Tuesday, 21 October 2025

அடையாளம் முக்கியம் பாஸ்



குத்துச்சண்டைப் போட்டிக்கு முன்னதாகவே எர்னி டெரல் என்ற வீரர் முகமது அலியை முறுக்கேற்றி விட்டிருந்தார். அலியின் இயற்பெயரான ‘கேசியுஸ் க்ளே’ என்று பலமுறை  அறிமுக நேர்காணலில் குத்திக்காட்டிக் கொண்டிருந்தார். அலிக்கு அது பிடிக்கவில்லை. ஏனெனில் அது அவரின் ஆரம்ப காலத்தை, அடிமைத்தனத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது. இப்போது அவர் மிகப்பெரிய குத்துச்சண்டை வீரர். அவரின் ஒவ்வொரு வாக்கியமும், செயல்பாடும் அரசியலிலும், விளையாட்டுத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த நேரம். 1967ஆம் ஆண்டு முகமது அலிக்கும் எர்னி டெரல் என்பவருக்கும் பிப்ரவரி 6ஆம் தேதி குத்துச்சண்டை போட்டி நடந்தது. முகமது அலிதான் வெற்றி பெறுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் முகமது அலிக்கு அந்த போட்டி தனது சுயமரியாதையை, சமய நம்பிக்கையை, அடையாளத்தை வலிமையாக நிறுவுவதற்கான யுத்தமாகத் தெரிந்தது. அந்தப் போட்டியின் பெயரே “பேட்ல் ஆப் சாம்பியன்ஸ்” என்பதுதான். 15 சுற்று விளையாட வேண்டும் என்று இல்லை. அவர் நினைத்திருந்தால் முதல் சுற்றிலேயே எர்னியை காலி பண்ணியிருக்க முடியும். ஆனால் முகமது அலி பொறுமையாக, அதே நேரத்தில் மிகவும் நேர்த்தியான தாக்குதலால் 15 சுற்றுகளிலும் எர்னியை உண்டு இல்லை என்று ஆக்கினார். ஒவ்வொரு குத்தும் இடி மாதிரி விழுந்தவுடன் “எனது பெயர் என்ன?” என்று அவர் எர்னியைத் தெறிக்க விட்டார்.  அரங்கம் அமைதியில் அரண்டுபோய்க் கிடந்தது. எர்னிக்கு மட்டுமல்ல, உலகத்திற்கு அவர் அப்போது தனது குத்துகளால் தெளிவுபடுத்திய விடயம் மிக முக்கியமானது: “எனது அடையாளத்தை நீங்கள் தீர்மானிக்கக்கூடாது, அதை நான்தான் தீர்மானிப்பேன்” என்பதுதான். 

அரசியல் நமது வாழ்வின் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி. சாதியும் மதமும் இங்கே உயிர்ப்போடு இருக்க கட்சிகளே காரணம். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, அரசியலிலும் அடையாளம் மிக முக்கியம் பாஸ். சின்னம் என்பது ஒரு அடையாளம். கொடி ஒரு அடையாளம். ஒரு கட்சியின் தத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றன. அதே வேளையில் வேட்பாளர் திறமையானவரா என்று பார்ப்பதைக் காட்டிலும் சூரியனா இல்ல ரெட்டலையா என பார்த்து மட்டும் பல தசாப்தங்களாக வாக்களிக்கும் அடிமைகள் இங்கு நிறைய பேர். ஏதோ ஒரு ஆதாயத்திற்காக சமூக நலனை, இயற்கையை விற்றுவிட துணைபோகிறவர்கள் இவர்களே. இவர்கள் ஆபத்தானவர்கள். தேர்தல் திருவிழாவாகக் கொண்டாடப்படக் காரணமே அது கொடுக்கும் மாய உலகம்தான். இலவசங்கள், ஒப்பேராத வாக்குறுதிகள், பணம், சாராயம், பிரியாணி, போதை, சத்தியம் இவைகளால் மத்தியிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. இங்கே ஆண்ட கட்சி அடிமை கட்சி. அவர்களுக்கு ஏதாவது ஒரு கால் வேண்டும். இப்போது அது குஜராத்திகளின் கால்கள். ஆள்கிற கட்சி ஆந்திரா கட்சி. திராவிடம் என்கிற போர்வையில் தெலுங்கர்கள், மலையாளி, கன்னடர்தாம் பெரும்பாலும் ஆண்டு வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைத் தமிழர் ஆட்சி செய்ய வேண்டும் என்றால் அது வித்தியாசமாகத் தெரிகிறது. ஏனெனில் தமிழர் அடையாளத்தை திராவிடத்தால் தொலைத்துவிட்டோம். திராவிடம் என்பதே வடமொழி வார்த்தை. அவன் நம்மை அடையாளப்படுத்தும் அளவுக்கு நாமும் இளிச்சவாயர்களாகிக்கொண்டோம்.

