Friday, 22 November 2013

சர்க்கரையாய் இரு



கோயிலுக்குச் சென்றான் பக்தன் 
திருப்பீடத்தில் பெருமையாக நின்றான்.
வருடம் ஒருமுறை புண்ணியத்தலம் செல்கிறேன்.
பிறந்த நாளில் ஆதரவற்றோர் இல்லம் செல்கிறேன்.
கோயிலுக்குக் கொட்டிக் கொடுத்திருக்கிறேன்.
ஏழைக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன்.
என் குடும்பம் நல்லா இருக்கனும்.

'உதவி செய்பவனாக அல்ல
உதவுபவனாக இரு.
இருப்பதால் கொடுக்கிறாய்
இல்லாதபோதும் கொடு.
காலம் பார்த்து கனிதராது
எப்போதும் இனிக்கும் சர்க்கரையாய் இரு.'
புன்னகையோடு கடவுள் சொன்னார்.

Thursday, 14 November 2013

பால்யப் பருவம்



பட்டனில்லா சட்டைக்குள்ளே 
தட்டு இருக்கும்.
சிட்டுக்குருவிகளிடம் சில நேரம் பேசமட்டும்
பால்வாடி போவேன்.

கீழே போட்டு நெளிப்பெடுத்தபின்
சைக்கிள் டயரில் 
ஊர் சுற்றி வருவேன்.

பனைமர மட்டையின் கவட்டையில்
கால் பதித்து உட்கார்ந்து
கரபுரவென இழுத்துத் திரிவேன்.

இளநுங்கு இரண்டை
குச்சியால் இணைத்து
ஸ்டியரிங்கோடு வண்டி ஓட்டுவேன்.

பனையோலை நறுக்கி
வேலாமர முள் குத்தி
ஆட்டுப்புழுக்கையிட்டு
காத்தாடி சுற்றுவேன்

மஞ்சனத்திப் பழம் பறித்து
கொட்டாங்குச்சியில் இறக்கி
நா கருக்க கடித்திடுவேன்.

மஞ்சள் நிற கண்மாய் நீரில்
கண் மஞ்சளாகும்வரை
நண்பர்களோடு ஆட்டம் போடுவேன்.

மாட்டு வண்டி தென்பட்டால்
புத்தகப்பை தொங்கவிட்டு
நானும் தொங்கி வருவேன்.

கடவுளுக்குக் கருணை காட்டா ஓணான்களை
கருணையின்றி கொலை செய்ய
கம்பெடுத்துப் புறப்படுவேன்.

முள்தைக்கும் ஒத்தையடிப்பாதையிலும்
சூடான தார்ச்சாலையிலும்
செருப்பின்றி நடந்திடுவேன்.

அப்பா கண்ணில் பட்டுவிடாது
வெள்ளிக்கிழமை இரவுகளில்
ஒளியும் ஒலியும் பார்த்திட 
அலைந்திடுவேன்.

நாலரைக்குப் போடப்படும் 
ஞாயிறு படம் பார்க்க
டி.வி இருக்கும் ஒரே வீட்டில்
அரைமணிநேரம் முன்னதாகவே
வரிசையில்  உட்கார்ந்துவிடுவேன்.

களையெடுப்பு கருதருப்பு
கலப்பையிட்டு ஏர் உழுக
அப்பா அம்மாவுக்கு உதவிடுவேன்.

கிட்டி, துட்டு, பம்பரம், தாயம்,
சில்லு, சீட்டு, எறிபந்து, ஐஸ்பான்டு
பளிங்கு, பல்லாங்குழி, குதிரை, நொண்டி
எப்போதாவது கிரிக்கெட் விளையாடுவேன்.

பால்ய நினைவுகள்
நெஞ்சடைத்து நிற்க
எதிர்வரும் எதிர்காலம்
மண்ணிலிருந்து என்னை
அந்நியப்படுத்திவிடுமோ என
அஞ்சுகிறேன்.

Friday, 8 November 2013

மரித்துப்போன இசை

இசைப்பிரியா பார்த்தீரோ?
'அது நான் இல்லை' என்ற
அழுகுரல் கேட்டீரோ?
இச்சையால் உடலை நிறைத்து
மிச்சத்தை என்ன செய்தனரோ?
செத்துக்கிடக்கிறாள்.

