குத்துச்சண்டைப் போட்டிக்கு முன்னதாகவே எர்னி டெரல் என்ற வீரர் முகமது அலியை முறுக்கேற்றி விட்டிருந்தார். அலியின் இயற்பெயரான ‘கேசியுஸ் க்ளே’ என்று பலமுறை அறிமுக நேர்காணலில் குத்திக்காட்டிக் கொண்டிருந்தார். அலிக்கு அது பிடிக்கவில்லை. ஏனெனில் அது அவரின் ஆரம்ப காலத்தை, அடிமைத்தனத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது. இப்போது அவர் மிகப்பெரிய குத்துச்சண்டை வீரர். அவரின் ஒவ்வொரு வாக்கியமும், செயல்பாடும் அரசியலிலும், விளையாட்டுத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த நேரம். 1967ஆம் ஆண்டு முகமது அலிக்கும் எர்னி டெரல் என்பவருக்கும் பிப்ரவரி 6ஆம் தேதி குத்துச்சண்டை போட்டி நடந்தது. முகமது அலிதான் வெற்றி பெறுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் முகமது அலிக்கு அந்த போட்டி தனது சுயமரியாதையை, சமய நம்பிக்கையை, அடையாளத்தை வலிமையாக நிறுவுவதற்கான யுத்தமாகத் தெரிந்தது. அந்தப் போட்டியின் பெயரே “பேட்ல் ஆப் சாம்பியன்ஸ்” என்பதுதான். 15 சுற்று விளையாட வேண்டும் என்று இல்லை. அவர் நினைத்திருந்தால் முதல் சுற்றிலேயே எர்னியை காலி பண்ணியிருக்க முடியும். ஆனால் முகமது அலி பொறுமையாக, அதே நேரத்தில் மிகவும் நேர்த்தியான தாக்குதலால் 15 சுற்றுகளிலும் எர்னியை உண்டு இல்லை என்று ஆக்கினார். ஒவ்வொரு குத்தும் இடி மாதிரி விழுந்தவுடன் “எனது பெயர் என்ன?” என்று அவர் எர்னியைத் தெறிக்க விட்டார். அரங்கம் அமைதியில் அரண்டுபோய்க் கிடந்தது. எர்னிக்கு மட்டுமல்ல, உலகத்திற்கு அவர் அப்போது தனது குத்துகளால் தெளிவுபடுத்திய விடயம் மிக முக்கியமானது: “எனது அடையாளத்தை நீங்கள் தீர்மானிக்கக்கூடாது, அதை நான்தான் தீர்மானிப்பேன்” என்பதுதான்.
அரசியல் நமது வாழ்வின் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி. சாதியும் மதமும் இங்கே உயிர்ப்போடு இருக்க கட்சிகளே காரணம். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, அரசியலிலும் அடையாளம் மிக முக்கியம் பாஸ். சின்னம் என்பது ஒரு அடையாளம். கொடி ஒரு அடையாளம். ஒரு கட்சியின் தத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றன. அதே வேளையில் வேட்பாளர் திறமையானவரா என்று பார்ப்பதைக் காட்டிலும் சூரியனா இல்ல ரெட்டலையா என பார்த்து மட்டும் பல தசாப்தங்களாக வாக்களிக்கும் அடிமைகள் இங்கு நிறைய பேர். ஏதோ ஒரு ஆதாயத்திற்காக சமூக நலனை, இயற்கையை விற்றுவிட துணைபோகிறவர்கள் இவர்களே. இவர்கள் ஆபத்தானவர்கள். தேர்தல் திருவிழாவாகக் கொண்டாடப்படக் காரணமே அது கொடுக்கும் மாய உலகம்தான். இலவசங்கள், ஒப்பேராத வாக்குறுதிகள், பணம், சாராயம், பிரியாணி, போதை, சத்தியம் இவைகளால் மத்தியிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. இங்கே ஆண்ட கட்சி அடிமை கட்சி. அவர்களுக்கு ஏதாவது ஒரு கால் வேண்டும். இப்போது அது குஜராத்திகளின் கால்கள். ஆள்கிற கட்சி ஆந்திரா கட்சி. திராவிடம் என்கிற போர்வையில் தெலுங்கர்கள், மலையாளி, கன்னடர்தாம் பெரும்பாலும் ஆண்டு வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைத் தமிழர் ஆட்சி செய்ய வேண்டும் என்றால் அது வித்தியாசமாகத் தெரிகிறது. ஏனெனில் தமிழர் அடையாளத்தை திராவிடத்தால் தொலைத்துவிட்டோம். திராவிடம் என்பதே வடமொழி வார்த்தை. அவன் நம்மை அடையாளப்படுத்தும் அளவுக்கு நாமும் இளிச்சவாயர்களாகிக்கொண்டோம்.