மாரி செல்வராஜின் மற்ற படங்களும் சரி தீபாவளிக்கு வெளிவந்த பைசன் -காளமாடன் படமும் சரி அதிர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கக் காரணம் நமது சமூகத்தின் கறையைச் சமரசமில்லாமல், வெளிப்படைத்தன்மையோடு சுட்டிகாட்டுகிறது. உண்மை எப்போது நமக்கு கலக்கத்தையும் பின்பு கலகத்தையும் ஏற்படுத்தும். புக்கர் பரிசு பெற்ற மாபெரும் போராளி அருந்ததிராய் சொல்வார், கலை என்பது சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்த வேண்டும். மாறாக மயிலிறகால் வருடிக்கொண்டிருப்பதல்ல. 

ட்யுட், டீசல் போன்ற படங்களும்தான் வந்தன. ஆனால் அவற்றைப் பற்றி நாம் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவை உண்மையை உரக்கப் பேசவில்லை, அல்லது உண்மையை உண்மையாகச் சொல்லவில்லை என்பதுதான். பல நாடுகளில் புரட்சி இளையோரால் முன்னெடுக்கப்படுகிறது. கலகங்கள் இளையோரால் மட்டுமே சாத்தியம். இங்கே சாராயமும் சாதியமும் ஆள்பவர்களாலே வலிந்து திணிக்கப்படுவதால் கழகங்கள் கலகம் இல்லாமல் தெளிவாக இருக்கின்றன.

இன்னும் தமிழருக்கென்று அரசியல் இருக்கிறதா என்று விவாதத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட யாருக்குப் போட்டால் வெற்றி பெறுவார்கள் என்று வியாக்கியானம் பேசிக்கொண்டிருக்கிறோம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தேர்தலுக்கு முந்திய நாள் 2000 ரூபாய் கொடுத்தால் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையை ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கிறோம். கொள்கை இல்லாத நடிகருக்காக நடுரோட்டில் ஏங்கிக் காத்துக்கொண்டு ஏக்கப்பெருமூச்சு விடுகிறோம். ஏழைகளின் நிலையை அறியாத கூத்தாடிகளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஏனெனில் தமிழர்கள் என்ற இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு என்று கவிஞர்கள் பாடியதை எங்கோ யாருக்கோ பாடியிருக்கிறார் என்று சுகமாக மறந்துவிட்டோம். ஆனாலும் பல இளையோர் தீவிர நம்பிக்கையோடு பயணிக்கிறார்கள். பல்லுயிர்க்குமான அரசியலை, சமத்துவ அரசியலை மாற்றத்தை முன்னெடுக்கிறார்கள். நாய்கள் குரைத்தாலும் ஒட்டகவரிசைகள் தங்களின் நிறைபொதிகளுடன் பயணத்தைத் தொடரும். மூளையற்ற வீணர்களின் தலையற்ற தற்குறிகளின் வாய்ச்சொல்லில் விழுந்துவிடாது  தொடர்ந்து கலகம் நடக்க வேண்டும், நாம் நடத்த வேண்டும்.


Drifting to Indifferented Earth

 



It was a day before my death

Robot doctor checked the slowing breath

Radiation was everywhere in the body

Gadgets engaged my life like toddy

 

Why is this world so dirty and dry?

“You should go to Mars, give it a try”

This will be the call of next century

‘cause we’ve flawed the poor and hungry

 

Have we ever realized, we are blest

Our earth is different from the rest

God’s greatest concern for man’s aid

With love inch by inch he made

 

Think of His goodness and cry

Keep your praises always on high

Humans, his expression of love

More than others Created us above

 

But human is not the master of all Known

S/he doesn’t even make out his Own

Only servants are we, to care and till

Seeds and birds wait for us still

Let’s not look for heaven on top

Soil is not just to piss and poop

Earth too is filled with His Spirit

Indifference will cause its drift

 

Jeyan Joseph

Wednesday, 10 May 2023

என்ன மார்க்?


