எளிமையில் பிறந்த இறைமகனார்
சிலுவையில் மரித்த நிலையினைப் பார்
அன்பு மரணம்போல் வலியதுவே – பிறர்
துன்பம் களையும் மொழியதுவே
சிலுவையே மாபரன் தத்துவம், அது மட்டுமே மானிட மகத்துவம்
விரிந்த கரங்களின் ஆணிகள் அன்று
கிழித்த சதையின் வலியினைக் கொண்டு
பேரன்பின் வழியே பெரும்புரட்சி செய்தவர்
கள்வனின் கனவையும் கனிவுடன் கேட்டார்.
போதித்த நற்செய்தி போதுமென்ற மனதோடு
காயங்கள் மறந்து கடவுளை வேண்டினார்.
மரங்கள் வளர்ப்பது அறமாகும் - சிலுவை
மரம்தானே நமக்கெல்லாம் வரமாகும்.
ஏழைக்கு நற்செய்தி சொல்லிடும் சிலுவை
சேவைக்குத் தேவையாய் வந்திடும் சிலுவை
பாவிக்குத் துணையாய் நின்றிடும் சிலுவை – விசாலப்
பார்வைக்கு இயேசுவைத் தந்திடும் சிலுவை
வேண்டும் பொருளாய் சிலுவை இருந்தால்
காணும் துன்பம் கண்ணீராய் மாறும்
தீமை கண்டு கிளர்ந்து எழுவோம்
தினமும் சிலுவை சுமந்து நடப்போம்.