Sunday, 28 June 2020

இப்படியும் இருக்கிறார்கள்

பாய்போ போரிசோவ் - பல்கேரிய பிரதமர்
சர்ச்சுக்கு போகும் அவசரகதியில் 
முகக்கவசம் போடவில்லை.
அதெப்படி பிரதமர் சட்டத்தை மீறலாம்?
அபராதம் 174 டாலர்.
சுகாதாரத்துறை அமைச்சர் சுளுக்கெடுத்திருக்கிறார்.

பென்னிக்ஸ்க்கு மூச்சுத்திணறல்
ஜெயராஜ்க்கு நெஞ்சுவலி
‘பழனி’ பஞ்சாமிர்தம்.
அப்புறம் ஏன்யா அரசு வேலையும் நிவாரணமும்?
செல்லாத்தா உன் புருசன் காய்ச்சல்லதானே செத்தாரு
சிபிஐ விசாரனை கேக்கலாமா?
‘இரட்டை’யர்களிடம் நாம் படும்பாடு இருக்குதே
முடியலடா ‘மொட்டை’ச்சாமி.

Tuesday, 9 June 2020

கோயில்கள் திறந்திருக்கின்றன

இந்த ஆண்டு அனைவருக்கும் அற்புதமான ஆண்டு
சனிபகவான் ஜனவரி மாசத்துல பெயர்ச்சியாகிறார்
அவர் தம் சொந்தவீட்டுக்குப்போய் 
ராசிக்கு ஆறாம் இடத்தில உக்காரதுனால
நோய் நொடியெல்லாம் தீரும் என்று குதூகளித்த
குங்குமப்பொட்டுக்காரர் குடும்பத்தோடு எஸ்கேப்.
எல்லா அருளும் வந்து சேரும் என
வாக்குத்தத்தம் சொன்ன அல்லேலூயாக்காரர்
இப்போதெல்லாம் ‘உலகம் அழியப்போகிறது’ என்று
தோசையைத் திருப்பிப் போடுகிறார். 
பகுத்தறிவை அடகு வைத்துவிட்டு
தெருவில் கிடக்கும் கூமுட்டையானோம். 

குருக்களும் கோயிலும் மட்டுமே கிறித்தவம் இல்லை என
ஆண்டவருக்குப்பிறகு கொரோனா
அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
ஆவியிலும் உண்மையிலும் எப்போது வழிபடப் போகிறோம்?
பசியோடிருப்பவர்களை பரிதவிக்கவிட்டுவிட்டு
பகட்டுக்காக ஆலயம் அமைத்தவர்களின் முகத்தில் 
இதயத்தில் ஆலயம் வடித்த பூசலாரின் எச்சில் வடிகிறது.
கல்லுடைப்பவரிடம் கடவுளைப் பார்க்கச் சொன்ன தாகூர்
நூறாண்டுகளாக தாடியைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்.
திருஅவை தம்மைத் திருத்திக்கொள்ளும் நேரமிது.
இனிவரும் காலம் இறந்தகாலம் போல் அல்ல.
குழந்தைப்பருவம் முடிந்தது 
வயதுக்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டன.
பக்குவப்பட்ட இறைநம்பிக்கையோடு 
வாழ்வையே வழிபாடாக்கவேண்டிய கட்டத்தில் நிற்கிறோம்.
படைப்பில் பரமனைத் தரிசிக்காதவருக்கு
பரலோகப்பாதை அடைபட்டுவிட்டது.
எல்லாம் மாறிக்கொண்டிருக்கின்றன.
மாற்றிக்கொள்ள பயப்படுபவர்கள் 
கழுத்தில் மாலையிட்டுக்கொள்ளவும்
மயானம் தயாராகவே இருக்கிறது.

மூட்டை முடிச்சுகளை முதுகில் ஏற்றி
முகம் மறைக்கக்கூட கவசம் இன்றி
வியர்வையும் இரத்தமும் சிந்த
ஆயிரம் மைல்கள் நடந்த அபலைகளில்
ஆண்டவரின் சிலுவைப்பயணம் தெரிந்திருந்தால்
நீயும் பக்குவப்பட்ட கிறிஸ்தவனே.
கோயில்கள் திறந்திருக்கின்றன
அவற்றிற்கு கதவுகளே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

Friday, 5 June 2020

கன்னங்கரேருன்னு…

கறுப்பு அசிங்கம் என காலங்காலமாய் புழுகிப்புழுகி
கடவுள் உருவம் ஒன்றுகூட
கறுப்பாய் பார்த்ததில்லை நான்.
கறுப்பும் வெறுப்பும் சேர்ந்தே பயணிக்கின்றன.
வெளுத்தவர் மட்டுமே வாழமுடிகிறது எங்கும்
கறுத்தவர் கடைநிலையினர்தான் இங்கும்.
செவ்விந்தியரின் அமெரிக்காவுக்கு
வெள்ளையர்களும் வந்தேறிகளே.
கறுஞ்சாலையில் காலில் அகப்பட்டு
காவு வாங்கப்பட்டார் ஜார்ஜ் பிளாய்ட்
“மூச்சு முட்டுகிறது” என்று முனகினார்
கத்தினார், கெஞ்சினார், அப்புறம் மூர்ச்சையானார்.
நிறவெறியின் அழுத்தம் காலில் இருந்தது.
எல்லை மீறினால் எதுவும்
வெடித்துச் சிதறும் என்பது விதி.
மொத்த நாடும் பற்றி எரிகிறது. ஆனால்
‘வெள்ளை’மாளிகையின் அதிகாரச்சவுடால் மட்டும்
அவரிடம் வேகவேயில்லை.
இராணுவத் தளபதி மார்க் மில்லி
தெளிவாக இருக்கிறார்.
அவரிடம் குண்டுகள் மட்டுமல்ல
“பந்துகளும்” இருக்கின்றன.

மலப்புரத்தில் கறுப்பு யானை செத்துக்கிடக்கிறது.
புழுக்களிடையே மதத்தைத் தேடுகின்றன
மதம்கொண்ட  காவிக் காட்டுயானைகள்.
அதற்கு முட்டுக்கொடுக்கிற எச்சைகள்
ஆண்மையற்று கிடக்கும் இரட்டை இலைகள்.
வெள்ளையனைவிட வெளுத்த தயிர்க்காரன்
விசம் கொண்டவன் என்றுரைத்த
கறுஞ்சட்டை தாடிக்காரர் ஞானிதான்.
கறுப்பு மட்டுமே வெறுப்பை வீழ்த்த முடியும்.
நீயோ 14 நாட்களில் சிவப்பழகு பெற
ஃபேர் அன்ட் ஹேன்ட்சம் அப்பிக்கொண்டிருக்கிறாய்
‘தாமரை’ ‘இலை’யிலேயே குத்திக்கொண்டிருக்கிறாய்.
நாசமாப்போச்சு எல்லாம்.

செ. ஜெயன்