வாங்குறவங்க வாங்கலாம் பேரு சாயிரா வயசு பனிரெண்டு விலை ஆயிரம் ரூபாய். அவ்வளவெல்லாம் தேராது இந்தா ஐநூறு. தள்ளுபடி விலையில் என்னை வாங்கினான் என் தாய்மாமன். ஒரு மாதம் படுத்து படுத்து பாடாய்ப் படுத்தினான். தாகம் தீர்த்துவிட்டு இன்னொருவனிடம் தள்ளிவிட்டான். சதைக்கு ஏற்றவாறு சம்பளம் ஏத்திக்கேட்டான் மாமா. “அவனாவது நல்லா வச்சுக்கனும்” எனது வேண்டுதலை கடவுள் கண்டுகொள்ளவேயில்லை. அதே அடி, அதே அவஸ்தை. அடிமையாகத்தான் இருந்தேன். ஒருவேளை சோத்துக்காக அவனுக்கு என்னை சொர்க்கமாக்கி எனக்கு நானே நரகமாகிப்போனேன். ஆசை முடிந்ததும் அடுத்த ஆள் பார்த்தான். நல்ல விலைக்கு விற்றுவிட்டான். அவரோடு இருந்தது 24 ஆண்டுகள். எனக்கும் அவருக்கும் நாற்பதாண்டுகள் இடைவெளி. நான்காண்டுகள் முன் செத்துப்போனார். வயதாகிப்போனதால் என்னை வாங்க ஆளில்லை. இளமையும் வனப்பும் இருந்த வரையில் காஸ்ட்லியாய் இருந்தேன். இப்போது அடிமாட்டு விலைக்கு வீட்டுவேலை செய்ய விற்கப்பட்டேன். ஒருநாள் சாப்பாட்டுக்கு மட்டும் ஐநூறு ரூபாய் செலவு செய்யும் எனது பேத்தி. ஐநூறு ரூபாய் நோட்டைப் பார்க்கும்போதே நனைந்து விடுகிறது. இந்த ஐநூறு ரூபாயில்தானே எனது கனவும் வாழ்வும் அழிந்தது.
துடைப்பம் எடுத்துப் பெருக்கும்போது நான் புன்னகைப்பதில்லை. எனக்குத் தெரிந்து பெண்கள் பெருக்கும்போது பெருமிதம் கொள்வதில்லை. 'தூய்மை இந்தியா' முதன்முறை துடைப்பம் பிடிக்கும் கைக்கூலிகள் முகத்தில் என்ன சிரிப்பு, என்ன பெருமிதம்.. போட்டோ எடுக்கும் வரையிலும் அட அட.
வெளிநாடு சென்று வந்தவர்கள் வியப்பதும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வெறுப்பதும் 'ஏன் இந்தியா இப்படி இருக்கிறது?' தூசிக்கும் துர்நாற்றத்திற்கும் பழக்கப்பட்டுவிட்ட நம் நாசிகள் ஏன் இப்படி என்று யோசிப்பதில்லை. அசிங்கங்கள் அருவருப்பைத் தராத வகையில் அழகாக கட்டமைக்கப்பட்ட கூறுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதார்த்தங்களும்.
ஒருநாள் கூத்துக்காய் விளக்குமாறு பிடிப்பது பிரதமருக்கு எளிது. பல்லாண்டு தயாரிப்போடு தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் சிறப்பு.
ஆழமாக சிந்திக்கவும் அவ்வப்போது சிரமப்படவும் அனைவரும் தயாராகும் வரையில் 'தூய்மை இந்தியா' ஏக்கப் பெருமூச்சுடன் களைவது நிஜம்.
விருந்தாவனம் விதவைகள் சரணாலயமிது. பராமரிக்கவும் சமாளிக்கவும் சங்கடப்பட்டு பரமன் பார்த்துக்கொள்வான் என பாரம் இறக்கிய பக்திமான்களின் தாய்கள், சகோதரிகள், சொந்தங்கள் இவர்கள். இருப்பதைப் பிடுங்கியபின் தொல்லையின்றி வாழ தள்ளிவிட்ட யமுனை நரகமிது. இங்கிருந்துதான் மோட்சத்துக்கு டிக்கெட் கொடுக்கிறார்கள் என்ற நம்பிக்கை வேறு. மாற்று ஆடையின்றி கொஞ்சம் கிடைக்கும் சோத்துக்காக வயது மறந்து ஓடி வயிறு கழுவும் அபலைகள் சவப்பெட்டியில் ஆயுள் முழுதும் ஆன்மீகச் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இறைபக்தி நிறைந்தவர்கள் அல்ல கோயில்தூண்களைத் துணையாக்கி கரம்கொடுக்க ஆளில்லாது கடவுளே கதி என கிடப்பவர்கள். வாரிவழங்கிய வாழை இலையாய் இருந்தவர்கள் விருந்துண்டபின்னே எறியப்பட்டு குப்பையில் விழுந்த எச்சில் இலைகளாகிப்போயினர். உள்ளம் முழுதும் நிறைந்தபின் பேச வழியின்றி அமுக்கி அமுக்கி கண்கள்வரை வந்துவிட்டதால் கண்ணீராய் வழியும் சோகங்கள். இவர்கள் செத்தாலும் அடுத்தவர் தொடுவதில்லை குப்பையாகவே அள்ளப்படும் நிலை. மாதா, சக்தி, தேவி, மாரி தெய்வங்கள் மட்டுமே இங்கு வாழ முடியும். விதவைகள் சாகக் காத்திருக்கிறார்கள்.