பெண்பிள்ளை பெற்றோரே

உம்பிள்ளைக்கிது என்றால்
என் செய்வீர்?
இவள் வயது இளையோரே
உன்னோடு பிறந்தவளின் 
நிலையிது என நினைப்பீரோ?

நள்ளிரவில் ஒரு பெண்ணை

நடுரோட்டில் நான்கு பேர்
வெறிகொண்டு கொன்றதற்கு

நாடே எரிந்ததடா?
'இதோ ஒரு பெண்'
மிருகங்களின் உடல்சூடு தணியப்பட
ஒன்றுமில்லாமையில் உயிர்விட்ட
ஒவ்வொரு பெண்ணும் 
இப்படித்தானே செத்திருப்பாள்.

இந்த இரத்தக் காட்டேறிகளின் 

கெட்ட நாடகத்தை
வேடிக்கை பார்க்கிறோம்.
வேடிக்கையாய்ப் பார்க்கிறோமே.
இதற்கும் வழக்கம்போல் 
பதில்- மௌனம்தானா?


Tuesday, 5 November 2013

ஆதாயமாகும் ஆன்மீகம்


நேர்மையற்று உழைப்பவன் 
உண்டியலில் போடுகிறான்.
நேர்மையாக உழைக்காதவன்
உண்டியலையே போடுகிறான்.
யார் யோக்கியன்?

ஒரே கடவுள்.
வெள்ளி முகமதியனுக்கு
சனி யூதனுக்கு
ஞாயிறு கிறித்தவனுக்கு
செவ்வாய், வெள்ளி இந்துவுக்கு
இதில் எந்த நாள் புனித நாள்?

தோஷம், பிரதோஷம்
அஷ்டமி, நவமி
ராகுகாலம், எமகண்டம்
நல்ல நேரம், கெட்ட நேரம்
நேரம் எப்படி பிரிந்தது?

வானளாவ கோபுரம்
உயரமான சிலைகள்
பகட்டான பீடங்கள்
அங்கம் முழுதும் தங்கம் கொண்டு
ஜொலிக்கும் தெய்வச்சிலைகள்.
ISO தரச்சான்று
வேறென்ன வேண்டும்?
பிரச்சனைகள் நிரந்தரமானதால்
அர்ச்சனைகள் நிரந்தரமாகின்றன.

கோவிந்தா உண்டியல் கோடிகள் விழுங்குகின்றன.
பம்பை நதியில் குபேரன் குளிக்கிறான்.
வேளை நகரில் வெளிநாட்டுக் கரன்சிகள்.
பத்மநாபனின் அறையில் பதுங்கும் டன் தங்கம்.
வழியெங்கும் பிச்சைகள்.
பகட்டான பத்து சதம்
கடவுளை கோடீஸ்வரனாக்கி
நாட்டைக் கடன்காரனாக்கிவிட்டது.

முட்டாள் இந்தியனின் மூடத்தனத்தால்
மதம், வருமானம் தரும் வியாபாரம்.

பக்திப் பெருக்கில் பீடம் எழுப்பி
திருடிக்கொண்டு வந்த தெய்வச்சிலையை
பிரதிஷ்டை செய்து பிழைக்கும்
புன்னியவான்கள் நிறைந்த நாடு இது.

Sunday, 3 November 2013

பெயர்


பெயர்,
சிலருக்கு 
நிஜத்தை மறைக்கவும்
நிழலை ரசிக்கவும்.
சிலருக்கு 
சைன் போடவும் சான்றிதழ் நிரப்பவும்.

விளையாட்டாய் வைத்தவவை
வாழ்க்கை முழுதும் வருகின்றன.
கௌரவப்பெயர்கள் சில நேரம் 
காணாமல் போகின்றன.

சில சிலோகிக்கப்படுகின்றன.
சில ஆராதிக்கப்படுகின்றன.
சில ஞானம் தருகின்றன.
சில சாணம் பெறுகின்றன.

இறந்தபின் இவ்வுலகத்தில்
நாம் இடும் எச்சம் அது.
பெயரில்தான் நமது 
அடையாளமும் ஆளுமையும்

பெயர் - வெறும் சத்தமல்ல
நம் சரித்திரம்.