Tuesday, 6 August 2013

விலக்கப்பட்ட கனிகள்



'நான் நம்புகிறேன் ஆண்டவரே
நீர் மெசியா, இறைமகன்'
பேதுரு மட்டுமல்ல
மார்த்தாவும் சொல்லியிருந்தாள்.
முன்னவர் உயர்த்தப்பட்டார்
பின்னவர் மறைக்கப்பட்டார்.

உயிர்ப்பின் முதல் தரிசனம் பெற்று
'நான் ஆண்டவரைக் கண்டேன்'
என்ற மகதலா மரியா
அதன்பிறகு காணாமலே போய்விட்டாள்.

கிறித்தவத்தின் முதுகெலும்பான
யூத மதமும் கிரேக்க அறிவும்
பெண்ணைப் போற்றியதில்லை.
'அவளுக்கு ஆன்மா இல்லை
அதனால் மீட்பும் இல்லை' என்ற
அகுஸ்தினாரும் அக்குவினாசும்
இறையியலின் இருபெரும் தூண்கள்.
'மனித இனம் பாவத்தில் விழவும் - இயேசு
மானிடமகனாய்ப் பிறந்து இறக்கவும்
காரணமே அவள்தான்' என வாதிட்ட
ஆதித்தந்தையர்களின் கருத்துக்களால் கட்டப்பட்ட
திருச்சபை இது.
கவனமாய்ப் பொறுக்கி எடுக்கப்பட்ட
இறைவார்த்தைகள் வேறு.
சமத்துவம் பேசும் இறைவார்த்தைகள்
சரித்திரத்தைப் பார்த்ததில்லை. 
பாவம்! முடங்கியே கிடக்கின்றன.
அறியாமை கண்டு 
இறைமகன் சிரிக்கிறானா? அழுகிறானா?
குழப்பமே மிச்சம்.

'திரு'ச்சபை
கவனமாய் செதுக்கப்பட்ட பெயரிது.

1 comment:

  1. Thank you for appreciating my artistic picture. Kindly link the source or my name with the picture https://www.flickr.com/photos/17922911@N00/3482180199/

    Kind Regards
    Marina vd B

    ReplyDelete