ஊரெங்கும் நந்தினி பற்றி பேச்சு.

அவருடைய பேச்சு பற்றியும் பேச்சு.

பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்கள்.

வரலாற்றுச் சாதனையா? 

எங்கோ தவறு நடந்திருக்கிறது.

பாடத்தைத் தாண்டிய அறிவு

பள்ளியில்தான் கொடுக்கப்பட வேண்டும்.

மனனம் செய்து மந்திரம் ஓதுவோருக்கு வேண்டுமானால்

வாந்தி எடுக்கப் பிடித்திருக்கலாம்.

இப்பொழுதும் நமக்கெல்லாம் அது 

மணமாகவேத் தெரிவதுதான் வேதனை.

மொழிப்பாடத்தில்கூட முழுமதிப்பெண் 

யாரால் சாத்தியப்படக்கூடும்?

எங்கோ தவறு நடந்திருக்கிறது.

தவறாகவே அரசு நடத்துகிறது.


'நல்ல போதகரே..." வெண்ணெய் தடவிய

இளைஞரை செவிட்டில் அறைந்தார் இயேசு

'என்னை ஏன் நல்லவன் என்கிறாய்?

கடவுளைத் தவிர எவருமில்லை."


முழுமை மனிதருக்கு சாத்தியப்படாதது.

ஆண்டவனுக்குத் தெரியும்

அரைகுறைக்கே ஆணவம் இங்கே தலைக்கேறும் என்று.

Thursday, 6 January 2022

பொங்கட்டும் புதுவாழ்வு



ச்சே…இதெல்லாம் ஒரு பொழப்பா சார்…இந்த வாழ்க்கைய வாழுறதுக்கு பேசாம எங்காவது போயிடலாம்.. நாய் பட்ட பாடாயிருக்கு…இந்த வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்பதுண்டு. நாம்கூட சொல்லியிருப்போம். 

அதிசயமான மனிதவாழ்வு

சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். உலகில் 5 வினாடிகள் பிரானவாயு (ஆக்சிஜன்) இல்லை என்றால் என்ன ஆகும் என்பதுபற்றியதுதான் அந்த காணொளி. காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் மற்றும் 78 சதவீதம் நைட்ரஜன் இருக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்று. 5  வினாடிகள்தானே…மூச்சை அடக்கிக்கொண்டால் போச்சு என்று நினைத்தால்…அதுதான் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். 5 வினாடிகள் ஆக்சிஜன் இல்லை என்றால், உயிரினங்கள் அனைத்தும் சுவாசிக்க சிரமப்படும். அதையும் தாண்டி அனைத்து கான்கிரிட் கட்டடங்களும் நொறுங்கி விழுந்து விடுமாம். அணைகள், வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் ஆக்சிஜனால்தான் இறுகி கட்டடங்கள் நிலையாக நிற்கின்றனவாம். ஆக்சிஜன் இல்லையென்றால் கான்கிரிட் என்பது வெறும் தூசுதானாம். மேலும் கதிரவனில் இருந்து வரும் கதிர்கள் நம்மை சுட்டெரித்து உலகத்துக்கே ஆபத்தைத் தரும் என்கிறார்கள். ஓசோன் படலம் என்பது ஆக்சிஜன்தான். அதுதான் நம்மைப் புறஊதாக்கதிர்களிடமிருந்து நம்மைக் காக்கின்றது. ஆக்சிஜன் இல்லை என்றால் நமது உடலில் 21 சதவீதம் காற்றழுத்தம் இல்லாமல் நம் காதுகள் வெடித்துவிடுமாம். திடீரென்று கடலுக்கடியில் 2 கிலோமீட்டர் சென்றால் வரும் பாதிப்பு போன்றதாம் அது. ஆக்சிஜன் இல்லாம் நெருப்பு இல்லை. எதுவும் சூடாகாது. வாகனங்கள் இயங்க முடியாது. விமானங்கள் கீழே விழுந்துவிடும். ஆக்சிஜன் இல்லாமல எதுவும் எரியாததால்; உலகம் இருண்டு விடுமாம். பூமிக்கடியில் உள்ள மையப்பகுதி 45 சதவீதம் ஆக்சிஜனால் நிரம்பியுள்ளதால் அது இல்லாமல் போகும்போது பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்தும் உள்ளிழுக்கப்பட்டு நொறுங்கி நாம் வாழும் இவ்வுலகம் வெறுமையானதாகி விடும். அடேங்கப்பா….5 வினாடி ஆக்சிஜனால் இப்படி ஆகுமா என்று வியக்கத் தோன்றுகிறதல்லவா…அப்படியானால் இந்த உலகம் எந்த அளவுக்கு அதிசயங்கள் நிறைந்ததாக உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். இந்த உலகம் மட்டுமல்ல, நமது வாழ்வும்தான். மிகவும் அதிசயமானது, தினசரி புதுமைகள் நிறைந்தது.

