எப்படித்தான் மோப்பம் பிடித்தார்களோ! கள்வர்களின் கைகளில் சிக்கிவிட்டான். நினைத்தது கிடைத்ததால் நினைவற்ற நிலையிலே குற்றுயிராய் விட்டுச் சென்றனர். இறைவனைச் சொந்தம் கொண்டாடி- மற்றவன் ஈனப்பிறவி என குறைவிலா செருக்கோடு குரு ஒருவன் அவ்வழி வந்தான். மதச்சடங்குகளுக்கு முன்னுரிமை தந்து மனிதர்களிடமிருந்து தள்ளி நின்றான். 'வெள்ளாடை கறை பட்டுவிடுமோ'– அவன் உள்ளமே கறை பட்டிருந்தது. அடுத்து வந்தவனும் அதேபோல்தான். கௌரவம் பார்த்ததால் காயப்பட்டவனைத் தொட யோசித்தான். அடிபட்டுக் கிடந்தவன் அவனுக்கு யாரோதானே. இப்போது வந்தவன் ஒடுக்கப்பட்டவன். ஒதுங்கிப்போகத்தான் பார்த்தான். ஆனாலும் அருகில் சென்றான் அவசரம் உணர்ந்தான். பையில் பணம் இல்லை பரிவு நிறைந்த மனம் மட்டுமே. பைத்தியம்தான் பிடித்தவன்போல் வைத்தியனிடம் வந்து சேர்த்துவிட்டான். இருந்ததை முழுதும் வழங்கினான் எப்படியும் காப்பாற்றிட இறைஞ்சினான். அதிகம் செலவாயின் அடுத்தநாள் தருவதாய் அழுத்திச் சொன்னான். பலரும் போதகர்களாகவே இருக்க விரும்புகிறார்கள். உலகிற்குத் தேவை போதிப்பவனல்ல.
கொலை செய்வது தவறு நான் யாரைக் கொலை செய்தேன்? ஆனால் அடுத்தவனை முட்டாளே என்றாலே அதிக தண்டனையா? நான் யாரைக் கற்பழித்தேன்? விபச்சாரம் - ஐயோ அபச்சாரம். ஒரு பெண்ணை தீய எண்ணத்தோடு பார்த்தாலே பாவமா? என்னடா இது? படைத்தவன் நம் செயல்களை அல்ல மனநிலையையே நோக்குகிறான். மனநிலைகள் எண்ணங்களாகின்றன எண்ணங்களே செயல்களில் முடிகின்றன. மனித உறவுகள் அனிச்சம் பூவினும் மென்மையானவை. ஒரு சொல், ஒரு பார்வை போதும் உறவுகள் உதறிவிட. உறவுகளை கவனமாய்க் கையாளக் கற்றுக்கொள். கோபமும் மோகமும் பாவமல்ல. ஆனால் பழக்கமாகிவிடக்கூடாது. பழக்கங்களே பாவமாகின்றன.
எத்தனையோமுறை முயன்றும் பயனில்லை என்னைப் போலவே மேசையும் கிடந்தது. அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் அதில் இடைசொருகல்களாய் சில குறிப்புகள் எப்பவோ வாங்கிய சாக்லேட்கள் அது இதுவென ஏதேதோ கிடந்தன.
ஓரத்தில் நீர் நிறைந்த பீர் பாட்டில் ஒன்று சூரிய ஒளியில் மினுமினுத்தது. குறுகிய வாயிலை அடைத்து வளர்ந்து அன்றாடம் உணர்வுகளைப் பிரதிபலித்தது மனநல மருத்துவம் தெரிந்த மணி பிளாண்ட். அதன் ஆக்டோபஸ் வேர்கள் அடிப்பகுதியையும் கைப்பற்றியிருந்தன. விரைத்துப்போன மண்புழுவாய் சில வெளியே நீண்டு கிடந்தன. சமீபத்திய பிரசவத்தில் உயிரின் வாசனையை உலகிற்கு உதிர்த்துக்கொண்டிருந்தன இரு இளந்தளிர்கள். இதழோடு இணைத்து முத்தமிட்டேன். உன்னோடு வாழ்ந்திருந்தும் எவ்வளவு விலகி இருந்துவிட்டேன் மன்னித்துக்கொள்.
குலுங்காமல் விரைந்த இரயில் வண்டியில் சேலை நுணிகளுக்கிடையே பள்ளத்தாக்கில் படுத்துறங்கிப்போனது பச்சிளங்குழந்தை ஒன்று. அந்த இளந்தாய் மட்டுமே விழித்திருந்தாள். என்ன ஆயிற்றோ தெரியவில்லை சரியான தாள கதியில் அழகான சுதியில் இனிமையாக இருந்தது குழந்தையின் அழுகை எனக்கு மட்டும். தொட்டியிலிருந்து தூக்கி தாலாட்டுப் பாடினாள் மார்பகச் சீலை விலக்கி அமுதம் தந்திட்டாள் மடியில் படுக்க வைத்து கொஞ்சினாள், கெஞ்சினாள். நின்ற பாடில்லை. முழுத்தூக்கம் பலருக்கும் அரைதூக்கமாகிப் போனது. மீதியை எரிச்சல் நிரப்பியது. எறும்பு ஏதாவது இருக்கா பாருப்பா தள்ளி வா...வெயில் அடிக்குது பாரு குளிர்காத்து அடிக்குதும்மா... சன்னலை மூடினாள். தூக்கிக் கொண்டாடினர் இளந்தாயின் உணர்வோடு ஒன்றிப்போன அங்கிருந்த வேறு இரு தாய்க்குலங்கள். இதுதான் தாயன்பா? நானும் அப்படித்தானே அழுதிருப்பேன். என்ன பாடுபட்டாளோ என் தாய்?