும்.
தாமிரபரணி பெயர்க்காரணம் -தனியாருக்கும் தாமிரத்துக்கும்.

Friday, 16 March 2018

மானமாவது …மண்ணாங்கட்டியாவது…

பத்திரிகையாளர் படுகொலை
அரசுக்கு எதிராக எழுதிவிட்டாராம்.
இந்தியாவில் இது சாதாரனம்.
ஸ்லோவோகியாவில் அப்படியல்ல.
மக்கள் போராட்டத்திற்கு மதிப்பளித்து
பதவி துறந்தார் பிரதமர் ராபர்ட் ஃபிகோ.
காவிரி, மீத்தேன், நியூட்ரினோ, சாகர்மாலா
மீனவன், கெயில் குழாய், தலித்துகள்மீது வன்முறை
கருணை இல்லங்கள், விலைவாசி, டாஸ்மாக்…
விவசாயிகள் இரத்தக்கறையோடு நடக்க
விமானத்தில் பறக்கிறார் நம் டீக்கடைக்காரர்.
போராளிகள் இங்கே தேசத்துரோகிகளானதால்
போராட்டங்கள் லத்தியால் முடித்துவைக்கப்படுகின்றன.
போக்கத்துப்போய் போராடும் ஏழைகளுக்கு
இரக்கம் காட்டத் தெரிந்திருந்தால்
விவசாயி ஏன் தற்கொலை செய்யவேண்டும்?
அது சரி…
மனிதருக்குத்தானே மானமெல்லாம்.

Saturday, 10 March 2018

இந்தா வந்துருச்சுல்ல…

சிந்து சமவெளியின் மொழியே இதுவென
கீழடியில் கிடைத்த புதையலை ருசித்தபின்
அடுத்த செய்தி தந்தது அதிர்ச்சி.
காலடி மண்ணுக்கும் தனியார் தயாராகிறது.
மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை
ஹைட்ரோகார்பன் அனுமதித்து அவமதித்தது
மத்திய அரசும் மக்கள் அரசும்.
காவிரி, காவியால் கைவிரிக்கப்பட்டதால்
தண்ணீரின்றி தலைவிரி கோலத்தில்
பாலைநிலம் படர்வதைப் பார்க்கிறேன்.
அறுவடைக்கு தயாராகிவிட்டது நிலம்.
‘சமூக நீதியே நம் குறிக்கோள்’ என
வாயில் வடை சுடுகிறார் டீக்கடைக்காரர்.
கருணைக்கொலையை ஆரம்பித்திருக்கிறது
வளர்ச்சி பேசும் வாக்கு ‘வங்கி’ அரசு.

Thursday, 8 March 2018

ஆண்பால் பெண்பால் அன்பால்

வருடம் முழுதும் அடிமைப்பட்டவளை
வாழ்த்து சொல்லி விடுவித்தேன்
மீண்டும் விலங்கிடப்படுவது தெரிந்தும்
விடுதலையைக் கொண்டாடுகிறாள்.
பரோலில் இருந்தவளைப் பார்த்து சிரித்தேன்
குண்டு துளைக்காத கூண்டுக்குள்
நம்மாளின் சுதந்திர உரை ஞாபகம்.
சமம் என்ற சொல் சட்டத்தில் மட்டுமே இருக்க
முத்தலாக்கிற்கு காட்டிய வேகம்
சபரிமலைக்கு போகும் வழியில் 
நத்தையாகிவிட்டது.
உலகிலேயே இந்தியனுக்கு மட்டும்
சாதி போல பால் தருகிற 
கேவலமான கௌரவத்தை
இழக்கவிரும்புவேனா?
இளமை முதலே பழக்கப்படாததால்

நெடிலே தொடர்ந்து ஆளும்.

Monday, 5 March 2018

BJP - பாரதிய ஜீசஸ் பார்ட்டி

குல்லா போட்டவனெல்லாம் தீவிரவாதி 
பாகிஸ்தான் போக வேண்டும் என்பார் - ஆனாலும் 
தொழுகை நேரத்தில் பேச்சை நிறுத்துவார்.
கிறித்தவன் எல்லோரும் வெளிநாட்டவன் என்பார்
வெளிநாட்டுப் பயணத்திலேயே இருப்பார்.
இந்தியா இந்துக்களுடையது என்பார்
இன்றும் தலித்துகள் கோயில் வெளியே நிற்பர்.
அடங்க மறுத்தால் கோரேகான்போல் கொலை செய்வார்.
ஒருமைப்பாடு என்பார், பிரிவினைவாதிகளோடு ஆட்சி அமைப்பார்.
கிறித்தவர்களின் ஓட்டு கிடைக்க
பாரதிய ஜீசஸ் பார்ட்டி என பெயரிட்டவர்கள் இவர்கள்.
கொள்கையோடு இருப்பவரைக்கூட நம்பலாம்
தேவைக்கேற்ப வளைந்து கொடுப்பவன் ஆபத்தானவன்.
முதலாமவர் ஹிட்லர், ஜெர்மனி வல்லரசானது.
இரண்டாமவர் நம்மாளு.
வளரும் நாடு பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்.

Saturday, 3 March 2018

நல்லவராய் இருப்பதால் பொறாமையா?

பிரிவினைவாதிகளோடு கைகோர்த்து
வடகிழக்கில் கால் பதித்துள்ளது காவி.
மூன்று ஆண்டளவாய் பணத்தை
பா.ஜ.க அள்ளித் தெளித்திருக்கிறது.
20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும்
சொந்த வீடு, கார், நிலமில்லாது
10,000 சம்பளத்தையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு
கட்சி தந்த ஐயாயிரத்தை வைத்துக்கொண்டு 
அலுவலகத்துக்கு மனைவியை ரிக்சாவில் அனுப்பிய
மாணிக் சர்க்காரையே அனுப்பிய பாவம் செய்தனர்.
எளிமையானவராம், நேர்மையானவராம்- பாவம்
இந்திய அரசியலில் இருக்க தகுதியில்லாதவர்.
கட்சி பேனரில்கூட படம் போடாத பைத்தியக்காரர்.
இடமிருந்து வலம் சென்ற ஆட்சியால்
இயற்கையை இழக்க தயாரா திரிபுரா?

Friday, 2 March 2018

தோண்டத் தோண்ட பிணங்களாம்…

எங்கிருந்தோ பறந்து வந்த பிளாஸ்டிக் பைக்கு
கம்பிவேலி அடைக்கலம் கொடுப்பதுபோல
வீட்டைவிட்டு துரத்தப்பட்ட பலருக்கும்
பிளாட்பாரங்களே தங்க இடம் தருகின்றன.
புழுக்களுக்கு உணவாகிப்போன இவர்களின்
நாற்றம் காட்டிக்கொடுத்துவிடும்
இவர்கள் பராமரிப்பற்றவர்கள் என்று.
பாதசாரிகளின் பார்வை பட்டாலே பெரிது.
இவர்களை பராமரிப்பவர்கள் தெய்வங்கள்தான்.
வயதான பெற்றோரையே குளிக்க வைக்க முடியாத
தரங்கெட்ட சமுதாயத்தின் சாட்டையடிகள்
நிகழ்காலத்தில் நிறைய.
தெருவில் கிடக்கும் குப்பையை எடுக்காத அரசா
மனிதனை எடுக்கப்போகிறது?
எடுப்பவர்கள் கிறித்தவர்கள் என்பதுதான் பிரச்சனை.