மாரி செல்வராஜின் மற்ற படங்களும் சரி தீபாவளிக்கு வெளிவந்த பைசன் -காளமாடன் படமும் சரி அதிர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கக் காரணம் நமது சமூகத்தின் கறையைச் சமரசமில்லாமல், வெளிப்படைத்தன்மையோடு சுட்டிகாட்டுகிறது. உண்மை எப்போது நமக்கு கலக்கத்தையும் பின்பு கலகத்தையும் ஏற்படுத்தும். புக்கர் பரிசு பெற்ற மாபெரும் போராளி அருந்ததிராய் சொல்வார், கலை என்பது சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்த வேண்டும். மாறாக மயிலிறகால் வருடிக்கொண்டிருப்பதல்ல.
ட்யுட், டீசல் போன்ற படங்களும்தான் வந்தன. ஆனால் அவற்றைப் பற்றி நாம் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவை உண்மையை உரக்கப் பேசவில்லை, அல்லது உண்மையை உண்மையாகச் சொல்லவில்லை என்பதுதான். பல நாடுகளில் புரட்சி இளையோரால் முன்னெடுக்கப்படுகிறது. கலகங்கள் இளையோரால் மட்டுமே சாத்தியம். இங்கே சாராயமும் சாதியமும் ஆள்பவர்களாலே வலிந்து திணிக்கப்படுவதால் கழகங்கள் கலகம் இல்லாமல் தெளிவாக இருக்கின்றன.
இன்னும் தமிழருக்கென்று அரசியல் இருக்கிறதா என்று விவாதத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட யாருக்குப் போட்டால் வெற்றி பெறுவார்கள் என்று வியாக்கியானம் பேசிக்கொண்டிருக்கிறோம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தேர்தலுக்கு முந்திய நாள் 2000 ரூபாய் கொடுத்தால் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையை ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கிறோம். கொள்கை இல்லாத நடிகருக்காக நடுரோட்டில் ஏங்கிக் காத்துக்கொண்டு ஏக்கப்பெருமூச்சு விடுகிறோம். ஏழைகளின் நிலையை அறியாத கூத்தாடிகளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஏனெனில் தமிழர்கள் என்ற இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு என்று கவிஞர்கள் பாடியதை எங்கோ யாருக்கோ பாடியிருக்கிறார் என்று சுகமாக மறந்துவிட்டோம். ஆனாலும் பல இளையோர் தீவிர நம்பிக்கையோடு பயணிக்கிறார்கள். பல்லுயிர்க்குமான அரசியலை, சமத்துவ அரசியலை மாற்றத்தை முன்னெடுக்கிறார்கள். நாய்கள் குரைத்தாலும் ஒட்டகவரிசைகள் தங்களின் நிறைபொதிகளுடன் பயணத்தைத் தொடரும். மூளையற்ற வீணர்களின் தலையற்ற தற்குறிகளின் வாய்ச்சொல்லில் விழுந்துவிடாது தொடர்ந்து கலகம் நடக்க வேண்டும், நாம் நடத்த வேண்டும்.

