Tuesday, 9 June 2020

கோயில்கள் திறந்திருக்கின்றன

இந்த ஆண்டு அனைவருக்கும் அற்புதமான ஆண்டு
சனிபகவான் ஜனவரி மாசத்துல பெயர்ச்சியாகிறார்
அவர் தம் சொந்தவீட்டுக்குப்போய் 
ராசிக்கு ஆறாம் இடத்தில உக்காரதுனால
நோய் நொடியெல்லாம் தீரும் என்று குதூகளித்த
குங்குமப்பொட்டுக்காரர் குடும்பத்தோடு எஸ்கேப்.
எல்லா அருளும் வந்து சேரும் என
வாக்குத்தத்தம் சொன்ன அல்லேலூயாக்காரர்
இப்போதெல்லாம் ‘உலகம் அழியப்போகிறது’ என்று
தோசையைத் திருப்பிப் போடுகிறார். 
பகுத்தறிவை அடகு வைத்துவிட்டு
தெருவில் கிடக்கும் கூமுட்டையானோம். 

குருக்களும் கோயிலும் மட்டுமே கிறித்தவம் இல்லை என
ஆண்டவருக்குப்பிறகு கொரோனா
அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
ஆவியிலும் உண்மையிலும் எப்போது வழிபடப் போகிறோம்?
பசியோடிருப்பவர்களை பரிதவிக்கவிட்டுவிட்டு
பகட்டுக்காக ஆலயம் அமைத்தவர்களின் முகத்தில் 
இதயத்தில் ஆலயம் வடித்த பூசலாரின் எச்சில் வடிகிறது.
கல்லுடைப்பவரிடம் கடவுளைப் பார்க்கச் சொன்ன தாகூர்
நூறாண்டுகளாக தாடியைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்.
திருஅவை தம்மைத் திருத்திக்கொள்ளும் நேரமிது.
இனிவரும் காலம் இறந்தகாலம் போல் அல்ல.
குழந்தைப்பருவம் முடிந்தது 
வயதுக்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டன.
பக்குவப்பட்ட இறைநம்பிக்கையோடு 
வாழ்வையே வழிபாடாக்கவேண்டிய கட்டத்தில் நிற்கிறோம்.
படைப்பில் பரமனைத் தரிசிக்காதவருக்கு
பரலோகப்பாதை அடைபட்டுவிட்டது.
எல்லாம் மாறிக்கொண்டிருக்கின்றன.
மாற்றிக்கொள்ள பயப்படுபவர்கள் 
கழுத்தில் மாலையிட்டுக்கொள்ளவும்
மயானம் தயாராகவே இருக்கிறது.

மூட்டை முடிச்சுகளை முதுகில் ஏற்றி
முகம் மறைக்கக்கூட கவசம் இன்றி
வியர்வையும் இரத்தமும் சிந்த
ஆயிரம் மைல்கள் நடந்த அபலைகளில்
ஆண்டவரின் சிலுவைப்பயணம் தெரிந்திருந்தால்
நீயும் பக்குவப்பட்ட கிறிஸ்தவனே.
கோயில்கள் திறந்திருக்கின்றன
அவற்றிற்கு கதவுகளே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

No comments:

Post a Comment