Thursday, 23 April 2020

உலக புத்தக தினம் - (ஏப்ரல் 23)


1931 மார்ச் 23, நிசப்தமான லாகூர் சிறையை
இருள் தின்று மென்றுகொண்டிருந்தது. 
மன்னிப்பு கடிதம் மறுக்கப்பட்டது.
மந்திரம் சொல்லச்சொன்ன தோழனின் வார்த்தை 
முந்திச் சேருமுன்னே வழியில் இறந்தது.
பகத்சிங்கின் கரங்களில் லெனின் தவழ்ந்தார்.
பைத்தியக்காரன் அவன்; அதனால்தான்
பரிபூரண மகிழ்ச்சியில் தொங்கினான்.
பறக்கும் பட்டாம்பூச்சியாய் அல்ல
புத்தகப்புழுவாய் இருப்பதிலும் பெருமைதான்.
புத்தங்களே உலகைப் புரட்டிய நெம்புகோல்.
உலகைச் சீரமைத்த செர்மானிய தாடிக்காரனும்
இந்தியாவைக் கட்டமைத்த கருப்புக் கோட்டுக்காரரும்
புத்தக வாசனையில் குடிபுகுந்தவர்கள்.
“நேரமில்லை” என்பது அறிவிலிகளின் அருள்வாக்கு.
வாரன் பப்ஃபெட் தினசரி 800 பக்கம் 
பில்கேட்ஸ் வருடத்திற்கு 50 புத்தகம்
மார்க் சுக்கர்பெர்க் இரு வாரத்திற்கு ஒரு புத்தகம்
மிகப்பெரும் அதிபர்கள் அதிகம் வாசிப்பவர்கள்.
அதிபராகும் ஆசை மட்டும் போதாது
அதிகம் வாசிக்கும் ஆளுமை தேவை.
அறிவை விரிவுசெய், அகண்டமாக்கு
விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை.

தலைவனுக்கு புத்தகமே தலையணை.


Wednesday, 22 April 2020

உலகப் புவி தினம் - பொன்விழா ஆண்டு (1970-2020)

மண் உருண்ட மேல மனுசயப்பய ஆட்டம் பாரு
நெஞ்சுரத்தோடு பாடுகிறேன்.
மனுசப்பய ஆட்டத்தால் மலடாகிப்போனது
மண் மட்டுமல்ல, மனிதனும்தான்.
அழகான உலகம் தந்த ஆண்டவனையே
அசந்தால் ஆட்டையப்போட்டு காசாக்குபவன் 
வளம் கொழிக்கும் புவியையா விட்டுவைப்பான்?
யாதும் ஊரே யாவருங் கேளிர் என 
எல்லையற்று வாழ்ந்த எம் முப்பாட்டன் மனதில்
எள்ளளவும் வஞ்சம் இல்லை.
என்னுடையதென்ற நஞ்சும் இல்லை.
கைப்பிடி மண்ணை உருவாக்க முடியாதெனினும்
கழிவாக்க மட்டுமே கல்வி பயன்பட்டிருக்கிறது
நாசமாய்ப் போகட்டும் நம் கல்விமுறை.
பின்வரும் தலைமுறை பற்றிக் கவலையில்லாதவன்
திருமணம் தவிர்ப்பதே புண்ணியம்.
நிலாவில் புடுங்கியது போதும் 
நிலத்தில் புடுங்குவோம் களையை - நம்
மனத்தில் வளர்த்த பிழையை.
மண் அழுக்கல்ல, அழகு.
நம் தாயும் தாய்நிலமும்
அழுக்காய் இருப்பினும் அழகே.

Monday, 20 April 2020

உப்பு போட்டுத்தானே சாப்பிடுகிறோம்!

உப்புக்கான யாத்திரையில் உயிர் இருந்தது.
உறங்கிப்போன எதிர்ப்புக்குரலை உசுப்பிவிட்டது.
தண்டியை அடைந்த கிழவனின் தடி
தடுக்கிவிழுந்தது இன்று
தலையெழுத்து அழிந்துபோன
உள்நாட்டு அகதிகளின்
களைப்புற்ற பயணங்களில்.
கொரோனாவைக் கொன்றுவிட
முடிவெடுத்த முட்டாள் அரசனுக்கு
கொலைப்பட்டினியில் கொத்தாகச் சாவானே எனும்
உண்மை தெரியவில்லை.
ஊர்ஊராக மேஞ்சவனுக்கு எப்படித் தெரியும்?
அடங்கிக்கிடந்தால் அரைவயிறும் நிரம்பாதே
எப்படியாவது ஊர்போய்ச் சேர்ந்தால்
ஒருவேளையாவது உருப்படியாகச் சாப்பிடலாம் என
தேசம் கடக்கும் ஏழையர் எத்தனை பேரோ.
ஒடுங்கிய வயிறை ஆசுவாசப்படுத்தினாள்
அப்படிப்பட்டோரில் ஒருத்தி சிறுமி ஜமோலா.
நூறுமைல் தூரம்… அந்தாப் போயிடலாம் என
அங்குலம் அங்குலமாக நடந்திருப்பாள்.
மாரத்தான் எல்லாம் மானங்கெட்டவனின் விளம்பரம்.
வயிற்றுக்குப் புரியுமா மூளையின் ஆறுதல்?
வழியிலேயே கொன்றுவிட்டோம் நாம்.
பரிசோதித்த டாக்டர் சொன்னார்:
“நல்லவேளை இவளுக்குக் கொரோனா இல்லை.”
அதுசரி! கோரொனாவைக் கொன்ற டாக்டர்களை
செத்தபின்னும் கொல்லும் தேசம்தானே இது.
கைதட்டி விளக்கேற்றி வாழ்த்து தெரிவிப்போம்.

(தெலுங்கானாவில் மிளகாய் பண்ணையில் வேலை செய்த 12 வயது சிறுமி 100 கிலோமீட்டர் தூரம் நடந்து தனது சொந்த ஊரான சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூருக்கு வந்தபோது சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாள். - இன்றைய செய்தி)