வாழ்க்கையை எந்தவித குறிக்கோளும் இல்லாமல் அலுவலகத்திற்கும், வீட்டுக்குமாக நகர்த்திக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த வாழ்க்கை ரொம்ப போரடிக்கின்ற ஒன்றாக இருக்கும். வாழ்க்கை வாழப்பட வேண்டும் என்றால் நாம் ஏன் இங்கு இருக்கிறேன் என்ற கேள்வி நம்மில் அடிக்கடி எழ வேண்டும். அந்த கேள்வி நம்மை வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில் நிறைவாக, பயனள்ள வகையில் நம்மை வாழ வைக்க வேண்டும்.  இல்லையென்றால் மன அழுத்தமும், சோகமும் நிறைந்த வாழ்க்கையாகத்தான் இருக்கும்.

இலக்கற்ற வாழ்வு ஆபத்தானது

வாழ்வில் நோக்கம் இல்லாதவர்கள் வளர்ச்சியடைகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. ஒரு விவசாயி சில நாட்கள் நெல்லையும், அடுத்த சில நாட்களில் அதைப் பிடுங்கிவிட்டு கோதுமை பயிரையும், அடுத்த சில நாட்களில் அது பலன் தரவில்லை என்று சோளம், கம்பு விதைத்தாரென்றால், இறுதியில் அவருக்கு எதுவும் மிஞ்சப் போவதில்லை என்று குறிக்கோளற்றவர்களைப் பற்றி பேராயர் புல்டன் ~Pன் சொல்லுவார்.

குறிக்கோளற்றவர்கள், கை நிறைய அம்புகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியால் இருப்பவர்கள். அவர்கள் ஆபத்தானவர்கள். ஆம் ஆபத்தானவர்கள். அவர்கள் யாரை வேண்டுமானாலும் காயப்படுத்தலாம். பணமே குறிக்கோளாக வாழ்ந்தவர்களும் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை. முதுமலைக் காட்டுக்குள்ளே ஒரு கோடி ரூபாய் பணத்தோடு ஒரு புலியிடம் மாட்டிக்கொண்டால் பணமா நம்மைக் காப்பாற்றும்? என்னை என்ன தாசில்தார்னு நினைச்சியாடா என்று ஒரு கேள்விகேட்டு ஒரு அடியில் கொன்றுவிடும் என்று நெல்லை கண்ணன் நகைச்சுவையாகக் கூறுவார். குடும்ப வாழ்க்கையில் குறிக்கோளோடு வாழ்வது மிகவும் அவசியம். இலக்கு தெளிவு இல்லாதவனின் பயணம் பேருந்தில் எங்கு போகிறோம் என்று தெரியாமல் ஏறி உட்கார்ந்திருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல்தான் இருக்கும்.

இயேசுவின் குறிக்கோள்

இயேசுவின் வாழ்வில் குறிக்கோள் இருந்தது. சிறுவயதிலேயே அதனை அவர் அவருடைய பெற்றோருக்கு வெளிப்படுத்தியிருந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவரை எருசலேம் ஆலயத்தில் கண்டுபிடித்தபோது அவர் “என்னை ஏன் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று தம் பெற்றோரிடம் தமது வாழ்க்கை எப்படிப்பட்டது என்று விவரித்தார். தமது இளமைப் பருவத்தில் பொது வாழ்க்கையில் போதிக்க ஆரம்பித்தபோது சொந்த ஊரிலேயே அதனை வெளிப்படுத்தினார். தொழுகைக்கூடத்தில் அவர் வாசித்தபோது..

ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது: ஏனெனில்

அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்

சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்

பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும்

ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்

ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும்

அவர் என்னை அனுப்பியுள்ளார். லூக் 4:18-19


 என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளைத் தமதாக்கியிருந்தார்.

அன்பு, நீதி, உண்மை கொண்டு சுதந்திரத்துடன் இயங்கும் மனிதகுலமே இறையரசின் சாட்சிகள் என்று பரப்புரை செய்தார். இறையரசை நிறுவ சீடர்களைத் தேர்ந்தெடுத்தாh. ஒரு போராளியாக தம்மை தயாரித்துக்கொண்டார். பல ஊர்களுக்கும் பயணமானார். தாம் சந்தித்த ஒவ்வொருவரிடமும் இறையரசின் விழுமியங்களை எடுத்துக் காட்டினார். நோயற்றோருக்கல்ல, நோயுற்றோருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன் என்று அவர் சொன்ன போது, சுற்றியிருந்த கூட்டம் இவரைக் கேலி செய்தது. 

யோவானின் சீடர்கள் மட்டும் நோன்பு இருக்க இவர் எந்நேரமும் உண்டு குடித்துத் திரிகிறாரே என்று பலரும் பலவாறு பேசியிருந்தார்கள்.

நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு…  எனது உடலையும் இரத்தத்தையும் உணவாகத் தருகிறேன் என்று முழங்கியபோது ஏதோ உளறுகிறார் என நினைத்து பலரும் அவரை விட்டுப் பிரிந்துபோயினர். ஆனாலும் இயேசு தமது குறிக்கோளை நன்கு அறிந்திருந்தார்.

யூத சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட சமாரியர், வரி தண்டுபவர், பாவிகள், ஏழைகள், பெண்கள், விபச்சாரிகள், நோயுற்றோர் மற்றும் சுமை சுமந்து நொந்தவர்களைத்தான் அவர் தேற்றிக் கொண்டிருந்தார். “உங்கள் போதகர் ஏன் பாவிகளோடு உணவு உண்கிறார்? என்ற கேள்வியே அவரின் குறிக்கோளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவர் தெளிவாக இருந்தார். சில நேரங்களில் அவர் யூதருக்கு மீட்பை அறிவிப்பதில் முன்னுரிமை தந்திருந்தாலும் (மத் 10:6, மத் 15:24) அவர் அனைவரும் மீட்பு பெற விரும்பினார். 

தமது குறிக்கோளை அடைய தடையாக இருந்த அத்துனை விடயங்களையும் அவர் அறிந்திருந்தார். யூதத்தலைவர்கள் அவரை எப்படி கொல்லலாம் என்று திட்டம் தீட்டியது அவருக்கு தெரியாமலில்லை. ஆனால் அவர் உயிரையே கொடுப்பதற்கு  தம்மையே தயாரித்துக்கொண்டிருந்தார். பல இடங்களில் தமது பாடுகளைப் பற்றியும், இறப்பைப் பற்றியும் உயிர்ப்பைப் பற்றியும் அவர் சமிக்ஞை கொடுத்திருந்தார் (மத் 16:21). எதிர்ப்புகளுக்கு அவர் அஞ்சியதில்லை. இறுதிவரை தமது குறிக்கோளை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருந்தார். இறுதியில் “எல்லாம் நிறைவேறிற்று, தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்” என்ற நிறைவோடு உயிர் துறந்தார். எப்படிப்பட்ட தெளிவான வாழ்வு இது…அவருடைய சீடர்கள் நாம். ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு தருவதும், இறையரசை நிறுவுவதும்தான் நமது பணியின் நோக்கம். என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

