Sunday, 29 June 2014

எங்கோ தவறு நடந்திருக்கிறது



மூன்று ஆண்டுகள் அவரோடு உண்டு உறவாடி
யார் பிரிந்தாலும் நாம் இருப்போம் என்றவர்கள்
கைது நடக்கும்போது ஒருவரைத்தவிர
மற்றவர் ஏன் ஓட வேண்டும்?

நகர்கள் பல சென்று நற்செய்தி அறிவித்த
நண்பர் கூட்டம் கைதுக்குப் பிறகு என்ன ஆனது?
புதுமைகளைக் கண்ட பலரும்
புரட்சி செய்தாவது மனுமகனை மீட்டிருக்க வேண்டுமே.
அப்பம் தின்ற ஐயாயிரம் பேர் எங்கே?

எருசலேம் நகர் இயேசுவுக்குப் புதிதில்லையே
அழுதுகொண்டிருந்த மகளிரின் மணவாளர்கள் எங்கு போனார்கள்?
'சிலுவையில் அறையும்' என கத்திய கூட்டத்தில்
நல்ல மனிதர் யாருமில்லையா?

தூக்க முடியாத சிலுவை
திக்குமுக்காடிச் சுமக்கையிலே
இரத்தம் மறைத்த கண்களில்
நித்தம் கூடிய கூட்டம் நின்றதே
விழுந்தபோது துப்புவதற்குப் பதில்
தூக்கியிருக்கல்லவா வேண்டும்.
மீட்பரை மீட்பதற்கு மனிதர் யாருமில்லையெனில்
மீட்பர் யாரை மீட்டார்?
எதிலிருந்து மீட்டார்?

எங்கோ தவறு நடந்திருக்கிறது.

Friday, 13 June 2014

மீண்டும் மீண்டும் யோசிக்கிறேன்




மீண்டும் மீண்டும் யோசிக்கிறேன்.
யாரையும் சீண்டியதில்லை
வம்பு தும்புக்குப் போனதில்லை.
உதவி தேவையெனக் கண்டால்
கேட்காமலேயே உதவுகிறேன்.
கண்ணெதிரே தவறு நடந்தால்
தட்டிக்கேட்க துணிந்து நிற்கிறேன்.
பொது இடங்களில் எச்சில், குப்பை மட்டுமல்ல
கண்டதும் கிடப்பது கண்டு
கனன்று எழுகிறேன்.
செய்தித்தாள்களில் வன்முறை கண்டு
மனம் நோகிறேன்.

ஒரு வேளை நா
ரொம்ப நல்லவனா இருக்கேனோ?

Tuesday, 10 June 2014

இக்கரைப்பச்சை



வண்டிகள் வரிசையாய்க் காத்திருக்க
விரைந்து வந்த விரைவு வண்டியைப் பார்த்து
'அங்க பாரு ட்ரெயினு' பரவசமாயின பேருந்துகள்.
குழந்தைகளின் குதூகலத்தில்
பெருமையோடு இடம் கடந்தேன் இரயிலில்.
அடுத்த நிலையத்தில் வண்டி நின்றது.
ஒரு மணிநேரம் நகரவேயில்லை.
கிராஸிங்காம்... 
'ச்சே... பேசாம பஸ்லயே போயிருக்கலாம்.'