பசுமையான பாக்கு மரத்தின்
பட்டுப்போனகிளையொன்று
பார்க்கப் பாவமாய்
பரிதவித்துக்கொண்டிருந்தது.
இதமான தென்றல் மெதுவாக அணைக்கும்போது
அழகான இணக்கம்
உயிரான கிளையில் மட்டுமே.
ஒரு மரத்தில் இருப்பினும்
உயிரிழந்து ஒட்டியிருக்கும் மரக்கிளைபோல்
வாழ்பவர் பலர்.
நடப்பதை நன்மைக்காய் எடுத்து
நல்லுறவோடு வாழும்
மகிழ்வான மனிதர்கள் மத்தியில்தான்
உயிரற்ற வாழ்க்கை வாழ்பவரும் உளர்.
பட்ட கிளை பசுமை பெறாது,
மனிதர்கள் மாற முடியும்.
பழுப்பு நிறம் பசுமையாகட்டும்
வறண்ட வாழ்வு வசந்தமாகட்டும்.