தொன்போஸ்கோவின் குறிக்கோள்

குருவான உடனேயே தொன்போஸ்கோவுக்கு பணம் தரும் சில வாய்ப்புகள் வந்தன. எத்தனையோ குருக்கள் அத்தகைய வாய்ப்புக்காகக் காத்துக்கிடந்தார்கள். ஆனால் எனது பணி கைவிடப்பட்ட இளையோருக்குத்தான் என்று உறுதியோடு இருந்து “ஆன்மாக்கள் போதும், வேறெதுவும் வேண்டாம்” என்ற குறிக்கோளோடு பணியாற்றினார். பல இடையூறுகள் வந்தபோதும் அவர் பின்வாங்கவில்லை. சாலையில் அவர் இளையோரோடு விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்து எத்தனையோ பேர் அவரை பழித்துரைத்தார்கள், பைத்தியக்காரன் என நினைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க குதிரைவண்டி ஏற்பாடு செய்தார்கள். இளையோர் பணி மிகவும் சவாலான பணி என்று தெரிந்ததால்தான் “உங்களுக்காகவே படிக்கிறேன், உங்களுக்காகவே உழைக்கிறேன், உங்களுக்காக வாழ்கிறேன்; உங்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்” என்று தெளிவாக இருந்தார். இறுதிவரை திக்கற்ற இளையோருக்கு கலங்கரைவிளக்கமாக ஒளிர்ந்தார்.

சவால்களை சமாளிப்போம்

தலைமைத் துறவி சாகும் நிலையில் இருந்தார். தமது முதல் சீடரைக் கூப்பிட்டு “இந்த மடாலயத்திற்கு அடுத்த தலைமைத்துறவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தூரத்தில் உள்ள மடாலயத்துக்குச் சென்று அங்கிருந்து நூறு சீடர்களை நான் கேட்டதாகப் பெற்று அழைத்து வா” என்று கட்டளையிட்டார். ஒரு தலைமைத் துறவிக்கு நூறு சீடர்கள் எதற்கு? என்று அவன் மண்டையை சொறிந்து கொண்டான். ஆனாலும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாதே… மடாலயத்துக்கு நடந்தான். கடுமையான பயணம்…மலைகள், பள்ளத்தாக்குகள், ஆபத்தான ஆறுகள், அடர்ந்த காடுகள் கடந்து பயணம் செய்யவேண்டியிருந்தது. கடுமையான விடாமுயற்சியோடு இலக்கை அடைந்தான். நூறு சீடர்களைப் பெற்றுக்கொண்டு வந்தான். வரும் வழியில் ஒரு நாட்டில் போட்டியொன்று நடத்தினார்கள். வெற்றி பெருபவர்க்கு தனது பெண்தான் பரிசு என்றதும் சீடர்களில் ஐம்பது பேர் காணாமல் போனார்கள். அடுத்த நாட்டில் மன்னர் தமது வாரிசுக்காக ஆள்தேடிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு இன்னும் 25பேர் காலியாயினர். எஞ்சியிருந்தவர்கள், தங்களின் ஊர் வந்தபோதும், அழகான பெண்களைக் கண்டபோதும் கழன்று கொண்டனர். கடைசியில் அழைக்கப்போயிருந்த அந்த சீடன் மட்டுமே மிஞ்சினான். மரணப் படுக்கையில் இருந்த தலைமைத் துறவி “நீ மட்டும்தான் திரும்பி வருவாய் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நீ மட்டுமே ஒரு குறிக்கோளோடு இருந்தாய்…நீயே எனக்குப்பின் வழிநடத்து” என்று சொல்லி உயிர் துறந்தாராம். 

எல்லோரும் உயர்ந்த குறிக்கோளுடன்தான் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அதில் விடாப்பிடியாக வைராக்கியமாக இருப்பவர்கள் ஒரு சிலர்தான்…அவர்கள்தான் மாமனிதர்கள். 

ஸ்டீபன் வின்சென் பெனட் என்ற எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

வாழ்வு இறப்பதானால் முடிந்து போவதில்லை

அது ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும்

பல்லாயிரக்கணக்கான வழிகளில் நாம் கவனமில்லாமல் செலவழிப்பதால்தான் அழிந்துபோகிறது.

வாழ்வில் உயர்ந்தவர் ஆக வேண்டும் என்று விரும்பிய மேக்ஸ்கந்தர் (ஆயஒ முயவெநச) சாதனையாளர்கள் மற்றும் வாழ்வில் முன்னேறிய நிலையில் இருந்த பலரையும் ஒர் ஆராய்ச்சி செய்தார். எந்த அடிப்படை குணம் பல உயர்ந்தவர்களை உருவாக்கியது என்று பார்த்தபோது அவர்கள் யாவருமே தங்களின் நண்பர்களைப் பெருக்குவதில் கவனம் செலுத்தியிருந்ததைக் கண்டார். தங்களின் முன்னேற்றத்தோடு தொடர்புடையவர்கள் அல்லது தொடர்பற்றவர்கள் என பலவகைப்பட்ட மனிதர்களிடமும் அறிமுகங்களை வளர்த்துக்கொண்டு தங்களின் குறிக்கோளை தெளிவாக அடைகிறார்கள். 

அன்றாடம் திட்டமிடுவோம்

காலை ஐந்து மணிக்கு எழுவது என்பது வெற்றியாளர்களின், மாமனிதர்களின் குணமாக இருக்கிறது. எந்தவித குறிக்கோளும் இல்லாதவர்களுக்கு ஏழு மணியும், ஒன்பது மணியும் ஒன்றே. சிறுசிறு சுயகட்டுப்பாடுகள்தான் நம்மைப் பற்றி நமக்கே உந்துசக்கியாக இருந்து வழிகாட்டும். தேடல் இருந்தால்தானே வாழ்வில் ருசி இருக்கும். அதற்கு நேர நிர்வாகம் அவசியம்.

நேரம் மிகவும் அரிதானது…ஆர்தர் பிராங்க் என்ற புகழ்பெற்ற திரைப்படைத் தயாரிப்பாளர் தனது பணிகளுக்காக அலுவலகம் செல்லும்போது அந்த பல மாடிக்கட்டிடத்தின் மின்தூக்கியைப் பயன்படுத்தாது படிக்கட்டிலேயே ஏறிச்செல்வாராம்.  காரணம் கேட்டதற்கு, “நான் தினமும் படிகளில் ஏறிச்செல்லும்போது எனது பணிகளுக்கும், பணியாளர்களுக்கும் தேவையான வலிமையைக் கடவுளிடம் கேட்பேன். பின்பு மாலை இறங்கும்போது, கிடைத்த நன்மைக்கு நன்றி சொல்லிக்கொண்டே திரும்புவேன். எனக்கு இந்த நேரம் செபிக்க உதவுகிறது” என்று கூறினாராம். வாழ்வின் குறிக்கோளைப் பற்றி தெளிவோடு இருப்பவர்கள் நேர்மறையாக தங்களின் செயல்பாடுகளைத் தொடங்குகிறார்கள். நிச்சயம் நடக்கும் என்ற ஆழமான நம்பிக்கையோடு பயணிக்கிறார்கள். பல இடர்வரினும் தொடர்ந்து பயணித்து இலக்கை அடைகிறார்கள். சுhதாரன மனிதர்கள் மாமனிதர்களாகின்றனர். குறிக்கோளை நோக்கி நடந்தால், நீயும் மாமனிதனே.


நான் ஏன் வாழவேண்டும் என்ற காரணம் அறிந்தவன் எப்படியும் வாழந்துவிடுவான். பிரடெரிக் நீட்சே


Tuesday, 29 September 2020

தீயில் கருகிய சீதை


இராமாயனம் எரிந்துகொண்டிருக்கிறது.

வானுயர சிலையில் அம்போடு நிற்கும் இராமன்

வால்மீகியைக் கொன்றவர்களைக் 

விசம்தடவிய அம்புகளால் வீழ்த்தியிருக்க வேண்டும்.

அம்போவென நிற்கிறான் ஆதித்யநாத் காலடியில்

அம்னெஸ்டியும் அகன்றுவிட்ட நிலையில்.


மாட்டுக்குப் புல்லறுத்த மனிசா வால்மீகி 

துப்பட்டாவால் இறுக்கப்பட்டபோது என்ன நினைத்தாளோ?

தரதரவென இழுத்துச்சென்றபோது என்ன செய்தாளோ?

ஆதிக்கசாதி ஆணவம் ஆண்குறியில் வழிந்தபோது

அண்ணே! வேணாம்னே என்று எப்படி அழுதாளோ?

நான்கு நாய்களின் வெறிபிடித்த பற்களில் சிக்கியவள் 

என்ன செய்திருக்க முடியும்?

எழுந்துவிடக்கூடாதென்று எலும்பை ஒடித்து

எதுவும் சொல்லக்கூடாதென நாக்கையும் அறுத்த

தேசபக்தர்களிடம் காவல்துறை வாலாட்டிக்கொண்டது.

தாரமாக்க தலைகவிழும் ‘தறு’தலைகள்

தலித் பெண்ணுடம்பில் வீரம் காட்ட மட்டும் 

தலை எழுதே எப்படி?

உலையில் தவழும் உன் தாயும் 

கல்லூரி பயிலும் தங்கையும் பத்திரம்தானே.

படிக்கத்தான் வழியில்லை

மாடு மேய்க்கவுமா?

ஏழைகளிடம் வீரம் காட்டும்

உன்னைப்போன்ற இழிபிறவி அவன் அல்லவே.

எதில் நீ உயர்ந்திருக்கிறாய் 

உச்சத்தில் உன்னை வைத்துக்கொள்ள?


கத்தி கொண்டு ‘ஜெய்ஸ்ரீராம்’ கத்திக்கொள்ளும்

ராமராஜ்யத்தில் சீதைகள் பாவம்.

இராவணபூமியில்தான் அவளுக்கு நிம்மதிபோலும்.


செய்தி: கடந்த வாரம் உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட19 வயது தலித் பெண்.


Tuesday, 21 July 2020

எல்லை தாண்டு

வேசியாகவோ தாசியாகவோ பார்ப்பது வேதனை
அது ஆண்டாளாகட்டும்
மகதலா மரியாவாகட்டும்.
கடவுளைக் காதலிப்பது எவ்வளவு அபத்தம்
திருஅவையும் பெரியாழ்வாரும் ஒன்றுதான்.
“என்னை அன்பு செய்கிறாயா?” 
என்று கேட்டபோது பேதுரு பதறினார்.
“என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே”
ஆண்டவரே பதறிப்போனார்.
எல்லை தாண்டிய தீவிரவாதம் அது.
சாதி தாண்டி காதலித்தாலே
சங்கருக்கும் சனியன்கள் நாம்.
சங்கர் ‘பாவம்’, பெரும்பாவம்.
வந்தேறி வைதீகத்தின் வரையறையில்
‘யாவரும் கேளிர்’ மரபு மறைந்து போனது
தமிழர் தன்மானம் தளர்ந்து போனது.

அதிகாலையில் அப்போஸ்தலர்களுக்கு முன்பே
ஆண்டவரைத் தேடியாதாலோ என்னவோ
விண்ணகப் பயணம் நாற்பது நாள் தள்ளிப்போனது.
திருப்பாவை, நாச்சியார் திருமொழி போன்ற
மரியாவின் காதல் கவிதைகள்
எப்படித் தொலைந்தனவோ தெரியவில்லை.
ஆண்டாள் அந்த வகையில் பேறுபெற்றவள்.
அரசு சின்னமாகிப்போனாள்.
மரியா சின்னாபின்னமாகிக் கிடக்கிறாள்.
கடவுளையே காதலித்தவளின் பேரன்பு
கற்றுக்கொள்ளப்பட வேண்டியது.
ஆண்டவருக்கான தாசியாக
இருப்பதன் கர்வம் அவளுக்கு இருக்கட்டுமே.

நல்ல பங்கைத் தேர்ந்துகொண்ட 
மகதலா மரயா 
அன்பினால் ஆண்டவரையே ஆண்டாள்.


Sunday, 28 June 2020

இப்படியும் இருக்கிறார்கள்

பாய்போ போரிசோவ் - பல்கேரிய பிரதமர்
சர்ச்சுக்கு போகும் அவசரகதியில் 
முகக்கவசம் போடவில்லை.
அதெப்படி பிரதமர் சட்டத்தை மீறலாம்?
அபராதம் 174 டாலர்.
சுகாதாரத்துறை அமைச்சர் சுளுக்கெடுத்திருக்கிறார்.

பென்னிக்ஸ்க்கு மூச்சுத்திணறல்
ஜெயராஜ்க்கு நெஞ்சுவலி
‘பழனி’ பஞ்சாமிர்தம்.
அப்புறம் ஏன்யா அரசு வேலையும் நிவாரணமும்?
செல்லாத்தா உன் புருசன் காய்ச்சல்லதானே செத்தாரு
சிபிஐ விசாரனை கேக்கலாமா?
‘இரட்டை’யர்களிடம் நாம் படும்பாடு இருக்குதே
முடியலடா ‘மொட்டை’ச்சாமி.